Header Ads



ஏற்றுமதி இலக்குகளை அடைந்துகொள்ள, அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதியிடம் தெரிவிப்பு


ஆடை கைத்தொழிற்துறை தற்போது முகங்கொடுத்துள்ள சவால்களை அடையாளம் கண்டுள்ள அரசாங்கம், அதன் உற்பத்தித் திறனையும் தரத்தையும் அதிகரிப்பதற்கு முழுமையான அனுசரணையை வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இதற்கு திட்டமிட்ட வகையில் நிகழ்ச்சித்திட்டமொன்றின் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். 

ஒன்றிணைந்த ஆடைகள் சங்க அமைப்பின் பிரதிநிதிகளுடன் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். 

இலங்கையின் ஏற்றுமதியை இலக்காகக்கொண்ட கைத்தொழிற் துறைகளுக்கு மத்தியில் ஆடைக் கைத்தொழிற்துறை முக்கிய இடம் வகிக்கின்றது. இலங்கையை உயர்தரம் வாய்ந்த ஆடைகளுக்கான உலகளவில் போற்றப்படும் தரச்சின்னமாக மாற்றும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. உள்நாட்டு ஆடைகள் தொழிற்துறையில் புதியதொரு எழுச்சியை ஏற்படுத்தி பாரிய அந்நியச் செலாவணியை ஈட்ட முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

இந்த இலக்கை அடைந்துகொள்வதற்காக அரசாங்கம் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருவதுடன், இதன்மூலம் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் இலக்கு 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வர்த்தகர்கள் ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்தார்கள். 

சுகாதார நடைமுறைகள் காரணமாக இத்தொழிற்துறையின் முன்னேற்ற பயணத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்தும் வர்த்தகர்கள் தெளிவுபடுத்தினர். நாட்டின் பொதுச் சுகாதார நிலைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆடைக் கைத்தொழிற் துறைக்கு சில சுகாதார பரிந்துரைகளை தளர்த்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கும் முன்மொழியப்பட்டது. 

இத்தொழிற்துறையின் மனிதவள பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், தரம் மற்றும் பாதுகாப்பான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இத்தொழிற்துறைக்கு இளைஞர், யுவதிகளை ஈர்க்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

முதலீட்டாளர்களின் வீசா கால எல்லையை நீடித்தல், வீசா வழங்கும்போது நெகிழ்ச்சியான கொள்கை ஒன்றை பின்பற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, நிமால் சிறிபால த சில்வா, பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன், இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹட்டால ஆகியோரும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், இணைந்த ஆடை கைத்தொழிற்துறை சங்க அமைப்பின் தலைவர் அஷ்ரப் ஒமர் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு.

2021.03.15

No comments

Powered by Blogger.