Header Ads



நாட்டில் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும், அதில் எந்த பாதிப்பும் கிடையாது - லலித் வீரதுங்க


நாட்டில் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

சில தரப்பினர் விமர்சிப்பது போல் தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் காலதாமதமாகவில்லை என்பதை குறிப்பிட்ட அவர், காலக்கிரமத்தில் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் தடுப்பூசி தாமதமாக உள்ள நிலையில் ஏனைய நாடுகளுடன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தடுப்பூசி வழங்களில் எந்த பாதிப்புக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாடொன்றில் அது தொடர்பில் விளக்கமளித்த அவர்;

கடந்த ஜனவரி 29ஆம் திகதி தான் முதல் தடவையாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பித்தது.அதற்கிணங்க தற்போது பெருமளவிலான தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க இதுவரை ஒன்பது இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஐந்தரை இலட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் மேல் மாகாணத்தில் கொழும்பு கம்பகா, களுத்துறை மாவட்ட மக்களுக்கே வழங்கப்பட்டன.

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்தே இலங்கைக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. தற்போது ஏற்பட்டுள்ள விநியோக மற்றும் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் நிலவும் அசௌகரியங்கள் காரணமாக தடுப்பூசி வழங்குவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.

நாட்டில் தற்போது எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி 3 இலட்சத்து 56 ஆயிரத்துக்கு மேல் கையிருப்பில் உள்ளன. நாம் முதற்கட்ட தடுப்பூசி வழங்கியவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி 12 வாரங்களுக்கும் 16 வாரங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்(ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments

Powered by Blogger.