Header Ads



இம்ரான்கானின் விஜயத்தினால் இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக உறவு மேலும் விரிவடையும் என நம்பிக்கை


பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இலங்கை - பாகிஸ்தான் பரஸ்பர வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும்  வழிவகுக்கும் என பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மோகன் விஜேவிக்ரம தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் வரலாற்று, சமூக, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் உள்ள போதும் பரஸ்பர வர்த்தகம் போதுமான அடைவினை பிரதிபலிக்கவில்லை என்றும், இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கு இடையிலான கூட்டு வர்த்தக முயற்சிகளும் வரவேற்கப்படும்  என லாஹூர் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையில் (எல்.சி.சி.ஐ) வர்த்தக சமூகத்துடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தரமான இலங்கை தேயிலையின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என கூறிய அவர், இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையின் (எஃப்.டி.ஏ) முழு நன்மையையும் பெற வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

இரு நாடுகளும் உருவாக்கப்பட்ட ஆண்டுகளில் இருந்து பாகிஸ்தானும் இலங்கையும் வரலாற்று ரீதியாக சிறந்த உறவுகளை அனுபவித்து வருகின்றன எனவும், 2018 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி  462 மில்லியன் டொலர்களாக உயர்ந்து பின்னர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியால் 2019 ஆம் ஆண்டில் இது 389 மில்லியன் டொலராக சரிந்தது எனவும் லாஹூர் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் துணைத் தலைவர் தாஹிர் மன்சூர் சவ்த்ரி தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் இலங்கைக்கான ஏற்றுமதி 324 மில்லியன் டொலர்கள் என்றும், அதன் இறக்குமதி 65 மில்லியன் டொலர்கள் என்றும் கூறிய அவர், இலங்கைக்கான ஏற்றுமதியில் நெய்த பருத்தி துணி, சிமெந்து, உருளைக்கிழங்கு, மருந்துகள், மக்காச்சோளம் போன்றவவையும், இறக்குமதியில் காய்கறிகள், ஃபைபர் போர்ட், இயற்கை ரப்பர், கொப்ரா போன்றவையும் காணப்பட்டன எனவும் குறிப்பிட்டார்.

இரண்டு பிரதமர்களுக்கும் மற்றும் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்புகளின் போது, சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் கலந்தாலோசிக்கப்பட்டன என்றும்  பாகிஸ்தான் பிரதமரின் சமீபத்திய இலங்கை விஜயமானது, இரு நாடுகளும்  ஒன்றிணைந்து செயலாற்ற வழிவகுக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலகு பொறியியல் பொருட்கள், மருந்து வகைகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், வாகன பாகங்கள், தொழில்துறை மூலப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றிக்கு இலங்கையில் கணிசமான கேள்வி இருப்பதாகவும், இலங்கைக்கு இந்த பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது எனவும் இரு நாடுகளின் வர்த்தக துறையினரும் வர்த்தகற்திக்கான அனைத்து வாய்ப்புகளையும் தொடர்ந்து உற்று நோக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.