Header Ads



நிலவுக்குச் செல்ல வாய்ப்பு - எல்லாமே இலவசம், தொழிலதிபர் அழைப்பு - விண்ணப்பப் படிவம் இணைப்பு


- BBC -

ஜப்பானைச் சேர்ந்த செல்வந்தர் யூசாக்கு மைசவா என்பவர் இலவசமாக விண்வெளிக்கு செல்ல எட்டுபேருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஈலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் இந்த நிலவுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பின்புலத்தை சேர்ந்த மக்களும் இதில் இணைய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என ட்விட்டரில் காணொளி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் யூசாக்கு மைசவா.

விண்வெளி செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளப் பக்கத்தின் இணைப்பையும் https://dearmoon.earth/  அவர் பகிர்ந்துள்ளார்.

விண்வெளிக்கு இவருடன் செல்ல உள்ளவர்களின் ஒட்டு மொத்த செலவையும் தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக யூசாக்கு கூறியுள்ளதால் இவருடன் செல்பவர்கள் எந்தவிதமான செலவும் செய்ய வேண்டிய தேவை இருக்காது.

2023ஆம் ஆண்டு நடக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளிப் பயணத்துக்கு 'டியர்மூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலவுப் பயணம் வெற்றியடைந்தால், 1972க்கு பிறகு மனிதர்கள் முதல் முறையாக நிலவுக்கு மேற்கொள்ளும் பயணமாக இது இருக்கும்.

இதை இலவச நிலவுப் பயணத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இரண்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் யூசாக்கு மைசவா.

இவற்றில் முதலாவது இந்தப் பயணத்துக்காக விண்ணப்பிப்பவர்கள் எந்த செயலில் ஈடுபட்டுள்ளார்களோ, அது பிறருக்கும் இந்த சமூகத்துக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாக இருக்க வேண்டும்.

இரண்டாவது கட்டுப்பாடு இதேபோன்ற விருப்பங்களைக் கொண்டுள்ள சக விண்வெளி திட்டப் பயணிகளுக்கும் உதவும் நோக்குடன் இருக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

நிலவுக்கு செல்வதற்கு என்று உள்ள அனைத்து டிக்கெட்டுகளையும் தான் வாங்கி விட்டதால் இது ஒரு தனிப்பட்ட பயணமாகவே இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

யூசாக்கு மைசவா யார்?

ஃபேஷன் துறையில் தொழில் அதிபராக உள்ள யூசாக்கு மைசவா, கலைப் பொருட்கள் சேகரிப்பாளராகவும் இருக்கிறார்.

இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டில் விண்வெளிக்கு செல்வதற்காக 'கலைஞர்களை' அழைத்துச் செல்ல இருப்பதாக இவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

"இப்பொழுது மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவருக்கும் இந்த பயணத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறுகிறார்.

நீங்களே உங்களை ஒரு கலைஞர் என்று கருதினால், நீங்கள் ஒரு கலைஞர்தான் என்று கூறுகிறார் யூசாக்கு.

"ஒரு காதலி வேண்டும்" - கைவிடப்பட்ட திட்டம்

தன்னுடன் விண்வெளிக்கு வருவதற்கு ஒரு காதலி வேண்டும் என்று கடந்த ஆண்டு இவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் தமக்கு ஏற்பட்ட கலவையான உணர்வுகளால் அத்திட்டத்தை கைவிடுவதாக பின்னர் அறிவித்தார்.

ஈலான் மஸ்க்கின் ஸ்பேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்கலம் மூலம் விண்வெளிக்கு செல்லும் முதல் தனியார் பயணியாக 2018ஆம் ஆண்டு யூசாக்கு மைசவாவின் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் பயணத்துக்காக அவர் எவ்வளவு தொகை செலுத்தினார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடவில்லை. "இது ஒரு மிகப்பெரிய தொகை," என்று மட்டும் ஈலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.