Header Ads



சுமந்திரனுக்கான பாதுகாப்பு குறித்து பாராளுமன்றத்தில் சஜித், பொன்சேக்கா, ஹக்கீம் குரல் எழுப்பினர்


தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமாக இருந்தால், அதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவே தனித்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையின் இன்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அவருக்கு இருக்கின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் எந்த விபரங்களும் வழங்கப்படாமல் அந்த பாதுகாப்பு நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது எழுந்த அமைச்சர் சரத் வீரசேகர, தாமே அவருக்கான விசேட பாதுகாப்பை நீக்கியதாகவும், நீதிமன்றம் மற்றும் காவற்துறையினரின் உத்தரவை மீறி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் சுமந்திரன் கலந்துக் கொண்டமையாலும், சுமார் 2000 பேர் வரையில் பங்கேற்றிருந்த பேரணியில் கலந்துக் கொண்ட அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்க வாய்ப்பில்லை என்பதாலேயே அவரது பாதுகாப்பை நீக்கியதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதில் வழங்கிய சஜித் பிரேமதாச, இவ்வாறு பாதுகாப்பினை நீக்கியதன் மூலம், எம்.ஏ.சுமந்திரனின் சிறப்புரிமையும், கருத்துரிமை, நடமாட்டம், ஒன்றுகூடல், பேரணிகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இது ஒரு ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியாக அவருக்கான பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் சரத் வீரசேகரவிடம், சஜித் பிரேமதாச கோரினார்.

எவ்வாறாயினும், நீதிமன்றையும், காவற்துறையினரையும் மீறி எம்.ஏ.சுமந்திரன் அந்த பேரணியில் கலந்துக் கொண்டதாகவும், அவருக்கு காவற்துறையினரைக் கொண்டு பாதுகாப்பு வழங்குவது காவற்துறையை அவமதிப்புக்கு உள்ளாக்குவது போன்றதாகும் என்றும் கூறினார்.


இதுதொடர்பாக விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பினை, பேரணியில் கலந்துக்கொண்ட காரணத்துக்காக நீக்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இன்னும் இருப்பதால், அவதானமாக இருக்குமாறு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அமைச்சர் சரத் வீரசேகர தம்மை தனிப்பட்ட ரீதியாக எச்சரித்திருந்ததாகவும், ஆனால் தற்போது அவர் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், தம்மை கொலை செய்ய சூழ்ச்சி செய்தமை தொடர்பாக 30 பேர் வரையில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், 3 வழக்குகள் வரையில் விசாரணையில் இருப்பதாகவும் சுமந்திரன் கூறினர்.

அவ்வாறான சூழ்நிலையில், தமக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும்கூறி சுமந்திரன் ஆசனத்தில் அமர்ந்தார்.

அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்த்தர்கள் பலருக்கு அரசாங்கம் அடைக்கலம் வழங்கி, விசேட பாதுகாப்பினை வழங்கி இருக்கின்ற நிலையில், தீவிரவாதத்துக்கு எதிராக நின்ற, நடுநிலைவாதியாக செயற்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு ஏன் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.