May 29, 2021

"இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான சுற்றாடல் அழிவு இதுவாகும்"
MV X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீயினால் கடலில் பல பொருட்கள் கலந்தமை சுற்றாடல் பேரழிவு என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கடல்சார் நிபுணரான சரித்த பட்டியாரச்சி தெரிவித்தார்.

கப்பலில் 7 .8 மில்லியன் அளவு பிளாஸ்டிக் துணிக்கைகள் இருந்துள்ளன. சிலவற்றை அப்புறப்படுத்த முடியும். எனினும், அவை நீண்டகாலம் நீடித்திருக்கக்கூடியவை. இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேஷியா மற்றும் சோமாலியா போன்ற நாடுகளுக்கும் இவை மிதந்து செல்லலாம். அதேபோன்று,  நாட்டின் தெற்கு கடல் பரப்பில் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என சரித்த பட்டியாரச்சி குறிப்பிட்டார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான சுற்றாடல் அழிவு இதுவாகும். இந்தக் கப்பலில் 300 மெட்ரிக் தொன் எண்ணெய் உள்ளது. ஆகவே, கப்பல் மூழ்குவதனை தவிர்க்க வேண்டும்

என அவர் வலியுறுத்தினார்.

TV 1 தொலைக்காட்சியில் நேற்றைய நியூஸ்லைன் தொகுப்பில் கலந்துகொண்ட அங்கீகாரமளிக்கப்பட்ட விநியோக மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் உபதலைவர் ரோஹன அபேவிக்ரம இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்ததாவது

இங்கு இதுபோன்ற நிலைமையை நிர்வகிப்பதற்கு தேவையான விசேட அறிவு போதாது என்பது தெளிவானது. முதலாவதாக கப்பலின் தீயை கட்டுப்படுத்துவதற்கு துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரண்டு டக் படகுகளே பயன்படுத்தப்பட்டன. அவ்வாறான டக் படகுகளால் இதுபோன்ற தீயை கட்டுப்படுத்த முடியாது. அவை அதற்கு தகுதியுடையவை அல்ல. இதன்போது நாம் பயன்படுத்திய உபகரணங்கள் இதுபோன்ற தீயைக் கட்டுப்படுத்த தகுதியானவை அல்ல. நான் ஏற்கனவே கூறியது போன்று இது தொடர்பாக விசேட அறிவின்மை இரண்டாவது காரணியாகும்

நிபுணர்கள் சுட்டிக்காட்டும் வகையில், நாட்டின் மேற்குக் கரையோரம் சுற்றாடல் அழிவை எதிர்கொண்டுள்ளது.

தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, காக்கைத்தீவு, பமுனுகம, சரக்குவ மற்றும் நீர்கொழும்பு கடற்கரையோரங்களைத் தவிர ஹிக்கடுவ கடற்கரையிலும் கப்பலில் இருந்ததாகக் கருதப்படும் பல பொருட்கள் இன்று கரையொதுங்கியுள்ளன.

கடற்படை, கரையோரப் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளில் இன்றும் ஈடுபட்டனர்.

இது சுற்றாடல் பேரழிவின் ஆரம்பம் என சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.

ஏற்பட்டுள்ள சுற்றாடல் பேரழிவின் தாக்கத்தை மீனவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

உஸ்வெடகெய்யாவ – தல்தியவத்த, லுனாவ மீனவர்களால் சில நாட்களுக்கு முன்பு மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலில் வீசப்பட்டிருந்த வலைகள் இன்று காலை கரைக்கு கொண்டுவரப்பட்டன.

அந்த வலைகளில் தீப்பற்றிய கப்பலில் இருந்த பொருட்கள் சிக்கியிருந்ததை மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

தீப்பிடித்த கப்பலில் இருந்த பொருட்கள் நீர்கொழும்பு முகத்துவாரம் ஊடாக நீர்கொழும்பு களப்புக்கு அடித்துச் செல்லப்படுவதைத் தடுப்பதற்காக நீர்கொழும்பு குச்சிதுவ பகுதியிலிருந்து தூவ மீனவர் கிராமம் வரையான பகுதிக்கு இடையில் முகத்துவாரத்தின் ஒரு பகுதியில் தடைகளை ஏற்படுத்த சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் இன்று பிற்பகல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1 கருத்துரைகள்:

சதி நடக்கிறது. (பழிவாங்கும் )

Post a Comment