Header Ads



ஜனாஸாக்களை எரிப்பதற்கு விரைவில் முற்றுப்புள்ளி, உள்நாட்டிலேயே அடக்க தீர்மானம் எடுக்கப்படலாம் - Dr ஹேமந்த ஹேரத்



- எம்.எப்.எம்.பஸீர் -

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிரான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளவர்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைக்கு இவ்வாரத்துக்குள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உணர்வு பூர்வமான பிரச்சினைக்கு தீர்வாக, கொங்றீட் அடக்கஸ்தலங்களை (கல்லறைகள்) பரிந்துரைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கொவிட் 19 நிலைமையால் உயிரிழப்போரின் ஜனாஸாக்கள், சடலங்கள் தொடர்பிலான இறுதிக் கிரியை முறைமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள நிஉபுணர்களைக் கொன்ட தொழில்நுட்பக் குழுவுக்கு, இது குறித்த பரிந்துரை முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் இதன் இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பனிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, ஜனாஸா விவகாரத்தில் ஏற்பட்டுள்ள உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யபப்டுவதற்கு பாரிய எதிர்ப்புக்கள் எழுந்துளளன. குறிப்பாக, உலக சுகாதார ஸ்தாபனம் தகனம், அடக்கம் ஆகிய இரண்டுக்கும் அனுமதியளித்துள்ள பின்னணியில், இலங்கையில் தகனத்தை மட்டும் வலியுறுத்துவது சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கத்தோலிக்கர்களின் மத நம்பிக்கை மீதான அடக்குமுறை என பலரும் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் இது தொடர்பில் 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் உயர் நீதிமன்றில் முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்களால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை விசாரணைக்கு ஏற்காது உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் ஆராயப்பட்டன. குறிப்பாக மதம் சார்ந்த நம்பிக்கைகளை வலுக்கட்டாயமாக தடுப்பதன் ஊடாக கொரோனா பரவல் நடவடிக்கைகளுக்கும் அது பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான பின்னணியில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பாகிஸ்தான் அல்லது மாலைதீவுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வது தொடர்பில் முஸ்லிம் சமூகம் ஆராய்ந்தது. இவ்வாறான பின்னணியிலேயே, குறிப்பாக இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தமது நாட்டில் அடக்கம் செய்ய தயார் என மாலைதீவு இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இந் நிலையில் பெரும்பாலும் இவ்வாரம், சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு ஊடாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதியளிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதுடன், அதனையடுத்து உள்நாட்டிலேயே ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படலாம் என தெரிய வருகிறது.

1 comment:

  1. கடும் நோயான எய்ட்ஸ் மரணங்கள் இதட்கு முன் இலங்கை மண்ணில் அடக்கம் செய்யவில்லையோ?அப்படியானால் அதன் மூலம் நீர் நிலங்கள் எல்லாம் நோய்வாய்ப்பட்டு இருக்குமே !

    ReplyDelete

Powered by Blogger.