March 13, 2021

காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா இருந்தார், சாணக்கியன் பெரிய தலைவராக வரப்பார்க்கின்றார் - பிள்ளையான்

- TW -

ஆயுதக்குழு என்பது நமது தேவைக்காக நிகழ்ந்த சம்பவத்தினூடாக நம்மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்ட விடயமாகும். தற்போது அந்தத் தேவை மாறி அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கத்தின் வேலைத்திட்டங்களில் ஒன்றான ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை அமைக்கும் 'இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்' வேலைத்திட்டத்தின் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா இருந்தார், அவர் அங்கு தண்ணீரைக் கொண்டு சென்றார். உங்களுக்கென்று யாருமிருக்கவில்லை. மகிழவெட்டுவான் ஒரு பாரம்பரிய கிராமமாகும். ஐந்து வருடம் நல்லாட்சியிலிருந்தவர்கள் அங்கு இரண்டு வீதிகளையும் புனரமைக்கவில்லை. அங்கு பாடசாலையின் நிலையும் மோசமாகவுள்ளது.

யோகேஸ்வரன் அவர்களின் சொந்த ஊரிலே இம்முறை முதலாம் தரத்திற்கு இரண்டு பிள்ளைகள் மட்டுமே. சமூகத்தில் வந்து வாக்கு கேட்டு வென்ற தலைவர்கள் தங்களுடைய கிராமத்தையே கட்டியெழுப்பவில்லை என்றால் அவர்களின் அரசியல் தோல்வியடைந்த ஒன்றாகும்.

இன்று சாணக்கியன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயங்களைப் பேசி வருகின்றனர்.

எந்த வேலைத்திட்டத்தினையும் செய்யாமல்,வீதிகளை அமைத்து குளங்களை அமைத்து நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து அவன் வருகின்றான், இவன் வருகின்றான், விகாரைகளை அமைக்கின்றான் என்று கூறினால் என்ன மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள். நாங்கள் நடைமுறைக்குச் சாத்தியமான விடயங்களையே சொல்கின்றோம் நாங்கள் மாற வேண்டும் வேறு எவரதும் கால்களைப் பிடிக்கத் தேவையில்லை. இன்று பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டக்களப்பில் மதுபான சாலைகள் இருக்கின்றது.

அதனை நாங்கள் இங்கு சொல்ல விரும்பவில்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்கள் நலன் சார்ந்த மக்களை முன்னேற்றுகின்ற பலப்படுத்துகின்ற கட்சியாகும். எங்கள் வேலைத்திட்டம் மிகத் தெளிவானது.

நாங்கள் கடந்த காலங்களில் பிறரை எதிர்பார்த்திருந்து பின்தங்கிவிட்டோம். இப்போது நாம் தான் அனைத்தையும் செய்யப்போகின்றோம்.

நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளைக் கேட்டு துப்பாக்கி ஏந்தி போராடினோம். எமது மாவட்டத்தின் இளைஞர்கள் பலர் மரணித்திருக்கின்றனர். அவர்களின் நோக்கம் இங்கு வாக்குகளைப் பெறுவதாகும்.

சாணக்கியன் போன்றவர்களைப் பயன்படுத்தி சுமந்திரன் வாக்குகளைப் பெறவேண்டும்.தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியைச் சுமந்திரன் பெறுவதற்காக அவரை பயன்படுத்துவார்.கட்சிக்குள் பலத்தினை கூட்டுவதற்கே பார்க்கின்றனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்றபோது அதனை யாரும் பெரிதாக விமர்சிக்கவில்லை,அதனைப் பூசி மெழுகியே எழுதினர்.நல்லிணக்கம் பேசுபவர்களும் ஸஹ்ரான் போன்றவர்கள் செய்த பஞ்சமா பாதக செயல் எனச் சொல்லவில்லை.எந்த ஊடகவியலாளரும் அவருக்கு எதிராக எழுதவில்லை. இன்று அதனுடன் ஒப்பிட்டு சாணக்கியன் பெரிய தலைவராக வரப்பார்க்கின்றார்.

நாங்கள் ஒரு அறிவு ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகமாக,எங்களது கடந்த கால அனுபவங்களை வைத்துக் கொண்டு தற்போதுள்ள அரசாங்கத்தின் கொள்கையின் ஊடாக எமது மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்பதையே நாங்கள் அவதானம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஜனாதிபதி கூறிய மகிழ்ச்சியான குடும்பத்தினை வாழவைப்போம் என்னும் கொள்கைக்கு அமைவாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

1 கருத்துரைகள்:

Eraiwan nadinal Sannakkiyan jollikkathan pohirar.

Post a comment