Header Ads



குண்டுதாரி தொடர்பில், ரியாஜ் பதியூதின் வெளிப்படுத்திய தகவல்


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதயூதீன், சாட்சி வழங்க நேற்று (14) ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

இதன்போது தான் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் ஊடக செயலாளராகவும் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் கடமையாற்றியதாக ரியாஜ் பதியூதின் சாட்சி வழங்கலின் ஆரம்பத்திலேயே கூறினார். 

இதன் போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி அவரிடம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் தொடர்ச்சியாக சினமன் கிரேண்ட் ஹோட்டல் மீது தாக்குதலை நடத்தியது இன்சாப் அஹமட் தானே என வினவினார். 

இதற்கு பதிலளித்த ரியாஜ் பதியூதின் ´ஆம் நான் அவரை தொலைக்காட்சிகளில் கண்டேன்´ என பதிலளித்தார். 

இதன் போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி அவரிடம், இன்சாப் ஹகமட் திருமணம் முடித்திருப்பது யாரை என வினவினார். 

அதற்கு பதிலளித்த ரியாஜ்; பதியூதின், ´அவர் எமக்கு தொலைதூர உறவினரான அலாவூதீன் என்பவரின் மகளை திருமணம் முடித்துள்ளார். அவர்களின் திருமணத்தில் நான் கலந்து கொண்டபோது இன்சாப் ஹகமட்டை அறிந்துக் கொண்டேன்.´ ஏன்றார். 

திருமணத்திற்குப் பின்பு அவர் உங்களுடன் தொலைபேசி உரையாடல்களைக் மேற்கொண்டாரா? எனவும் நீங்கள் அவருடன் நட்பு கொண்டிருந்தீர்களா? என்றும் அரச சிரேஸ்ட சட்டத்தரணி அவரிடம், வினவினார். 

இதற்கு பதிலளித்த ரியாஜ் பதியூதின் ´ஆம், நாங்கள் தொலைபேசி உரையாடல்களைக் மேற்கொண்டிருந்தோம், ஆனால் ஒருபோதும் நண்பர்களாகவில்லை´ என்றார். 


அப்போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி அவரிடம், ´இன்சாப் அஹமட் ஒரு செப்பு தொழிற்சாலையை நடத்தினார் என்பது 2019 ஏப்ரல் 21 ஆகும் போது உங்களுக்குத் தெரியுமா?´ என வினவினார். 

´2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலேயே நான் அதைப் பற்றி அறிந்துக் கொண்டேன். ஏற்றுமதி பிரச்சினை தொடர்பில் எனது சகோதரர் ரிசாத் பதியுதீனை சந்திக்க விரும்புவதாக கூறினார். பின்னர் ஒரு நாள் நான் அமைச்சில் வேலை செய்துக் கொண்டிருந்த போது இன்சாப் என்னுடன் மீண்டும் பேசினார். நான் வேலையில் அமைச்சில் இருப்பதாக அவரிடம் சொன்னபோது, அவர் என்னைப் அங்கு பார்க்க வந்தார். அவர் நீங்கள் ஏன் உங்கள் சகோதரரை பார்க்க அனுமதிப்பதில்லை எனவும் நான் அவர் மீது வழக்குத் தொடரப் போகிறேன்,´ என்றும் கூறியதாக ரியாஜ் பதியூதின் கூறினார். 

இதன்போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி ரியாஜ் பதியூதினிடம் ´உங்கள் தொலைப்பேசி இலக்கத்தை இன்சாப் அஹமட் எவ்வாறு பெற்றார்´ என கேட்டார். 

இதற்கு பதிலளித்த ரியாஜ்; பதியூதின், ´அது தொடர்பில் தெரியாது´ என பதிலளித்தார். 

உங்களுக்கும் இன்சாப் அஹமட்டுக்கும் இடையே எத்தனை தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றன? என ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினார். 

´குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஏழு அழைப்புகள். ஆனால் அவை எதுவும் என்னால் எடுக்கப்படவில்லை அல்ல. நான் அவருக்கு 2019 இல் அழைப்பை மேற்கொள்ளவில்லை. அவர் அதற்கு முன்பே அழைப்பை எடுத்திருக்க வேண்டும்´ என ரியாஜ் பதியூதின் கூறினார். 

´நீங்களும் இன்சாப் அஹமட்டும் கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா?´ என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி வினவினார். 

இதற்கு பதிலளித்த ரியாஜ் பதியூதின் ´இல்லை, நான் அவரை வெளியே எங்கேயும் சந்திக்கவில்லை´ என சாட்சியாளர் பதிலளித்தார்.

No comments

Powered by Blogger.