Header Ads



ஜனாஸா விவகாரம் - ஹர்ஷ சில்வாவும், திஸ்ஸ அத்தநாயக்கவும் சொல்வது என்ன..??


கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கான இறுதிக்கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவான மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருந்தமையைத் தொடர்ந்து, அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறான கோரிக்கையொன்றை அரசாங்கம் முன்வைத்திருப்பது தொடர்பில் எதிரணியினரின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள முற்பட்டபோது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தனர்:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா

'இவ்விடயத்தைப் பொறுத்தவரையில் நாடு என்ற வகையில் நாம் மிகவும் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் எமது நாட்டின் பிரஜைகள் தொடர்பான பொறுப்பு எமது நாட்டிற்கே இருக்கின்றது. நான் வெளிவிவகார அமைச்சில் இருந்தபோது, வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கைப் பிரஜையின் உடலை மீண்டும் எமது நாட்டிற்கே கொண்டுவருவதற்கு நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். 

அதனடிப்படையில் நோக்குகையில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் மோசமானதாகும். எமது ஜனாதிபதி மாலைதீவின் ஜனாதிபதியிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைத்தார் என்பதை என்னால் நம்பக்கூட முடியவில்லை' என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க

'முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் மதநம்பிக்கை மற்றும் அவர்களின் உணர்வுகள் தொடர்பில் கவனம்செலுத்தி, தீர்மானம் எடுக்கவேண்டியது மிகவும் அவசியமானதாகும். 

இதுகுறித்து ஆராய்வதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக்குழுவினாலும் இதுவரையில் எதுவும் கூறப்படவில்லை. ஆகவே உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாகவே இவ்விடயத்தின் சுமூகமான தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும்' என்றார்.

No comments

Powered by Blogger.