Header Ads



அவசரப்படாமல் மேற்கொள்ளல் எனும் நிலைப்பாடு - அமைச்சரவையில் புர்கா பற்றி கலந்துரையாடலில் நடந்தது என்ன..?

புர்காவை தடை செய்வது தொடர்பிலான எந்தவொரு அமைச்சரவை பத்திரமும் நேற்று (15) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதோடு, இக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர், வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆயினும், புர்கா தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கடந்த 10 - 15 வருடங்களில் ஏற்பட்டுள்ள கலாசார மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக முஸ்லிம்களுடன் இருந்து வந்த உறவை இலங்கையர்கள் எனும் வகையில் அங்கீகரித்தல், இன நல்லிணக்கம், உள்ளிட்ட விடயங்களில் எந்தவொரு பிரச்சினையும் காணப்படவில்லை. ஆயினும் அண்மைக் காலமாக புர்கா உள்ளிட்ட ஒரு சில விடயங்களில் மாற்றங்கள்  இடம்பெற ஆரம்பித்தன.

அந்த வகையில் இது எமக்கு மாத்திரமல்ல, உலகளாவிய ரீதியில் பிரான்ஸ் உள்ளிட்ட, பெரும்பாலான நாடுகள் தமது தேசிய பாதுகாப்புக்கு ஏதேவொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனும் கருத்தைக் கொண்டுள்ளன.

அதற்கமைய, இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கால நேரத்தை ஒதுக்கி, அவசரப்படாமல் அதனை மேற்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக, அமைச்சர் (சரத் வீரசேகர) தனது கருத்தை முன்வைத்தாகவும், அது தொடர்பில் காலத்துடன் திறந்த கலந்துரையாடலுடன் செயற்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தினகரன்

1 comment:

  1. நல்லது உங்கள் அசெளகரியங்களை இஸ்லாமிய தலைமைகளிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் தீர்வு காணத்தவறினால் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.