Header Ads



சுகாதார அமைச்சின் ஜனாசா அடக்கம் அனுமதி, வர்த்தமானி தேவையேற்பட்டால் ரத்து செய்யப்படலாம் - கோவிந்தன் Mp


முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே இறந்த முஸ்லிம் மக்களின் ஜனசாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 

முஸ்லிம் மக்களது இறந்த உடல்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்கின்ற நீண்ட நாள் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. 

உலகத்தில் 190 இற்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் இறந்த மக்களின் உடலை புதைக்கும் நிலையில், இலங்கையில் கூட இது தொடர்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழு எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என அறிக்கை கொடுத்தும் இலங்கை அரசு புதைக்க விடாமல் இருந்தது. 

இந்தக் காலகட்டத்தில் புதைப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கின்றார்கள் என்றால் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்று வரவுள்ள நிலையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே இறந்த முஸ்லிம் மக்களின் ஜனசாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. 

ஏனைய போராட்டங்களுக்கோ, ஆர்ப்பாட்டங்களுக்கோ அல்லது பாகிஸ்தான் பிரதமர் இங்கு வந்து சென்றதற்காகவோ அல்ல. 

இலங்கைக்கு எதிரான பிரேரணையில் முஸ்லிம் நாடுகளின் ஆதவைப் பெறுவதற்காகவே அனுமதி வழங்கியிருக்கின்றது. அதுவும் வர்த்தமானி அறிவித்தல் வந்த பின்னரும், சுற்று நிருபம் வரும் வரை புதைப்பதப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. 

வர்த்தமானி அறிவித்தல் கூட ரத்து செய்யக் கூடிய ஒரு நாடாக தான் இலங்கை இருக்கிறது. ஏனெனில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட வர்த்தமானி கூட 4 மணித்தியாலயத்தில் ஜனாதிபதியின் உத்தரவில் ரத்து செய்யப்பட்ட வரலாறு இருக்கின்றது. 

அதேபோல் சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியும் தேவையேற்பட்டால் ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவித்தார். 

-வவுனியா தீபன்-

No comments

Powered by Blogger.