May 17, 2021

பலஸ்தீனர்களின் தாயக மீட்பை ஆதரிப்போம், எனது கவி வரிகளில் தவறிருப்பின் முஸ்லிம்களே மன்னிக்கவும் என்கிறார் கீதா மோகன்

சில மாதங்களுக்கு முன் இதேபோலொரு நாளில் இதேபோலொரு மருத்துவமனையில் இதேபோலொரு துணியில் உன்னைச் சுற்றித் தந்தார்கள்- அன்று சுற்றமெல்லாம் சுற்றி இருந்தார்கள்...

உனை ஏந்தத் தெரியாமல் வெகு ஜாக்கிரதையாகப் பதைபதைத்துத் தூக்கியது கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள்....

இன்று பக்குவமாகக் கையேந்தப் பழகி நிற்கிறேன் - நீயோ அசைவற்றுக் கிடக்கிறாய்...

பல வருடங்களுக்குப் பின் பூத்துச் சிரித்தவளே - கணநேரம்தான் மலர்ந்திருப்பேன் என ஏலவே சொல்லியிருந்தால் கனாக்கோட்டைகளுக்குக் கடிவாளமிட்டிருப்பேன்.... இன்னும் கொஞ்சம் கொஞ்சியிருப்பேன்...

அணைவுக்கு வைத்த தலையணை சரிந்து உன்மேல் படர்ந்தாலே உளம் துடித்து உன் தாயுடன் சண்டை பிடித்துக் கிடந்தேன்- கட்டிடங்களுக்கு நடுவில் பாறைக் கொங்கிரீட்டுக்கடியில் பாளம் பாளமாய் என் பாலகி நசுங்கிக் கிடந்ததைக் கண்டுமா இன்னும் உயிரோடு கிடக்கிறேன்...? 

பால்மணத்துக் கிடந்தவளே - இரத்தவாடை மணக்கிறதே... பாழ்மனம் படைத்தோரே பாருங்கள்- என் செல்வ மகளின் புன்னகை சிந்திய வதனம்....

மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் மிகக் கவனம்....

கையேந்தும்போதெல்லாம் கண்சிமிட்டிச் சிரித்தவள் - இன்று கட்டையெனக் கிடக்கிறாள்.... பால்வடியும் உதட்டினோரம் தாடை வெடித்துக் குருதி வடிகிறதே... 

ஈயையும் நுளம்பையும் உனக்காக விரட்டத் தெரிந்த எனக்கு - நிலமுண்ணிப் பேயையும், மலமுண்ணி மண்புழுக்களையும் விரட்டத் தெரியாத கையாலாகாத பாவியாகி விட்டேனே...

உன் தாய் கேட்டாள் என் சொல்வேன்? பக்கத்துக் கட்டிலில்தான் கால்துண்டிக்கப்பட்டுக் கிடக்கிறாள்.... பதைபதைத்து இதய நரம்பும் துண்டிக்கப்பட்டு விடுமே....

விருத்தினராய் வந்தார்கள் சோறு போட்டுத் துண்டு நிலம் கொடுத்தோம்- இன்று எமைக் கூறுபோட்டு துண்டம் துண்டமாகத் தூக்கிப்போடுகிறார்கள்...

எம் தாயகத்தையே ஆக்கிரமிப்புச் செய்து எம்மையே அடக்கியாள்கிறார்கள்- கேட்பதற்கு நாதியில்லை அவர்களுக்கு இது பெரும் சேதியுமில்லை.... 

மறுமையின் அடையாளம் என்றொரு வார்த்தை உதிர்த்து விட்டு- கருமை நிறத் துணிக்குக் கலர் கலராகப் பொத்தான் தேடிக் கடை கடையாக அலையவே காலநேரமும் காசு பணமும் சரியாக இருக்கிறது அவர்களுக்கு... 

'மானிடம் காக்கும் மதம் தோன்றிய தேசம்' என மார்தட்டும் ஒரு நாடு கிடக்கிறது - இன்னும் வாய்மூடித்தான் கிடக்கிறது... 

கொல்லைப் புறத்தால் கொள்கலனில் எதிரிக்கு எறிகணைகள் வழங்கிவிட்டு - வாசற்புறத்தில் உதடு குவித்து உச்சுக்கொட்டி நிற்கிறது கச்சிதமாகவே நடிக்கிறது...

தன் தங்கையைக் காக்க தற்காப்புக்குக் கல்லை எறிந்துவிட்டோடும் சிறுவனைப் படம்பிடித்துத் தீவிரவாதியென புடம்போட்டுக் காட்டுகிறார்கள்....

இங்கே மழலை சதை கிழிந்து தொங்குகிறது- கண்டு கொள்ள யாருமில்லை.... அங்கே நகக்கீறல் கண்டு துடிப்பதற்கு யார்தான் இல்லை.... 

அடேய்களா... நாங்கள் புது 

நாடுபிடிக்கக் கொடியேந்தி நிற்கவில்லை.... எம் பிறந்த மண்ணை மீளத் தருமாறு கையேந்தி நிற்கின்றோம்.... மிஞ்சிப் போனால் கல்லேந்தி நிற்கிறோம்....

ஐநாவின் தயவில் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளே.... கொஞ்சம் கொஞ்சமாய் நிலம் தின்று செரித்து நின்று சிரிக்கும் நயவஞ்சகர்களே... 

நாதியற்று நாடோடியாய் நாறித்திரிந்த கதை நினைவிருக்கிறதா....? 

ஆறேழு தசாப்தங்களுக்கு முன் பாரிலேது உங்கள் தேசம்? 

இரத்தம் கொதிக்கிறது... நெஞ்சு கனக்கிறது.... மிச்சம் இருக்கும் நிலத்தையும் கயவர் பறிக்க முன் என் மகளை மண்புதைத்து வருகிறேன்... கொஞ்சம் இருங்கள் இதோ வருகிறேன்...

- கீதா மோகன் (தமிழ்நாடு- திருநெல்வேலி)

(பலஸ்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டத்தை மானசீகமாகவேனும் ஆதரிப்போம்... என் வாசிப்புக்கும் நேசிப்புக்கும் அமைவாக எழுந்த வரிகளில் தவறிருப்பின் முஸ்லிம் உறவுகள் மன்னிக்கவும்... 🚶🏽‍♀️🚶🏽‍♀️)

3 கருத்துரைகள்:

Great poem Geetha Mohan, Its lovable, memorable and truthful
Appreciate for your emotional writing and thanking you dear.

பாலஸ்தீன மக்களின் நிலமீட்புப் போராட்டத்தின் யதார்த்த நிலை பற்றிய தனது உள்ளக் குமுறலைக் கவிதை வரிகளால் ஆதரிக்கும் கவிஞர் கீதா மோகனுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Post a Comment