February 12, 2021

நாகூர் பிச்சை எனும் ஆலமரம


- Fazlin Wahid -

சமூக சேவை என்பது தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. பணம், பொருள், காலம், உழைப்பு இவற்றையெல்லாம் இழந்துதான் சமூக சேவை செய்ய  வேண்டும். சமூக சேவைகளில் இறங்கி பல்வேறு காரணங்களை வைத்து இடைநடுவில் சமூக தூர விலகி நின்றவர்கள் பலர். எவ்வளவுதான் தூய  எண்ணங்களுடனும்  கைகளில் எந்த ஒரு கறையும் இல்லாமல் சேவையாற்றினாலும்  அதனை எதிர்ப்பதற்கு ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவற்றையெல்லாம் பொருட்படுத்தினால் சமூக சேவையில் ஈடுபட முடியாது. தனது வாழ்நாள் முழுவதையும் சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்ட பலரும் இருக்கின்றார்கள்.

கண்டி 

மத்திய தென்னக்கும்புர  YMMA என்பது இலங்கையில் முன்னணியில் இருக்கும் ஒரு சமூக சேவை நிறுவனம் ஆகும். ஏறக்குறைய கடந்த ஐந்து தசாப்தங்களாக இது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.சற்று நோய் வாய்ப்பட்டு இருக்கும் அதன் ஆயுட்காலப் பொதுச் செயலாளர் ஜனாப் . நாகூர் பிச்சை அவர்களுடன் அண்மையில்  உரையாடக் கிடைத்தது..1974 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கத்தின் ஆரம்பகர்த்தாவாக இவருடன் மாத்தளை சாஹிராக் கல்லூரியில் அதிபராக இருந்த காலம் சென்ற ஜனாப் வதூட் அவர்களும் இருந்துள்ளார்.1991 ம் ஆண்டு பாராளுமன்ற சட்ட மூலம் ஒன்றின் மூலம் இதனை  கூட்டிணைக்கப்பட்டதற்கு மூலகாரணமாக இருந்த காலஞ்சென்ற பலாங்கொடை தொகுதி M.P.அபுசாலி அவர்களையும் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட கண்டியில் வசிக்கும் சட்டத்தரணி S.F.M.சவாஹிர் அவர்களையும் அவர்  நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தொடர்ந்து பல சமூக சேவைகளை ஆற்றி வரும் இந்நிறுவனம் பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக , பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி உள்ளது.அதற்கு மேலாக வறியவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு ,நோய் சிகிச்சை உதவி  போன்ற வாழ்வாதார உதவிகளையும் செய்து வருகின்றது.இதற்கான நிதியுதவிகளை உள்நாட்டு, வெளிநாட்டு வள்ளல்கள் வழங்கி வந்தாலும் கடந்த  இரண்டு வருடங்களாக சற்றுத் தடைப்பட்டுள்ளது . இந்நிறுவனத்தின் நிதி உதவியை பெற்ற பல்லாயிரக்கணக்கான வைத்தியர்கள் பொறியியலாளர்கள் சட்டத்தரணிகள் பொருளியலாளர்கள் ...என்று பல்வேறுபட்ட துறையினரையும் உள்ளனர் என்று மகிழ்ச்சியாக அவர் கூறியதுடன் இன்று நிதி உதவிகள் குறைவின் காரணமாக உதவிகளை சற்று குறைக்க வேண்டி இருப்பதை இட்டு  கவலையும் அடைந்தார்.

அதேபோல் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சமூகத்துக்கு எதிராக  எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் தனது கண்டன அறிக்கையை எழுதுவதற்கு ஜனாப் நாகூர் பிச்சை அவர்கள் தவறமாட்டார். தான் செய்த சமூகசேவைகளிற்கு சான்றாக ஆவணங்கள் பெட்டி பெட்டியாக இருக்கின்றன என்றும் கூறியதுடன் தனக்குப்  பிறகு இந்நிறுவனத்தை வெற்றிகரமாக நடாத்திச் செல்ல ஒருவர் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் கவலையையும் வெளிப்படுத்தினார். மேலும் தொடர்ந்து 46 வருடங்களாக முழு நேரத்தையும் சமூக சேவையில் அர்ப்பணித்துள்ளேன். தூய்மையாகவே எனது பணியை தொடர்ந்துள்ளேன் என்பது மட்டுமல்லாமல் எந்த ஒரு சிறு களவும் நான் அறிந்த வகையில் செய்யவில்லை என்றும் தைரியமாக பெருமையுடன் கூறினார்.

கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவிகளை பெற்று பின்னர் உயர் பதவிகளை வகிக்கும் காலங்களில் உதவிய நிறுவனங்களை மீண்டும்  எட்டியும் பார்க்காத பலர் நம் சமூகத்தில் உள்ளனர் என்பதும் கசப்பான உண்மையே .அவர்களில் பலரும் நினைப்பது வெளிநாட்டு உதவிகளுடன் இவ்வாறான நிறுவனங்கள் செயலாற்றுகின்றன என்றும் அவற்றை வழிநடத்துவோர் இதன் மூலம் பல்லாயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர் என்றும் தான்.அது அவர்கள் உதவி  செய்யாமல் தவிர்ப்பதற்கு தமக்குத்தாமே தேடிக்கொள்ளும் காரணங்கள் மட்டுமே அன்றி வேறு எதுவும் அல்ல.

நாகூர் பிச்சை அவர்களின் நல்ல சுகத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டுவதுடன் இவ்வாறான நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவது தான் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வழிகோலும் என்றும் கூறி விடைபெறுகின்றேன்.

3 கருத்துரைகள்:

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்

@Saninthamruthuran did not understand this article very well.

ஆயுள் கால தலைவராக அல்லது செயலாளராக இருந்துகொண்டு அடுத்து தனக்குப் பின்னர் இதனை கொண்டு செல்ல வேறு ஒருவரை ஒருவர் இல்லை என்று கவலைப்படுவதை என்னவென்று சொல்வது

Post a comment