Header Ads



ஆப்கானிஸ்தானின் 2 ஆம் பெரிய நகரை கைப்பற்றியது தாலிபன் - தமது பணியாளர்களை மீட்க 3000 படையினரை அனுப்பும் அமெரிக்கா


- BBC -

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த நகரம் முன்பொரு காலத்தில் தாலிபன்களின் வலுவான கோட்டையாக திகழ்ந்தது. மேலும் முக்கிய வணிக சந்திப்பாக இருப்பதால் கேந்திரிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாகவும் இந்நகரம் உள்ளது.

வியாழனன்று பல நகரங்களை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அமெரிக்க தூதரகத்திலிருந்த பணியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்ற 3000 படையினரை ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் பொது மக்கள் சுமார் 1000பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவிக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வன்முறைகளுக்கு பயந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். கிட்டதட்ட இந்த வாரம் மட்டும் 72 ஆயிரம் குழந்தைகள் அடைக்கலம் தேடி தலைநகர் காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதில் பலர் வீதிகளில் உறங்குவதாக சேவ் தி சில்ரன் என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இப்போது சண்டை ஏன்?

இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு தாலிபன்களின் அரசு புகலிடம் தருவதாகக் கூறி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.

வெளிநாட்டுப் படைகளின் இருப்பால் தாலிபன்கள் கை ஓங்காமல் இருந்தது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன.

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன்கள் கைப்பற்றி வருகிறார்கள்.

இரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனான எல்லைச் சாவடிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளர்.

எல்லைச் சாவடிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு உள்ளேயும் வெளியேயும் வரும் வாகனங்கள் கொடுக்கும் கலால் வரி மூலம் தாலிபன்கள் பெருமளவு பொருள் ஈட்ட முடியும் இந்த அமைப்பு எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளையும் கைப்பற்றியுள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.