May 18, 2021

நீராவி பிடிப்பது, கொரோனா வைரஸை விரட்டியடிக்குமா..?


உண்மையிலேயே கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நீராவி பிடித்தல் செயலாற்றுகிறதா என்று நுரையீரல் சிறப்பு மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "ஆவி/ வேது/ நீராவி பிடித்தல் மூலம் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க முடியும், வந்த பின்னர் அதை கொல்லவும் முடியும் என்று பரப்பப்பட்டு வரும் இரண்டு கருத்துகளும் முற்றிலும் தவறானவை" என்று கூறினார்.

அப்படியென்றால் நீராவி பிடிப்பதால் எவ்வித பலனுமே இல்லையா என்று அவரிடம் கேட்டபோது, "நீராவி பிடிப்பதால் பலன் உள்ளது. ஆனால், அதற்கும் கொரோனாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அடிப்படையில் ஒருவருக்கு சளித்தொல்லை ஏற்பட்டு மூக்கிலோ நுரையீரலிலோ அது கட்டிப்போய் இருந்தால், நீராவி பிடிப்பதன் மூலம் அதை இளகச் செய்து, பிறகு மற்ற மருந்துகளை கொடுத்து சளியை வெளியேற்ற வாய்ப்புண்டு. அந்த வகையில் பார்த்தோமேயானால், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஒருவருக்கு சளி இருந்தால் அதை கட்டுப்படுத்துவதற்கு நீராவி பிடிப்பது பலனளிக்கலாமே தவிர, அந்த நோய்த்தொற்றை முற்றிலும் வென்றுவிட முடியாது" என்று கூறினார்.

"கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர், பாதிக்கப்படாத மற்ற குடும்பத்தினர் முன்னிலையில் நீராவி பிடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் ஏரோசால் எனப்படும் வளிமக் கரைசல் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்று மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனியே ஓர் அறைக்குள் சென்று நீராவி பிடிப்பதே சரியானது."

நீராவி பிடித்தலால் தீமை ஏதாவது ஏற்பட வாய்ப்புண்டா? சாதாரண சளித்தொல்லைக்காக நீராவிப் பிடித்தாலும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த மருத்துவர் சபரிநாத், "சளியின் தீவிரத்தை குறைக்க உதவும் நீராவிப் பிடித்தலை அளவுக்கு அதிகமாக மேற்கொள்ளும் பட்சத்தில் தீவிரமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

குறிப்பாக, காலை - இரவு என ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் நீராவி பிடிப்பதன் மூலம், நோயாளிக்கு மூக்கில் எரிச்சல் ஏற்படுவது மட்டுமின்றி சுவாசப்பாதையில் தீப்புண் ஏற்படக் கூடும். இதை தவிர்க்க வேண்டுமென்றால், மிதமான சூடுள்ள தண்ணீரில் தைலம், யூகலிப்டஸ் எண்ணெய் உள்ளிட்டவற்றை கலக்காமல் நீராவிப் பிடிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆய்வுகள் கூறுவதென்ன?

நீராவி பிடித்தலை கொரோனா வைரஸுக்கு எதிரான சிகிச்சை முறையாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமோ உலக சுகாதார அமைப்போ இதுவரை அறிவிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோன்று கொரோனா வைரஸுக்கு எதிராக நீராவி பிடித்தலை சிகிச்சையாக கருதுவது ஆபத்தானது என்று ஸ்பானிஷ் குழந்தைகள் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ள நிலையில், இந்த முறையை பின்பற்றிய பலர் தீப்புண் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக பிரிட்டனிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, 'தி லேன்செட்' என்ற சர்வதேச மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ள கட்டுரை ஒன்றில், சாதாரண சளி மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்கு பாரம்பரிய சிகிச்சை முறையாக கருதப்பட்டு வரும் நீராவிப் பிடித்தல் அதை சரிசெய்வதில் பங்கு வகிப்பதாக கூறப்படுவதற்கே வலுவான ஆதாரம் இல்லை என்று கூறுகிறது.

கடந்த ஆண்டு ஐந்து ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்ட அந்த கட்டுரையில், "நீராவிப் பிடித்தல் சளியை இளகச் செய்து, சுவாசப் பாதையை திறந்து, வீக்கத்தை குறைத்து, வைரஸ்களின் பெருக்கத்தை தடுக்கிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் வலிமையற்றதாக உள்ளதுடன், அந்த கூற்று நிரூபிக்கப்படாத கோட்பாடுகளை கொண்டதாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத விடயங்களை அரசு எந்த விதத்திலும் ஊக்குவிக்காமலும், மருத்துவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் மக்கள் கிடைத்த தகவல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் இருப்பதும் இதுபோன்ற சவாலான காலகட்டத்தில் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். BBC

0 கருத்துரைகள்:

Post a Comment