Header Ads



நாட்டில் இருப்பது மனிதாபிமானமிக்க இராணுவம், தடுப்பூசியை உண்மையான இலங்கையர் மறுக்கமாட்டர்


- லோரன்ஸ் செல்வநாயகம் -

இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியை பெற மறுப்பவர்கள் எவரும் உண்மையான இலங்கையராக இருக்க முடியாதென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள தயாரில்லையென தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இருப்பது மனிதாபிமானமிக்க இராணுவமாகும். எமக்கு மறைப்பதற்கு எதுவும் கிடையாது நாட்டு மக்களின் மனங்களை தட்டிக் கேட்டால் அது புரியும்.

நாட்டில் முப்படையினர் எத்தகைய மனிதாபிமான மிக்கவர்கள் என்றும் அத்தோடு தமது முதன்மையான கடமையாக நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பையும் அவர்கள் மேற்கொள்வது நாட்டு மக்களுக்குப் புரியும்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மேற்படி கூற்று தொடர்பில் மக்கள் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ வைத்தியசாலைகளிலிருந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதை இவர்கள் மறுக்க முடியாது. உண்மையான இலங்கையர்கள் என்றால் அவ்வாறான அறிக்கையை அவர்கள் விடமாட்டார்கள். இலங்கையர்கள் அல்லாதவர்களே இலங்கை இராணுவத்தினர் மீது இவ்வாறான அபிப்பிராயங்களை கொண்டிருக்க முடியும்.

இது ஜனநாயகத்தை உயர்வாக மதிக்கின்ற ஒரு நாடு. அத்தகைய நாட்டில் எவரும் தங்கள் விருப்பப்படி எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியும். ஏனெனில் தடுப்பூசி பலவந்தமாக யாருக்கும் செலுத்தப்பட மாட்டாது.

தடுப்பூசியை இராணுவ வைத்தியசாலைகளில் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு தனிநபராக அல்லது குழுவாக விரும்பவில்லையென்றால் அது அவர்களின் தனிப்பட்ட தீர்மானமாகும். அதனூடாக அவர்களது மனோ நிலையை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இது மக்கள் மீதான அவர்களது அக்கறையின்மையையே காட்டுகின்றது.எவ்வாறெனினும் நாங்கள் எந்த பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என கருதியே சேவையாற்றுகின்றோம் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. YOUR NUMBER 1 BROKER HOW MUCH GIVEN MONEY BYCHINA VIRUS GOVERMENT SELLING FAKE MEDICINE

    ReplyDelete

Powered by Blogger.