Header Ads



வீரவங்சவுக்கும், கம்மன்பிலவுக்கும் தனித்து போட்டியிடும் சக்தி இல்லை - பிரசன்ன ரணதுங்க


விமல் வீரவங்ச, உதய கம்மன்பில போன்ற சிறிய கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு இடங்களில் கூடினாலும் அவர்களுக்குத் தனியாகத் தேர்தலில் போட்டியிடும் சக்தி இல்லை என்பதால், இறுதியில் பொதுஜன பெரமுனவிடமே வர நேரிடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று கண்காட்சி ஒன்றைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கேள்வி - விமல் வீரவங்சவால் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது தானே?

பதில் - நாங்கள் சில கட்சிகள் இணைந்து உருவாக்கிய அரசாங்கம். ஆளும் கட்சிக்குள் ஏனைய கட்சிகளை விமர்சிக்காது, கட்சிகளின் குறைகளைக் கதைக்காது இருந்தால், அமைதி பாதுகாத்துக்கொண்டு அரசாங்கம் என்ற வகையில் வலுவாகச் செல்ல முடியும். இதனால், ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு இதனைத் தீர்க்க வேண்டும்.

கேள்வி - 40 பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி அமைச்சர் விமல் வீரவங்ச மீது குற்றம் சுமத்தினாரே?

பதில் - அனைவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தமது கட்சிக்குச் சேதம் ஏற்படும் போது அவர்கள் முன்வந்து குரல் கொடுப்பார்கள்.

இந்த விடயம் இத்தோடு முடிந்து விடும் என நினைக்கின்றேன்.கேள்வி - நீங்கள் எந்த பக்கம் இருப்பீர்கள்?

பதில் - நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருக்கின்றேன்.

கேள்வி - அமைச்சர் அவர்களே கட்சித் தலைவர்கள் சிலர் இணைந்து தனியாகப் பயணிக்க முயல்கின்றனர். அமைச்சர் விமல் வீரவங்சவின் வீட்டில் கூட்டம் நடத்தப்பட்டதை நாங்கள் பார்த்தோம்.

பதில் - அவர்கள் இணைந்து பணியாற்றினாலும் இறுதியில் எங்களுடனேயே இணைய வேண்டும். தனித்துப் போட்டியிட்ட என்ன நடக்கும்?. அவர்களுக்கு அப்படியான பயணத்தைச் செல்ல முடியாது.

No comments

Powered by Blogger.