Header Ads



கொவிட் அனர்த்தமும், இலங்கையில் ஜனநாயகத்தின் சரிவும்


கொவிட் நெருக்கடியில் இருந்து பெரும்பாலும் தமது மக்களைப் பாதுகாத்துக்கொண்டு, வெற்றிகரமான பிரதிபலன்களைப் பெற்றுக்கொண்ட நாடுகள் அந்த நிலைமையை அடைந்து கொண்டிருப்பது, அறிவுசார்ந்து, தொலைநோக்குடன் எதிர்கொண்ட காரணத்தினால் ஆகும். 

ஜனநாயக சமூகங்களாக அந்த நாடுகள் குறுகிய அரசியல் இருப்பை மாத்திரம் சிந்தித்து, மக்களுக்கு உண்மையான நிலைமையை மறைத்து செயற்படாமல், அனைத்தையும் வெளிப்படையாக வைத்துக்கொண்டும் உரிய காலத்துக்கு, உரிய முறையில் தைரியமான முடிவுகளை எடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

2021 ஆகஸ்ட் 17ஆம் திகதியில் இருந்து முழு நியூசிலாந்தையும் முடக்கிவிடுவதற்கு பிரதமர் ஜெசிண்டா ஆடேர்ன் தீர்மானித்தது, கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட காரணத்தினாலாகும். தொடர்ந்தும் நியூசிலாந்தை முடக்கியிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் முதன் முதலாக கொரோனா தொற்றிய ஒருவர் அடையாளம் காணப்பட்டது 2021 பெப்ரவரி 28ஆம் திகதியாகும். அவர்கள் மார்ச் மாதம் 25ஆம் திகதி நாட்டை முடக்கிவிட தீர்மானித்தார்கள். தமது பிரஜைகளின் உயிர்களைப் பாதுகாப்பது முதன்மை முன்னுரிமை எனக் கருதி, அதனை அவர்கள் 5 வாரங்கள் வரை தொடர்ந்தார்கள். 

கொவிட் அனர்த்தம் ஏற்ப்பட்ட கடுமையான சந்தர்ப்பமொன்றில் ஜேர்மன் மக்களுக்கு உரையாற்றிய அந்த நாட்டின் அரச தலைவியான என்ஜெலா மேர்கல், தெரிவித்த கருத்து எனக்கு நினைவுக்கு வருகிறது. 

“இந்த சந்தர்ப்பத்தில் இதுதொடர்பாக எடுக்கப்படும் அனைத்து விதமான தீர்மானங்களும், எமது நாட்டின் மருத்துவ நிபுணர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. அரசியல் தலைவர்களான நாம் இந்த தருணத்தில் அவர்களுக்குப் பின்னால் இருக்கிறோம்.”

எனினும், இலங்கை இவ்வாறான சந்தர்ப்பத்துக்கு பதிலளித்த விதத்தை சிந்தித்துப் பாருங்கள். அன்று எமது நாட்டின் மருத்துவ நிபுணர்கள், துறைசார்ந்தோரின் குரலுக்கு செவிதாழ்த்தப்பட்டதா? எமது மருத்துவ சங்கங்களைப் போன்றே, மருத்துவத் துறையுடன் தொடர்புடைய வேறு சங்கங்கள் வெளியிட்ட கருத்துகளுக்கும் செவிதாழ்த்தப்பட்டதா? இலங்கையுடன் தொடர்புடைய, வெளிநாடுகளில் உள்ள மருத்துவ நிபுணர்கள் இது தொடர்பாக மேற்கொண்ட எச்சரிக்கைகளுக்கு செவிதாழ்த்தப்பட்டதா?


எமது எதிர்க்கட்சித் தலைவர் 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்தும் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் அரசாங்கத்துக்கு இந்த அனர்த்தம் தொடர்பாக முன்கூட்டியே எச்சரித்துக்கொண்டிருந்தது எனது நினைவுக்கு வருகிறது. கொவிட் தொற்றின் அபாயம் அது தொடர்பான முதலாவது எச்சரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் 2020 ஜனவரி 24 ஆம் திகதி விடுத்தார். 

விமான நிலையம் மற்றும் துறைமுகம் மூலம் கொரோனா தொற்று இலங்கைக்கு வர முடியும் என்று அவர் சிவப்பு சமிக்ஞை காட்டினார். அரசாங்கம் அதன் அபாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து வந்தது. மீண்டும் பெப்ரவரி 5 ஆம் திகதி, விமான நிலையத்தின் ஊடாக நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் ஊடுருவாமல் இருப்பது தொடர்பாக உறுதியளிக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியபோது, பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தேவையான அனைத்து பரிசோதனைகளையும் உள்நுழையும் போது மேற்கொள்ளப்படும் என்று பதிலளிக்கப்பட்டது. அதிலிருந்து சில தினங்களின் பின்னர் நோய்த் தொற்றுக்குள்ளான சீன பெண் மற்றும் சுற்றுலா வழிகாட்டி அடையாளம் காணப்பட்டனர். அதன் பின்னர் முகக் கவசம், தடுப்பூசி ஏற்றம், தேவையான மருந்து வகைகளை முன்னதாகவே கொண்டுவருவதற்கான தேவை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்களின் தேவைகளுக்காக தயாராகுவது போன்ற விடயங்களை சுட்டிக்காட்டிய போது, பொய்யாக பயம் காட்ட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் ஏளனம் செய்ததும் என் கண்முன்னே வருகிறது. 


உரிய காலத்துக்கு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்காததன் விபரீதத்தை ஒரு நாடாக இன்று நாம் முகங்கொடுக்கிறோம். இன்றாகும் போது (ஆகஸ்ட் 23) ஒரு நாளில் கொவிட் காரணமாக உயிரிழப்பவர்களில் ஆசியாவின் அதிகூடிய விகிதத்தை இலங்கை பதிவு செய்துள்ளது. அது, ஒரு மில்லியனுக்கு 8.5 வீதம் என்ற அடிப்படையிலாகும். இவ்விடயத்தில் உலகின் மிக மோசமான நாடுகளிடையே இலங்கை நான்காவது இடத்துக்கு வந்துள்ளது. எமக்கு முன்னதாக மோசமான நாடுகளாக இருப்பது, முதலாவதாக தென் அமெரிக்காவின் டொமினிகா அரசும், இரண்டாவதாக ஐரோப்பாவின் ஜோர்ஜியாவும், மூன்றாவதாக ஆபிரிக்காவின் எஸ்விட்னி இராஜ்ஜியமும் ஆகும். (இந்த தரவுகளை நான் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் Our world in data என்ற மூலாதாரத்தில் இருந்து பெற்றுக்கொண்டேன்.)

மதத் தலைவர்களின், சிவில் அமைப்புகளின், மருத்துவ துறை நிபுணர்களின் மற்றும் உரிய துறைசார் அமைப்புகளின் எச்சரிக்கைகளை கவனத்தில் எடுக்காது தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கான வேட்புமனு கோருவதற்காக தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், இறுதியாக வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நாட்டை முடக்கிவிட நேர்ந்தது.  

கொவிட் அனர்த்தம் உயர் நிலையை அடைந்திருந்த நிலையில், மக்களின் கருத்துகளை முன்வைக்க இடமளிக்காமை மற்றும் அதுதொடர்பாக அமைதியான ஆர்ப்பாட்டங்களும், கொவிட் அனர்த்தத்தைக் காரணம் காட்டி, அடக்குமுறைகளின் ஊடாக அரசியலமைப்பின் 20ஆவது சீர்திருத்தம் மற்றும் துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தை அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுத்தனர். 

நாட்டில் ஏற்பட்டிருந்த அபாயகரமான கொவிட் நிலைமைக்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான சட்ட திட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைப்பதைவிட அவசரமாக அரசாங்கம் மேற்படி சட்டங்கள் இரண்டையும் நிறைவேற்றிக்கொண்டது.  

மக்கள் கருத்துக்களை முன்வைக்க இடமளிக்காது அரசாங்கம் அவசரமாக நிறைவேற்றிக்கொண்ட இந்த சட்டங்கள், எமது நாட்டின் இறைமைக்கு, சட்டத்தின் ஆட்சிக்கு மற்றும் எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பல்வேறு தீங்குகளையும் ஏற்படுத்திவிட்டன. 

துறைமுக நகர சட்டத்தின் பிரிவுகளை சவாலுக்கு உட்படுத்தி இறையாண்மைக்கு, சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்படுத்தும் மோசமான தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி மற்றும் சிவில் அமைப்புகள் மூலம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாக சட்டத்துக்கு 25 திருத்தங்களை சேர்க்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதில் 2/3 வாக்களிப்பு அல்லது பொதுமக்கள் கருத்துக் கோரல் இன்றி, நிறைவேற்றிக்கொள்ள இடம் கிடைத்தது. வழக்குத் தீர்ப்பின் பின்னர் விவாதத்துக்கு எதிர்க்கட்சி சில நாட்களைக் கேட்ட போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் விவாதத்தை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தி, சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் அதன் பலத்தைப் பயன்படுத்தி செயற்பட்டதைப் பார்க்க முடிந்தது. 


உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் ஜனநாயகத்தை இழந்துள்ளது, இராணுவப் புரட்சி மற்றும் கலகங்களால் மாத்திரம் அல்ல. மெது மெதுவாக, படிமுறை ரீதியாக ஜனநாயகத்தின் இருப்பை முடிவுக்கு கொண்டுவந்து, இதுபோன்ற செயற்பாடுகள் மூலம் சர்வாதிகாரம் தலைதூக்கிய சமூகத்தில் நாம் எமது வாழ்நாளில் கடந்த தசாப்தங்களில் கண்டுள்ளோம். சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை இழந்த சமூகங்களில் மக்கள் இன்று முகங்கொடுத்துள்ள நிலைமை மற்றும் உரிய சந்தர்ப்பங்களில் முன்னோக்கி வராமையின் காரணமாக இன்று அவர்கள் சங்கடப்படும் விதம் எங்களுக்கு மிகப் பெரிய பாடத்தைப் புகட்டுகிறது.  

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் 2020 ஏப்ரல் மாதத்தில் மேற்கொண்ட எச்சரிக்கை இங்கு எனது நினைவுக்கு வருகிறது. 

“கொரோனா நெருக்கடி மனித உரிமைகள் தொடர்பான நெருக்கடியாக வேகமாக மாறி வருகிறது. அது இந்த அனர்த்தத்தை காரணமாக வைத்து தொற்று நோயுடன் தொடர்புபடாத விடயங்களிலும் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனாலாகும்.”

இதற்கிடையே “Dimocracy Under Lockdown” என்ற பெயரிலான Freedom House வெளியீடு உலகின் ஜனநாயக சமூகத்தில் ஜனநாயகத்தின் இருப்புக்கு கொவிட் அனர்த்தம் ஏற்படுத்தியுள்ள மோசமான தாக்கங்கள் குறித்து இவ்வாறு அறிக்கையிட்டுள்ளது.  

“கொரோனா அனர்த்தத்தின் தாக்கத்துடன் 80 நாடுகளில் ஜனநாயகத்தின் இருப்பு தொடர்பான நிலைமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் மிகத் தாழ்ந்த மட்டத்துக் வீழ்ந்துள்ளது.”

இன்று நாம் இலங்கையிலும் கொவிட் தொற்று நோயைக் காரணம் காட்டி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதையும் ஜனநாயக சமூகம் ஒன்றின் இருப்பை இழக்கச் செய்வதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கடந்த சில தினங்களில் எமது சில நீதிமன்ற நீதவான்கள் பிரஜைகளின் உரிமைகளுக்காக வழங்கியுள்ள தைரியமான சில தீர்ப்புகள் இந்த நாட்டின் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை தொடர்பாக 20 ஆவது திருத்தத்தின் பின்னர் ஏற்பட்ட நிலைமையினுள் ஓரளவு எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்தியுள்ளது தெரிகிறது.  

எவ்வாறாயினும், பிரஜைகளின் உரிமைகளுக்காகவும், ஜனநாயக முறையின் இருப்புக்காகவும், ஏனைய அனைத்து வேறுபாடுகளையும் ஒருபுறம் தள்ளி, கோத்திரவாதங்களுக்கு செல்லாமல், ஜனநாயகத்துக்கான அணியாக, அதன் நோக்கங்களுக்காக அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து, இந்த சர்வாதிகார போக்குகளைத் தோற்கடிக்க வேண்டும்.

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் Mp

No comments

Powered by Blogger.