Header Ads



ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை அதிகாரிக்கு 22 வருட சிறை - அமெரிக்க நீதிமன்றம்


அமெரிக்க ஆப்ரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டை 2020ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்த குற்றத்தில் அமெரிக்கவை சேர்ந்த வெள்ளை இன முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

48 வயது ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தின் மீது, டெரெக் சாவின் என்ற வெள்ளை இன காவல்துறை அதிகாரி முட்டியை மடக்கி அழுத்தி 9 நிமிடங்கள் மூச்சு விடாமல் செய்ததில் உயிரிழந்தார்.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இனவெறி மற்றும் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன.

45 வயது செளவின் மீது கொலை குற்றமும், பிற குற்றங்களும் சுமத்தப்பட்டிருந்தன. செளவின் வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியை வைத்திருப்பதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது ஜார்ஜ் ஃப்ளாய்டின் சிவில் உரிமையை மீறிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஃப்ளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் ஃப்ளாய்ட், "காவல்துறையினரின் அட்டூழியம் தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட்டது என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது இருப்பினும், மேலும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பு பொருத்தமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்கு முழு விவரங்களும் தெரியாது என ஒப்புக் கொண்டுள்ளார்.

வழக்கு விசாரணையின்போது, ஜார்ஜ் ஃப்ளாய்டின் சகோதரர், காவல்துறை அதிகாரி சாவினுக்கு அதிகபட்ச தண்டனையாக 40 வருட சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

"ஏன்? நீங்கள் என்ன நினைத்து இதை செய்தீர்கள்? எனது சகோதரரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தும்போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?" என ஃப்ளாய்டின் சகோதரர் வினவினார்.

வீடியோ பதிவு மூலம் தோன்றிய ஃப்ளாய்டின் ஏழு வயது மகள் கியானா, அவரின் தந்தையை அவர் மிகவும் நேசித்ததாகவும் அவரின் பிரிவை உணருவதாகவும் தெரிவித்தார்.

"நான் அவரை பற்றி எல்லா நேரமும் கேட்டுக் கொண்டிருந்தேன். எனது அப்பா எப்போதும் எனக்கு பல் துலக்க உதவுவார்" என்று தெரிவித்திருந்தார் அந்த ஏழு வயது சிறுமி.

இந்த வழக்கு சமுதாயத்துக்கும், நாட்டிற்கும் மிகுந்த வலியை கொடுக்க கூடியது, ஃபிளாய்டின் குடும்பத்தினருக்கு வலி மேலும் அதிகம் என நீதிபதி தெரிவித்தார்.

"இந்த தீர்ப்பு உணர்ச்சிவயப்பட்டோ அல்லது அனுதாபப்பட்டோ வழங்கப்படவில்லை அதே நேரம் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தால் பெருந்துயரில் இருக்கும் குடும்பங்களின் வலி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை கூறிக்கொள்கிறேன்" என நீதிபதி பீட்டர் கஹில் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதியன்று, மின்னியாபோலிஸ் நகரில் மளிகைக் கடை ஒன்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் 20 டாலர் கள்ள நோட்டு ஒன்று தந்ததாக வந்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க காவல் துறையினர் வந்துள்ளனர்,

காவலர் அவரை நெருங்கியபோது ஜார்ஜ் ஃப்ளாய்ட் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.

அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட "காவல் துறையின் பிடியில் இருக்கும்போது, காவலரின் கட்டுப்பட வைக்கும் முயற்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்" என அவரது மரணம் சட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டது.

கைது முயற்சியின்போது 20 முறைக்கும் மேல் ஜார்ஜ் ஃப்ளாய்ட் ''என்னால் மூச்சுவிட இயலவில்லை'' என்று கூறியதுடன், அம்மா, அம்மா என்று அழைத்துக்கொண்டே, ''ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்" என மன்றாடினார்.

அவசர ஊர்தி வந்தபோது அசைவற்றுக் கிடந்தார். ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் டெரெக் சாவின் அழுத்துவது போன்றும் காட்டும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

1 comment:

  1. bad luck for george floyd, if he was srilankan, we will give him bail & soon after select as a MP in the parliment also

    ReplyDelete

Powered by Blogger.