Header Ads



அரசிடமிருந்து மாதாந்தம் கொடுப்பனவை பெறுவோர் 2000 ரூபா கொடுப்பனவிற்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள்


கொரோனா தொற்று பரவலால் நாடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாத குடும்பங்கள் மாத்திரம் இந்த கொடுப்பனவை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது.

அதற்கமைய, அரச ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், சமுர்த்தி பயனாளிகள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர், ஊனமுற்றோர் அடங்கலாக அரசிடமிருந்து மாதாந்தம் கொடுப்பனவை பெறுவோர் 2000 ரூபா கொடுப்பனவிற்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள் என ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

கொடுப்பனவை வழங்குவதற்குரிய மேலதிக நிதியை திறைசேரியூடாக மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு, கிராமிய குழுக்களின் ஒத்துழைப்புடன் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சேவையாற்றும் அதிகாரிகளூடாக, சுகாதார விதிமுறைகளின் கீழ், பயனாளர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளது.

கொடுப்பனவை பெற்றுக்கொண்டதாக பயனாளர்களினால் உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களும் அவசியம் என மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றுநிரூபத்தினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வாழ்வாதாரத்தை இழந்துள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கான கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.


இதற்காக 467 மில்லியன் ரூபா திறைசேரியூடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.