Header Ads



ஜெனீவாவில் நாளை என்ன நடக்கும்..? துணை நிற்கும் பாகிஸ்தான், இந்தியா மௌனம்...?


ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, நாளைய தினம் -22- விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பெரும்பாலும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் நாளைய தினமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

விவாதத்தின் இடைநடுவே, சில நாடுகள் தலையீடும் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமைவரை பிற்போடப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

47 உறுப்பு நாடுகளை கொண்ட ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், குறித்த பிரேரணை தொடர்பில், தமது நட்பு நாடுகளுக்கு அறிவுறுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய விசேடமாக இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்காத போதிலும், பெரும்பாலும் வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே, இலங்கை தொடர்பிலான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான பிரேரணை, குறித்த அறிக்கைக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்தநிலையில், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டின் த இன்டர்நெஷனல் செய்தி தளம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பிரேரணைககு எதிராக வாக்களிக்கவும் பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாகவும் அந்த செய்தி தளம் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் மூன்று ஆண்டு கால உறுப்புரிமைக்காக கடந்த ஜனவரி மாதம பாகிஸதான்; மீள தெரிவானது.

இலங்கை தொடர்பில், இதற்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளின்போது, அதற்கு எதிராக பாகிஸ்தான் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.