May 03, 2021

தேர்தலில் தோல்வியடைந்த முபாரக்கின் பண்பட்ட, பக்குவமான, படிப்பினையூட்டக்கூடிய அறிக்கை...!


காலம் நமக்கும்  ஒரு வாய்ப்பினை  வழங்கும்!!!

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

 தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் SDPI கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியோடு இணைந்து 10 தொகுதியில் போட்டியிட்டது. 

போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தமிழக மற்றும் புதுவை வாக்காளர் பெருமக்கள் SDPI கட்சியை ஆதரித்து கண்ணியமான வாக்கினை நமக்கு அளித்துள்ளார்கள். எஸ்டிபிஐ கட்சிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும்,உழைத்த கூட்டணி கட்சியினருக்கும், SDPI  கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

இத்தேர்தலின் முடிவுகள் புதுவையில் ஆட்சி மாற்றத்தையும் ,தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆளும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. தனது விடா முயற்சியின் காரணமாக தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக மரியாதைக்குரிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்க உள்ளார். இத்தருணத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இத்தேர்தலை பொறுத்தவரை எஸ்டிபிஐ கட்சி மிகக்கடுமையாக வெற்றிக்கு உழைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இறைவன் நமக்கு இதுதான் என்று நாடியுள்ளான். அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.எனவே மக்கள் வழங்கிய இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளகிறோம்.காலம் எவ்வாறு வெற்றி வாய்ப்பை பிறருக்கு வழங்கி இருக்கிறதோ அதேபோல் இறைவன் நாடினால் நமக்கும் ஒரு நல்வாய்ப்பினை வழங்குவான். அது நிச்சயம்! அதுவரை பொறுத்திருப்போம்.அதனை நோக்கி விரைந்து உழைப்போம்.

இந்நிலையில் நமது தேர்தல் நிலைப்பாட்டைப் பற்றி, பெற்ற வாக்கை பற்றி தூற்றுவோர், இடித்துரைத்து பேசுவது,  எழுதுவது பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாம் இலக்கை நோக்கி விரைய வேண்டிய தருணம் இது. 

தமிழக சட்டமன்றத்தில் மதவாத பாஜக நுழைந்து இருக்கிறது. எனவே அதனை சட்டமன்றத்திலும்,  மக்கள் மனங்களில் இருந்தும் அகற்ற பாடுபட வேண்டிய கடமை யாருக்கு இருக்கிறதோ இல்லையோ  நமக்கு இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. 

அதுபோல் மத்திய மக்கள் விரோத பாஜக அரசு இன்னும் வீரியமாக தமிழர்கள் மற்றும் தமிழக உரிமையை நசுக்கும். அதனை இன்னும் சிரத்தோடு தமிழர்கள் சார்பாக எதிர்க்கும் கடமையும் நமக்கு இருக்கிறது. இது ஏதோ நம்முடைய புதிய பணி அல்ல. மாறாக தேர்தல் காலத்திற்கு முன்பு, 12 ஆண்டுகாலம் நாம் செய்த உழைப்பு. நாம் பண்படுத்திய பாசிச எதிர்பபு தமிழ் மண்ணை தான் இன்று பிறர் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நமக்கு அடுத்தடுத்த களங்கள் காத்திருக்கிறது. மறவாதீர்கள்!

சிலர் நீங்கள் கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள் என்கிறார்கள். நாம் உண்மையை சொல்கிறோம்; உழைப்பை செலுத்துகிறோம்; நல்லிணக்கத்தை செயலில் காட்டுகிறோம்; நியாயத்தின் பக்கம் இருக்கிறோம்; பல தியாகங்களை செய்கிறோம்; இது மட்டும் தான் நிலையானது என நம்புகிறோம். 

நாம் ஜனநாயகத்தை பணநாயகம் ஆக மாற்றும் ஈனத்தனமான செயலை செய்யவில்லை, செய்ய அனுமதிக்கவில்லை. இதைத்தாண்டி ஒரு மாற்று சிந்தனையோடு ஒரு கொள்கையை முன் வைக்கிறோம்.இது தான் பெரியாரும் ,அண்ணாவும்,அம்பேத்கரும்,காயிதேமில்லத்தும்,காமராஜர் அவர்களும் முன்வைத்தது வழிகாட்டியது.பேரறிஞர் அண்ணா காங்கிரசுக்கு மாற்றை முன்வைக்காது போயிருந்தால் திமுக உருவாகியிருக்குமா?இன்று விடியல் என்று பேச முடியுமா?எனவே நமது மாற்றுப் பாதை தெளிவானது. பயணம் நிறைவானது. எது வந்த போதிலும் மதவாத எதிர்ப்பில்,மக்கள் நல அரசியலில் எந்த சமரசமும் இனி எப்போதும் இல்லை.

விதைத்துக்கொண்டே இரு... 

முளைத்தால் மரம் இல்லையென்றால் உரம்! என்ற நம்மாழ்வார் சொல்படி இன்றைய உரம் நாளைய மரம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. 

சிலர் உங்களுக்கு  அங்கீகாரம் தராத இவர்களுக்கு இனி உழைக்காதீர்கள் என்கின்றனர். எப்படி முடியும்? இம்மக்கள் தானே எம் களம். களத்தை செப்பனிடுவது என் தலையாய பணி அல்லவா?  

ஒருமுறை பெரியார், கால்நடை மருத்துவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உங்களை ஏசுவது, பேசுவது, புறக்கணிப்பது என்று உதாசீனப்படுத்தும் மக்களுக்காக நீங்கள் உழைக்க வேண்டுமா?  என்று மருத்துவர்கள் கேட்டபோது பெரியார் சொன்னார்.   நீங்கள் கால்நடை மருத்துவர்கள். வாயில்லாத, உங்களை சீண்டுகிற, முட்டுகின்ற விலங்குகளிடம் அன்பு காட்டி மருத்துவம் செய்கிறீர்களே, விலங்குகளுக்கே இவ்வாறு கரிசனம் காட்டுகிறார்களே! நானோ விலங்குகளைவிட உயரவான மனிதன்! என் சக மனிதனை நான் திருத்தும் பணி என் கடமை அல்லவா? அவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் உண்மையை சொல்லாமல் விட்டால் என்ன மனிதநேயம்? மாந்தநேயம்? என்று பதிலுக்கு கேட்டார்.  

அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். எங்கள் மக்கள்  பணி மகேசனுக்கான பணி. மாந்தர்தம் உயர்வுக்கான பணி.

திராவிட கட்சிகள் எவ்விதம் பாஜக மதவாதத்தை பூதாகரமாக்கியோ ,பணத்தாசை காட்டியோ தமிழகம் முழுவதும் மக்களை ஏமாற்றினார்களோ அதுபோலதான் நமது தொகுதியிலும் அதனை செய்திருக்கிறார்கள். மக்கள் இதனை இம்முறை நம்பி இருக்கிறார்கள். 

ஆனாலும் அதனை மீறியும் நல்ல மாற்றத்திற்காக நமது வாக்காளர்கள் நமக்கு வாக்களித்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை காக்கும் பொறுப்பு நமக்குள்ளது.எனவே மக்களை பண்படுத்துவது நமது கடமை. இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நமது தேவையை அவசியத்தை உணர்ந்து, நம்மைத் தேர்தல் அரசியலில் வெற்றி பெற வைப்பார்கள்.அதுவரை உழைப்போம். காலம் ஒரு வாய்ப்பினை வழங்கும். இன்ஷா அல்லாஹ்!!!

எனவே தேர்தல் வெற்றி தோல்விகள் என்பது மட்டுமே நமது இலக்கு அல்ல. மாறாக சிவில் சமூகத்தின் சிந்தனை மாற்றமே நமது இலக்கு என்பதை மனதில் நிறுத்தி, காலத்தால் வென்று விட்டவர்களை வேகத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்பது போல் வேகத்தை அதிகப்படுத்தி காலத்தை நமதாக்குவோம்! வெற்றி பெறுவோம்! 

மாவோ சொன்னது போல்,

“அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்!  யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்!” என்றார்.

இந்த யுத்தத்தில் எப்போதும் சோர்ந்து போகாமல்,விழிப்போடும், உற்சாகத்தோடும், வீரியத்தோடும் இருப்போம்.   களத்தை வெல்வோம்!!! எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பான்.

நெல்லை முபாரக் - மாநிலத் தலைவர் 

எஸ்.டி.பி.ஐ - தமிழ்நாடு

0 கருத்துரைகள்:

Post a Comment