Header Ads



அஸாத் சாலி விரைவில் நலமுடன், வீடு திரும்புவார் என உறுதியாக நம்புகின்றோம் - NUA


எமது கட்சியின் தலைவர் அஸாத் சாலி தற்போது எதிர்நோக்கி உள்ள நெருக்கடியான நிலையில் இருந்து விரைவில் பூரண தேக ஆரோக்கியத்துடன் மீண்டு வர வேண்டும் என முதலில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். அஸாத் சாலியின் விடயம் தற்போது உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டின் நீதித்துறை மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது. அண்மைக் காலங்களில் பல்வேறு விடயங்களில் உச்ச நீதிமன்றம் பாரபட்சமற்ற தனது தீர்ப்புக்கள் மூலம் தனது நம்பகத் தன்மையை நிலைநாட்டி உள்ளமை இங்கு நினைவூட்டத்தக்கதாகும். அந்த வகையில் அஸாத் சாலி விடயத்திலும் உச்ச நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு தனது கடமையை சரிவரச் செய்யும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

அஸாத் சாலி ஏன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர். நடுநிலை போக்குடைய ஜனநாயகத்தை நேசிக்கும் பெரும்பான்மை சமூகத்தவர்களும், புத்தி ஜீவிகளும்; கூட, அஸாத் சாலியின் குரல் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்காக மட்டும் அன்றி அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுக்காக இன மத பேதமின்றி ஓங்கி ஒலித்த ஒரு குரல் என்பதை இன்று ஏற்றுக் கொணடுள்ளனர். தொடர்ந்து இந்த நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களும், நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழுகின்றவர்களும், அன்றாட உழைப்பாளிகளும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அவர்களுக்காக அயராது ஒலிக்கும் அஸாத் சாலியின் குரலின் வெற்றிடம் நன்கு உணரப்பட்டுள்ளது.

இன்று பாராளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் பலரும் தமக்கே உரிய பாணியில் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். அதை மறுப்பதற்கு இல்லை. இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் குரலோடு அஸாத் சாலியின் குரலும் தனித்துவமாக ஒலித்தால் அது எவ்வளவு பலம் மிக்கதாக அமையும் என்பதை பலரும் உணரத் தொடங்கி உள்ளனர். விரைவில் அது சட்டபூர்வமாக சாத்தியமாகும் என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம். அதற்காக அன்றாடம் பிரார்த்திக்கின்றோம். நுஆ கட்சியின் ஆதரவாளர்களும் அஸாத் சாலியின் அபிமானிகளும் தொடர்ந்து இந்தப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு நாம் மிக வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

அஸாத் சாலி விரைவில் நலமுடன் வீடு திரும்பி தனது அன்றாட அரசியல் மற்றும் மக்கள் நல பணிகளில் வழமையான சுறுசுறுப்புடன் ஈடுபடுவார் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம். எல்லாம் வல்ல இறைவன் அவருக்காக, எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி கையேந்திய எல்லா மக்களினதும் பிரார்த்தனைகளை ஏற்று நல்ல பதில் தருவான் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

அஸாத் சாலி வீடு திரும்பியதும், அவரோடு இணைந்து அவரின் கரங்களை மேலும் பலப்படுத்த நூற்றுக் கணக்கான மக்கள் எமது கட்சி அலுவலகத்தோடு அன்றாடம் தொடர்பு கொண்டு வருகின்றனர். உங்களின் ஆதரவை ஏற்று பணியாற்ற கட்சியும் அதன் தலைமையும் ஆவலோடு காத்திருக்கின்றது என்ற நல்ல செய்தியையும் நாம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

இந்த நாட்டின் தலைசிறந்த சட்டத்தரணிகள் குழுவொன்று அஸாத் சாலியின் சட்டபூர்வமான விடுதலைக்காக மிகச் சிறந்த முறையில் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். நீதிமன்றத்துக்கு வெளியே அவரின் விடுதலையை வலியுறுத்தி குரல் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சமூக சேவை அமைப்புக்களின் பிரமுகர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் என சகல பிரிவினருக்கும் எமது தலைவர் சார்பாக கட்சியின் மனமார்ந்த நன்றிகளையும் சமர்ப்பித்துக் கொள்கிறோம்.

தேசிய ஐக்கிய முன்னணி  (நுஆ)

No comments

Powered by Blogger.