February 03, 2021

"ஆனந்தாவில் உங்கள் சமகால மாணவன், ஒரு தந்தை என்ற வகையிலும் உங்களை விழித்துப் பேச விரும்புகிறேன்"

 


அதிமேதகு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு 01.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே ,

எமது தாய் நாடு  73 வது சுதந்திர தினத்தை கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் அனுபவங்களைக் கொண்டவன் என்ற வகையில், 

எமது நாட்டின் நிகழ்கால மற்றும் எதிர்கால விடயங்கள் தொடர்பாக இவ்வாறு எனது கருத்துக்களை பறிமாற தீர்மானித்தேன்.

இன்று எமது தாய் நாடு பொருளாதார, சுகாதார துறைகளில் மாத்திரமின்றி, சமூக ரீதியாகவும் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.

இவ்வாறாக பல பாரதூரமான சவால்களுக்கு முகங்கொடுத்து கடந்து சென்ற பல சந்தர்ப்பங்கள் எமது கடந்த கால வரலாற்றில் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தையும் விட 73 வருடங்களுக்கு முன்னர் , எமது தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட போராட்டமானது, நாம் எதிர் கொண்ட ஏனைய சவால்களையும் விட பிரமாண்டமானதும் தீர்க்கமானதுமாகும்.

எமது நாடு முன்னோக்கிச் செல்கின்ற திசை, எதிர்கால சந்ததிகளுக்கு கையளிக்கப் போகும் நாடு என்பன  தொடர்பாக இந்த சுதந்திரம் கிடைத்த 7 தசாப்தங்களாக பல சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. 

எதிர்கால சந்ததிகளுக்கு கையளிக்கப் போகும் இந்த நாடு  குறித்த எமது கனவுகளும் அபிலாஷைகளும் அன்று போலவே இன்றும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக மழுங்கடிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியதாகும். 

நான் கல்வி கற்ற கத்தோலிக்க, முஸ்லிம், பௌத்த பாடசாலைகள் ஊடாக எனக்குக் கிடைத்த உத்வேகத்தையும் தூரநோக்கையும் அடிப்படையாகக் கொண்டு , நான் அனைத்து இன மக்களையும் ஒரே தரத்தில் வைத்து நோக்கக் கூடிய உன்னத சமூகமொன்றை தோற்றுவிப்பதற்காக எனது மாணவப் பருவத்திலிருந்தே அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றேன். 

பல்லின சமூகங்களின் பன்முகத்தன்மையை புரிந்து கொள்ளக்கூடிய, பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்கின்ற, பன்முகத்தன்மையை ஒரு சுமையாகக் கொள்ளாமல் அதனை ஒரு வளமாக கருதக் கூடிய சிறந்த சமூகமொன்றை தோற்றுவிப்பதற்கான பணியில் எனது சக்திக்கு உட்பட்ட வகையில் செயல்பட்டு வருகிறேன். எனது தந்தை மரணித்ததிலிருந்து  இரண்டு தசாப்தங்களாக குறுகிய அரசியல் நோக்கங்கள் இன்றி, தேசிய ஐக்கியத்திற்கான பாக்கிர் மாக்கார் நிலையத்தின் ஊடாக இதற்கான பங்களிப்புகளை செய்து வருகிறோம் . 

இவ்வாறாக பல்லின சமூகங்களின் பன்முகத்தன்மை ஊடாக தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் அனைவரும் உருவாக்க  விரும்பும் சுபீட்சமான இலங்கைக்குத் தேவையான அடித்தளத்தை அமைக்க முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

எமது நாடு எதிர்கொண்டிருக்கின்ற சவால்களை வெற்றி கொள்ள தேவையான முயற்சிகளை பலவீனப்படுத்தும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இன்று அதிகரித்துள்ளமை கவலைக்குரியதாகும். 

மரணித்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்ற விடயம் தொடர்பாக தற்போது இடம் பெற்று வரும் வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும், முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள மருத்து, விஞ்ஞான அடிப்படையில் அன்றி, வெறும் குறுகிய அரசியல் முகாம்களை மையப்படுத்தியவைகளாகும். 
இதன் மூலம் எமது மக்களிடையே மென்மேலும் பிரிவினைகள் தோற்றம் பெற வழிவகுக்கும். 

ஜனநாயகம், மனித உரிமை என்பன குறித்து  அதிக கரிசனை செலுத்தும் ஓர் உலகிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜனநாயக விழுமியங்கள், அவை குறித்து பொறுப்புக் கூறல் என்பன
தொடர்பாக சர்வதேச சமூகம் எமக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்குப் பதிலாக, உலகம் எம்மை முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடிய வகையில் ஜனநாயக விழுமியங்கள் கொண்ட சமூகமாக தோற்றம் பெறுவது இன்றியமையாததாகும். 

ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன குறித்து நாட்டிற்கு உள்ளே ஜனநாயக ரீதியாக பேச்சுவார்த்தை மூலமாகவும் உடன்பாட்டின் மூலமாகவும் சரியான இணக்கப்பாட்டுக்கு வருவதற்குப் பதிலாக, எமது மக்கள் தமது உரிமைக்காக சர்வதேச சமூகத்தையோ அல்லது வேறு தரப்பினரையோ நாடிச்செல்லும் வகையில் அவர்களை நிர்ப்பந்திக்கும் சூழ்நிலை தோன்றாமல் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும் என திடமாக நம்புகிறேன். 

அன்று சுதந்திர போராட்டத்தின் போது இலங்கை மக்களை இன ரீதியாக பிளவு படுத்தி பலவீனப்படுத்த, பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை ஏகாதிபத்தியவாதிகள் கையில் எடுத்திருந்தனர். தேசிய ஐக்கியத்தின் மூலமாக சுதந்திர போராட்டத்தில் ஒன்றினணந்து எழுட்சி பெறுவதை தடுப்பதற்காகவே இவ்வாறு பிரிவினைவாதத்தை பயன்படுத்தினர். 

அன்று ஏகாதிபத்தியவாதிகள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கடைபிடித்த அதே பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை 70 வருடங்களுக்குப் பின்னரும் இன்றைய அரசியல் அரங்கில் காணக்கிடைப்பது கவலைக்குரிய விடயமாகும். 

எமது மக்களை மென்மேலும் பிளவுபடுத்தும் சக்திகளையும் காரணிகளையும் தோற்கடிக்க வேண்டும்.  ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றுக்கு மதிப்பளிக்காமை என்ற காரணத்தால் எமது நாடும் மக்களும் சர்வதேச சமூகங்களால் தனிமைப்படுத்தும் நிலை தோற்றம் பெறாமல் பாதுகாக்க வேண்டியதும் எமது கடமையாகும். 

உலகில் உள்ள பிரதான மதங்களின் உயர் விழுமியங்கள் மூலமாக வளம் பெற்ற இந்நாட்டை தலைசிறந்த முன்னுதாரண நாடொன்றாக மாற்ற வேண்டியதும் எமது கடமையாகும். 

டீ.எஸ்.சேனாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபக தலைவராக அன்றி, நம் தேச பிதாவாகவே அனைத்து இலங்கையரும் அவரை கருதுகின்றனர். 

அன்று ஏகாதிபத்தியவாதிகளின் நிகழ்ச்சி நிரல்களிக்கு எதிரான போராட்டத்தின் போது டீ. பி. ஜெயதிலக, பொன்னம்பலம் ராமநாதன், ஈ. டப்ளியூ. பெரேரா, கலாநிதி டீ. பி. ஜாயா, எஸ். டப்ளியூ. ஆர். டீ. பண்டாரநாயக, எஸ். நடேசன் போன்ற தலைவர்களயும் சகல இனங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு இன பன்முகத்தன்மை ஊடாக சக்தி வாய்ந்த ஐக்கியத்தை ஏற்படுத்தி சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள ஓர் அணியில் ஒரு குடும்பமாக நின்று போராடியமையே இவர் இவ்வாரு தேசபிதாவாக நோக்கப்பட காரணமாகும். 

அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிருவாபத்துவவை பிரதிநிதித்துவப் படுத்திய உங்கள் தந்தையும், சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள டீ.எஸ்.சேனநாயக்க முன்னெடுத்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் பங்காளியாக இருந்து செயற்பட்டதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 

நான் ஓர் அரசியல்வாதியாகவோ சிவில் செயற்பாட்டாளராகவோ அன்றி ஆனந்த கல்லூரியில் உங்கள் சமகால மாணவன் என்ற வகையிலும்  இலங்கையில் உள்ள குழந்தைகளுக்கு சுபீட்சமான எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுக்க விரும்பும் ஒரு தந்தை என்ற வகையிலுமே இவ்வாரு உங்களை விழித்துப் பேச விரும்புகிறேன். 

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க இத்தருணத்தில்,  அன்று டீ.எஸ்.சேனநாயக்க போன்ற எமது தேசிய வீரர்கள் சென்ற வழியைப் பின்பற்றி, சுபீட்சத்தையும் பல்லின பன்முகத்தன்மையையும் கொண்ட ஜனநாயக இலங்கையை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க பங்களிப்பு செய்யுமாறு வேண்டுவதோடு , இன்று இலங்கையர்களின் உள்ளங்களில் பற்றி  எரியும் தீயை அணைக்க அவசியமான தீர்மானங்களை எடுக்க தைரியமாக முன் வருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

பிரதிகள் :-
# கௌரவ மஹிந்த ராஜபக்ஷ - பிரதமர்
# கௌரவ சஜித் பிரேமதாச -
எதிர் கட்சி தலைவர்

4 கருத்துரைகள்:

May Allah accept your effort and make this country better for all.

Nice letter. Here is hoping for the Best.

பொருத்தமானவரின் அறிவுரை.

இது தான் எங்களின் உள்ளக் குமுறல்களும்.
நன்றி.

Post a comment