Header Ads



சில அரசியல்வாதிகளின் குடியியல் உரிமை பறிக்கப்படுமா..? ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரம்..!


- மகேஸ்வரி விஜயனந்தன் -

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சார்பில், ஜனாதிபதி செயலாளர் கையொப்பத்துடன், ஜனாதிபதி விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவானது குடியியல் உரிமைகளைப் பறிக்கும் பரிந்துரைகளை முன்வைக்கக்கூடிய விசேட அதிகாரம் கொண்ட ஆணைக்குழுவாகும்.

 அரசியல் பழிவாங்கல் தொடர்பில் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, இலக்கம் 8,9,10 ஆகியவற்றுக்கான தீர்மானங்களை எடுக்கும் பரிந்துரைகளை விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவால் முன்வைக்க முடியும்.

 அவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்படுமாயின், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், அக்கூட்டமைப்பின் மற்றுமோர் எம்.பியான எம்.ஏ சுமந்திரன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் குற்றவாளிகளாக்கப்படுவர். 

அவர்களுடன், தேசிய மக்கள் சக்தியின் எம்.பியும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர திஸாநாயக்க,  ஜே.சி. வெலியமுன உள்ளிட்ட இன்னும் சிலர் குற்றவாளிகளாக இனங்காணப்படுவர். 

ஜனவரி 29ஆம் திகதியன்று வெளியிடப்பட்டிருக்கும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் தம்மிக்க பிரியந்த சமரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன், உயர்நீதிமன்ற நீதியரசர் கேகா குமுதினி விக்கிரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ரத்னபிரிய குருசிங்க ஆகியோர் அடங்குகின்றனர். 

இந்த ஆணைக்குழு, தனது பரிந்துரையை 2021 ஏப்ரல் 29ஆம் திகதின்று முன்னர் வழங்கவேண்டும். தேவையேற்படின் விசாரணைகளை மிகவும் இரகசியமான முறையில் முன்னெடுக்க முடியும். அதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 2015 ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகி, 2019 நவம்பர் 16ஆம் திகதி நிறைவடைந்த கால எல்லைக்குள், அல்லது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அல்லது ஓகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலுக்கு முன்னர், பதவிகளை வகித்த அரச உத்தியோகஸ்தர்கள், அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டனரா என்பது தொடர்பில் விசாரணை செய்வதற்காக, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. 

அந்த ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகளை பரிந்துரை செய்வதற்கு அல்லது பாராளுமன்றத்தால் பரிந்துரை செய்யப்படும் வேறு பொருத்தமான நடைமுறையை உருவாக்குவதற்கு அமைச்சரவையால் அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அங்கிகாரத்தின் பிரகாரமே விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதி விசேட வர்த்தமானியில், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் அறிக்கையில்,  பரிந்துரைக்கப்பட்டு உள்ளமைக்கு அமைய, பிரதிவாதிகளுக்கு,

1.இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழிகளை மீறுவதன் ஊடாக, அரசியலமைப்பின் விதிகளை மீறுதல்

2.அதிகார துஸ்பிரயோகம், குறுக்கீடு, மோசடி, ஊழல், நம்பிக்கையை மீறுதல்,

3.ஒருவர் மீது அரசியல் ரீதியாகப் பழிவாங்கல்

4.எந்தவொரு நியமனம்,இடமாற்றம்,பதவி உயர்வு,  பணி நீக்கம் அல்லது ஏதாவது முறைகேடு, எழுதப்பட்ட சட்டத்தை மீறுதல் என்பவை இடம்பெற்றிருப்பின், பிரதிவாதிகள் இந்த விடயங்களுக்கு எத்தகைய பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பது குறித்து, மேலதிக விசாரணை செய்து, அறிக்கையிடுதல் ஆணைக்குழுவுக்கு பகிரப்பட்டுள்ளது.

5.இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 8ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளின் படி, அந்த அறிக்கைக்கமைய, நபரொருவரின் குடியியல் உரிமையை இல்லாமல் செய்வதற்கும் பரிந்துரைகளை முன்வைக்கமுடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. அதிக அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆணைக்குழுவுக்கு குற்றவாளிகளின் குடியுரிமையை நீக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் குற்றவாளிகள் இனம்காணப்பட்டு அவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு அவர்களின் குடியுரிமை நீக்கும் 'ஆணைகளும் வௌிவருகின்றன. இதற்குத் தான் உலகில் எதற்கும் இணையில்லாத நாடு இலங்கை' எனக்கூறப்படுகின்றது.ஒரே நாடு ஒரே சட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.