March 15, 2021

துருக்கித் தொப்பி அணிந்த, யாழ் மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் எம்.ஜி.பஷீர்


- பரீட் இக்பால் -

சோனகத் தெருவில் முகம்மது கனி - ஹக்கீமா தம்பதியினருக்கு 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி ஐந்து பிள்ளைகளுள் மூத்த மகனாக எம்.ஜி.பஷீர் பிறந்தார். இவரது தகப்பனார் முகம்மது கனி தையல் தொழில் நிமித்தம் பருத்தித்துறையில் குடும்பத்துடன் வசித்துவந்தார். அதனால் பஷீர் தனது ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆரம்பப் பாடசாலையிலும், 06 - 08 ஆம் வகுப்பு வரை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். 

அதனைத் தொடர்ந்து இவரது குடும்பம் மீண்டும் யாழ்ப்பாணம் சோனகத் தெருவிற்கு குடியேறியபோது தரம் 09 தொடக்கம் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையில் கல்வி பயின்றார். படித்து முடித்ததும் எம்.ஜி.பஷீர் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் எழுத்து வேலை கணக்கு வேலை சம்பந்தமாகவும் நம்பிக்கையாகவும் பல வருடங்கள் பணிபுரிந்தார். *பஷீர் 1955 இல் முன்னாள் அரசாங்க அதிபர் எம்.எம்.மக்பூல், முன்னாள் யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் ஏ.எச்.ஹாமீம், *எம்.ஏ.சி.அப்துல் ஸலாம்,

 எம்.எஸ்.அமானுல்லா ஆசிரியர். என்.எம்.எஸ்.சுபைர். லுக்மான் ஆகியோருடன் இணைந்து யாழ் முஸ்லிம்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ் முஸ்லிம் மாணவர்கள் சங்கம் ஒன்றை ஸ்தாபித்தார். இச்சங்கத்தின் போஷகர்களாக அபூசாலி ஹாஜியாரும் சேகுமதாரும் ஒத்துழைப்பு வழங்கினர்

. வருடந்தோறும் மாணவர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஜஸ்மின் இல்லம், பிரிம்ரோஸ் இல்லம் என்று பெயருமிட்டு ஜஸ்மின் இல்லத்துக்கு அப்துல் ஸலாமும், பிரிம்ரோஸ் இல்லத்துக்கு ஏ.எச் ஹாமீமும் பொறுப்பெடுத்து விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வந்தார்கள்.

எம்.ஜி.பஷீர், மொஹிடீன் - ஆசியா தம்பதியினரின் அன்பு மகள் ஆசிரியை சுல்பாவை 23.08.1964 இல் திருமணம் செய்தார். பஷீர் - சுல்பா தம்பதியினருக்கு நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர். இவர்களுக்கு ஒரு வளர்ப்பு மகனும் உண்டு. 

எம்.ஜி.பஷீர் இளம் பராயத்திலேயே இயற்கையாக சமூக சேவையில் ஈடுபடக்கூடியவராக இருந்தார். முஸ்லிம் வட்டாரத்தில் பெற்றோர்கள் தங்களது  பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு படித்து முடித்ததும் படிப்பை இடைநிறுத்தி ஏதாவது சிறிய வேலைக்கு அனுப்புவது வழமையாக இருந்தது. இந்த மாதிரியான பெற்றோர்களை எம்.ஜி.பஷீர் சந்தித்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி கல்வியை  இடையில் விட்ட அந்த பிள்ளைகள் திரும்பவும் கல்வியை தொடர அரும்பாடுபட்டார். பெற்றோர்களால் கல்வியை தொடர விடாமல் இடைநிறுத்திய அந்த மாணவர்கள் இவரது முயற்சியால் மீண்டும் கல்வியை தொடர்ந்து அரசாங்க உத்தியோகத்தில் பணிபுரிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  இவ்வாறுதான் இவரது சமூகசேவை ஆரம்பமாகியது. 

இதனைக் கண்டு இவரது நண்பர்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் ஈடுபடுமாறு ஆலோசனை கூறினர். யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த அபூசாலி ஹாஜியாருக்கு எதிராக போட்டியிட ஆரம்பத்தில் தயங்கினார். நண்பர்களும் உறவினர்களும் உற்சாகமூட்டியதால்தான் இவர் தேர்தலில் இறங்கினார். இவர் 1969 இல் அபூசாலி ஹாஜியாருக்கு எதிராக யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் யாழ் மாநகர சபையின் பிரதி மேயராகவும் பணிபுரிந்தார். இவர் முன்னாள் மேயர் அல்பிரட் தங்கராஜா துரையப்பா அவர்களுடன் இணைந்து பல சமூக வேலைத் திட்டங்களுக்கு உறுதுணை புரிந்தார். இவர் குடியேற்றத் திட்டமான புதிய சோனகத் தெருவிற்கு (பொம்மை வெளி) மின்சார வசதியைப் பெற்றுக் கொடுத்ததோடு வேறு பல உதவிகளையும் செய்தார். மண்கும்பான் வெள்ளைக் கடற்கரை பள்ளிவாசல் பகுதியில் ஒரு குடியேற்றத் திட்டத்தை உருவாக்கி, ஒரு பாடசாலையையும் உருவாக்கி பல உதவிகளைச் செய்தார். சோனகத் தெருவில் பல வீதிகளைத் திருத்தியமைத்தார். 

இவர் மாநகரசபை உறுப்பினராக இருந்த காலத்தில் மின்சாரம், சுகாதாரம், கட்டிடங்கள் பழுதுபார்த்தல் போன்ற வேலைகளுக்கும் தலைவராக இருந்து பல வேலைத்திட்டங்களுக்கு உறுதுணை புரிந்தார். யாழ் மாநகரசபையில் இவரின் தீர்மானத்தை ஏற்று முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அமைச்சருக்கு இனம்இ மதம் வேறுபாடின்றி பொது வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

1990 ஆம் ஆண்டு தீவிரவாத விடுதலைப் புலிகளால் ஆயுதமேந்தி இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டு  யாழ் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டதற்குப் பின்னர் 1993 முற்பகுதியில்  அப்போதைய யாழ் மாநகரசபை ஆணையாளர் பாலசிங்கம் யாழ் நவீன சந்தையில் உள்ள அனைத்து முஸ்லிம்களது கடைகளை டென்டர் மூலம் கொடுப்பதற்கு முயற்சி எடுத்தார். அச்சந்தர்ப்பத்தில் எம்.ஜி.பஷீர் ரன்முத்து ஹோட்டலின் உரிமையாளர் சேர் அமீர் மூலம் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச அவர்களைச் சந்தித்து அந்த டென்டரை நிறுத்தும் முயற்சியில் கடுமையாக உழைத்து அந்த டென்டரை நிறுத்தினார். 

மேலும் சேர் அமீர் மூலம் எம்.ஜி.பஷீர் 1990 ஆம் ஆண்டு தீவிரவாத விடுதலைப் புலிகளால் ஆயுதமேந்தி விரட்டி இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டதன்  காரணமாக  விரட்டியடிக்கப்பட்ட காலத்தில் கொழும்புக்கு இடம் பெயர்ந்த க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் தீர்த்து வைத்தார்.  யாழ்.முஸ்லிம்கள், தீவிரவாத விடுதலைப் புலிகளால் ஆயுதமேந்தி விரட்டியடிக்கப்பட்ட  பின்னர் புத்தளத்தில் வறுமையில் வாடிய குடும்பங்களில் நடந்த திருமணங்களிற்கு தனவந்தர்களைச் சந்தித்து அவர்கள் மூலமாக பலருக்கு உதவி புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள், தீவிரவாத விடுதலைப் புலிகளினால் ஆயுதமேந்தி விரட்டியடிக்கப்பட்ட   பின்னர் தமிழர் - முஸ்லிம் நல்லுறவு பாதித்து விடக்கூடாது என்பதிலும் பஷீர் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டார்.  விடுதலைப் புலிகளால் ஆயுதமேந்தி  யாழ் முஸ்லிம்களை விரட்டிய பின்னர் தெஹிவளையில் நடந்த ஒரு வைபவத்தின் போது 'துருக்கித் தொப்பி அணிந்து தான் ஒரு முஸ்லிம் என்று காட்டுவதில்  எம்.ஜி.பஷீர் பெருமையடைந்தார்' என்று தனது உரையில் றிஸ்வி முப்தி குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி ஆர்.எம்.இமாம் அவர்களின் ஆலோசனைக் குழுவில் இவர் அங்கம் வகித்து புத்தளத்தில் பல சேவைகளைப்புரிந்து செயற்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக ஆர்.எம்.இமாம் அவர்கள் வருவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

யாழ் மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் எம்.ஜி.பஷீர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 12.02.2021 இல் தனது 84 ஆவது வயதில் இறையடி எய்தினார். அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த அந்தஸ்துள்ள சொர்க்கம் கிடைக்க அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்.

1 கருத்துரைகள்:

His famous trade mark was Eye glasses, not Turkey cap.

Post a comment