Header Ads



உடல்கள் மாறி கையளிக்கப்பட்டமை, தொடர்பில் விசாரணை ஆரம்பம்


சிலாபம் மருத்துவமனையில் இருந்து இரண்டு சடலங்கள் உறவினர்களிடம் மாறி கையளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் விபத்தில் சிக்குண்டு சிகிச்சை பெற்று வந்த  ஹொரனை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அதே வைத்தியசாலையில் கல்லீரல் அழற்சியால்  ஆரச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த ஹொரணையை சேர்ந்த நபரின் பிரேத உடல் ஆரச்சிக்கட்டுவ பகுதியிலுள்ள நபர்களிடம் கையளிக்கப்பட்டது. 

சடலத்தை எடுத்துச்சென்றவர்கள் அதனை அடக்கம் செய்துள்ளனர்.

எனினும் விபத்தில் உயிரிழந்த நபரின் உறவினர்களுக்கு கிடைக்கப்பெற்ற சடலம் வேறொருவருடையது என்பதனை ஹொரணையை சேர்ந்த உறவினர்கள் அடையாளம் கண்டதையடுத்து அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன், விபத்தில் பலியான நபரின் சடலத்தை அடக்கம் செய்தவர்கள் தாம்  அடக்கம் செய்தது வேறொருவருடைய சடலம் என்பதனை மரண சான்றிதழ் கிடைக்கப்பெற்றதை அடுத்தே அறிந்துக்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்  சடலங்கள் மாறுப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து, இது குறித்த விபரங்களை காவல்துறையினர் இன்று சிலாபம் நீதிவான் நீதிமன்றில் முன்வைத்தனர்.

இதன்போது அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றில் அனுமதி கோர காவல்துறை தீர்மானித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த மேற்படி இருவரின் உடல் அமைப்புகள் பார்வைக்கு ஒரே மாதிரியாக இருந்தமை சடலங்கள் மாறுபடுவதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.