Header Ads



இனவாதிகளுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை, முஸ்லீம் சமூகம் வழங்கக் கூடாது


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

முஸ்லிம் சமூகத்தின் மீது எந்த அடிப்படையும் இன்றி வீண் பழிகளையும் குற்றச்சாட்டுக்களையும் சுமத்துவதற்கென்றே ஒரு கூட்டம் சந்தர்ப்பம் எதிர் பார்த்துக் கொண்டிருப்பதை முஸ்லீம்களாகிய நாம் அறியாமல் இருக்க முடியாது.

 இஸ்லாமிய பெயர் கொண்டவர்களால் தவறேதும் நடந்து விட்டால் தவறை ஆராயாமல் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தின் மீதும் இல்லாத பொல்லாத பழிகளை சுமத்தி அவர்களின் உயிர்கள், உடமைகள், பள்ளிகள், பொருளாதாரம் என்பவற்றை அழிப்பதற்கென்றே அந்த வெறி பிடித்த கூட்டம் சந்தர்ப்பம் பார்த்து நிற்கின்றார்கள் என கிண்ணியா நகர சபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (06) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்

இந் நாட்டின் சிறுபான்மை இனமாகிய நாம் நமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் எதிர்காலத்தில் இச் சமூகம் அழுத்தங்கள், தொல்லைகள் இன்றி நிம்மதியாக  வாழ்வதற்கும்  நாளாந்த செயற்பாடுகளில் கூட மிகவும் நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

நாட்டின் இறைமை சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வதோடு ஏனைய சமூகங்களோடும் அன்பாகவும் பண்பாகவும்  வாழ்வதன் மூலமே நாம் வெற்றி காண வேண்டும்.

ஓரிருவர் செய்கின்ற செயல்களால் ஒட்டுமொத்த சமூகத்திற்கும், தலைமைகளுக்கும் சிலவேளை அப கீர்த்தியையும், விமர்சனங்களையும் உண்டாக்குகின்றது.

 சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுதல், போக்குவரத்து சட்ட விதிகளை மீறுதல், போதைப்பொருள், பாவனை, விற்பனை,  போன்ற பாதகச் செயல்களிலும் ஒரு சில தஃவா அமைப்புகளின் கடிந்த செயற்பாடுகள்  போன்றவற்றிலும் கூட நாம் விமர்சிக்கப் படுகிறோம். இவ்வாறான விடயங்களில் அனைவரும்  மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டி இருக்கின்றது.

உதாரணமாக

1)கொத்து ரொட்டி பிரச்சனை

2)கண்டி திகன பிரச்சினை

3)சஹ்ரானது பிரச்சனை என்பவற்றில் முஸ்லீம் சமூகத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டோம். நடந்த அநியாயங்களை சுட்டிக்காட்டி நீதியை பெற்றுத் தாருங்கள் என்று கேட்ட தலைமைகளைக் கூட இனவாதிகள் என்று விமர்சித்தார்கள். 

எனவே எதிர்காலத்திலும் இவ்வாறான  கசப்பான சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பளிக்கப் படாதவகையில் கவனமாகவும் நிதானமாகவும் ஒவ்வொருவரும் நடந்து கொள்வது அவசியமாகும் என்றார்.

No comments

Powered by Blogger.