Header Ads



ஐபோன் இருக்கு, சார்ஜர் எங்க..? ஆப்பிளுக்கு 2 மில்லியன் டொலர் அபராதம்


ஐபோன் 12 தொடரில் சார்ஜர்களை சேர்க்காததற்காக பிரேசில் நாட்டு நுகர்வோர் கண்காணிப்புக் குழு ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது.

ஆப்பிள் தவறான விளம்பரங்களில் ஈடுபட்டதாகவும், நியாயமற்ற விதிமுறைகளில் சார்ஜர் இல்லாமல் ஒரு சாதனத்தை விற்றதாகவும் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியது.

அக்டோபர் 2020-ல், ஆப்பிள் ஐபோன் 12 தொடருடன் எந்த சார்ஜர் அல்லது இயர்போன்களும் அனுப்பப்படாது என்று அறிவித்தது. சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காகவே இப்படி செய்யப்பட்டது என்றும் நிறுவனம் காரணம் கூறுகிறது.

இந்நிலையில், பிரேசில் அரசாங்கம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பிரேசிலில் உறுதியான நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன என்பதை ஆப்பிள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டங்களையும் இந்த நிறுவனங்களையும் மதிக்க வேண்டும்" என்று பிரேசில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரேசிலின் நுகர்வோர் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளரான Procon-SP அமெரிக்க நிறுவனமான ஆப்பிளுக்கு இந்த அபராதத்தை விதித்துள்ளது. அபராதத்திற்கு ஆப்பிள் இதுவரை பதிலளிக்கவில்லை.

அமெரிக்காவில், ஐபோன் 12 மினியின் விலை 729 டொலர் ஆகும். பிரேசிலில், அதே தொலைபேசியின் மதிப்பு 1,200 டொலர் ஆகும். இத்தகைய நடவடிக்கைகள் நிறுவனத்தின் கார்பன் தடம் கட்டுப்படுத்த ஒரு வழி என்று ஆப்பிள் கூறுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையின் மூலம் 2 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் குறைக்கப்படும், இது ஒரு வருடத்தில் 450,000 கார்களை அகற்றுவதற்கு சமம் என்று கூறுகிறது.

இவ்வாறு பல முரண்பாடான கூற்றுகள் ஆப்பிள் நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் உலகளவில் லட்சக்கணக்கான ஐபோன் 12 சீரிஸ் மொபைல்கள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.