Header Ads



கொழும்பு துறைமுகத்தினாலேயே, பண்டாரநாயக்கவின் உயிர் பலியானது - டியூ குணசேகர


கொழும்பு துறைமுகம் நாட்டின் பொருளாதார மையம் - இதனை எந்த நாட்டுக்கும் பலிகொடுக்காமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு முதலீடாக வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டார நாயக்க உயிரை தியாகம் செய்து பாதுகாத்த கொழும்பு துறைமுகத்தை சீனாவுக்கோ இந்தியாவுக்கோ அல்லது வேறு யாருக்கேனும் பலிகொடுக்காமல் உயிரை பணயம் வைத்தேனும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

கொழும்பு துறைமுகம் என்பது எமது நாட்டின் பொருளாதார மையம் என்பதுடன் தேசிய சொத்தாகும். அதனை பாதுகாப்பது எமது கடமை.

இந்தியாவில் அம்பானி மற்றும் அதானிக்கு எதிராக 25 மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அவர்களில் ஒருவருக்கே எமது அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

துறைமுகத்தை பெற்றுக்கொள்ள இந்திய பிரதமர் மோடி, அதானியை பெயரிட்டு அனுப்பி இருக்கின்றார்.

இந்தியா இன்று அமெரிக்காவுடன் வெளிப்படையாகவே தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றது. பிளவுபடாத கொள்கையில் இருந்து விலகி இந்தியா அமெரிக்காவுடன் ஏகாதிபத்தியவாத போக்கை ஆரம்பித்திருக்கின்றது. அதனால் இந்த நிலைமைக்கு இடமளிக்கக்கூடாது.

துறைமுகம் மற்றும் விமான நிலையங்களினூடாகவே எமது இறையாண்மை வெளிப்படுத்தப்படுகின்றது. நாட்டுக்குள் எந்த முதலீடுகளை மேற்கொண்டாலும் எமக்கு பிரச்சினை இல்லை. துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் எமது நாட்டுக்கு உரியதாகவே இருக்கவேண்டும்.

ஆங்கிலேயர், போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் துறைமுகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே இலங்கைக்கு வந்தனர்.

அத்துடன் கொழும்பு துறைமுகத்தை மக்கள் மயமாக்குவதாக தெரிவித்தே 1956இல் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க அதிகாரத்துக்கு வந்தார்.

அன்று தேர்தலில் அதுவே பிரதான பேசுபொருளாக இருந்தது. அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அது பிரதான பிரச்சினையாக இருந்தது. அதனால் பண்டார நாயக்க தேரர் ஒருவர் மூலமாக கொல்லப்பட்டார்.

எனவே கொழும்பு துறைமுகத்தினாலேயே பண்டாரநாயக்கவின் உயிர் பலியானது. நாட்டின் தலைவர் தனது உயிரை தியாகம் செய்தே இந்த துறைமுகத்தை பாதுகாத்தார்.

அதனால் நாட்டின் பொருளாதார மையமான கொழும்பு துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையிடம் கேட்கின்றோம் என்றார்.

ibc

3 comments:

  1. இலங்கை அரசியலில் மூத்த ஒரு அரசியல் ஞானியும், தலைசிறந்த பொருளாதார விற்பன்னருமான டி.யூ அவர்களின் கருத்தை அரசாங்கம் கவனமாக ஆராய்ந்து நாட்டு நலன் கருதி முடிவெடுக்கும் என பொதுமக்களாகிய நாம் எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete
  2. கேடுகெட்ட இந்தியா இலங்கைக்குள் வருவது இலங்கையின் எதிர்காலத்தை சூனியமாக்காமல் விடாது

    ReplyDelete
  3. Nsk விளங்கியது போல் yellarukum vilankavendum

    ReplyDelete

Powered by Blogger.