Header Ads



அமைச்சரவையில் பசில் கூறிய முக்கிய விடயங்கள்...!


அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின் காரணமாக அரசின் செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொவிட் பரவல் காரணமாக கடுமையான பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இந்நிலையில், இவ்வருடத்துக்கு மீண்டெழும் செலவுகளை சமாளிப்பதற்காகவேனும் அவ்வருமானம் போதுமானதாக இல்லை என நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அரசின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடத்தின் மீண்டெழும் செலவீனங்கள் 2694 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், தடுப்பூசி செலுத்தல், சுகாதார துறையின் நடவடிக்கைகளை விஸ்தரித்தல், நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளின் காரணமாக மீண்டெழும் செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அமைச்சரவைக்கு நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த நிறுவன அதிகாரிகள் சுழற்சி முறையில் பணிக்கு அழைக்கப்படும்போது, அவர்களுக்காக வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, கடமைகளுக்காக வருகைதரும் தினங்களுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தும் வகையில் யோசனையொன்றை முன்வைக்குமாறு அமைச்சின் செயலாளர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இரசாயன கிருமிநாசினி இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவது தொடர்பிலும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.