December 16, 2020

ஒசாமாவின் உடல், கடலில் அடக்கம் செய்யப்பட்டது - ஒபாமாவின் சுயசரிதையில் தெரிவிப்பு


பராக் ஒபாமா தனது சுயசரிதையான ' தி ப்ராமிஸ்ட் லேண்ட்' -ல், "9/11 இன் 9 வது ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்பு, சிஐஏ இயக்குநர் லியோன் பனெட்டாவும் அவரது துணை அதிகாரியான மைக் மோரலும் என்னைச் சந்திக்க நேரம் கேட்டனர். அப்போது, ஒசாமா பின்லேடனைப் பற்றிய ஆரம்பகால துப்பு திரட்டியுள்ளதாக லியோன் கூறினார்" என்று எழுதியுள்ளார்.

"நமது உளவாளிகள், அபு அஹ்மத் அல் குவைதி என்ற ஒருவரைக் கண்டுபிடித்துள்ளனர், அவர் அல் கய்தாவுக்கு தூதராக பணியாற்றுகிறார், ஒசாமா பின்லேடனுடன் நெருங்கிய உறவைக் கொண்டவர். நமது உளவாளிகள் அவரது தொலைபேசி மற்றும் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர். இதன் மூலம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள அபோட்டாபாத் நகரின் புறநகரில் உள்ள ஒரு பெரிய வளாகத்தை அவர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த இடத்தின் அமைப்பையும் அளவையும் பார்த்தால், அல்-கய்தாவுடன் தொடர்புடைய ஒரு பெரிய நபர் அங்கு வசிப்பதாகத் தெரிகிறது என்று மைக் கூறினார். "

ஓவல் அலுவலகத்தில் சில கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், ஆனால் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு என் சகாக்களான ரெஜி லவ், மார்வின் நிக்கல்சன் மற்றும் பீட் ரூஸ் ஆகியோரை ஓவலின் சாப்பாட்டு அறையில் அழைத்தேன். நாங்கள் 'ஸ்பேட்ஸ்' விளையாட ஆரம்பித்தோம். ஈஸ்டர்ன் ஸ்டாண்டர்ட் நேரத்தின்படி, சரியாக 2 மணியளவில், இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் ஜலாலாபாத் விமான தளத்திலிருந்து அபோட்டாபாத் வளாகத்திற்குப் பறந்தன. சீல் குழுவில் 23 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுடன் ஒரு பாகிஸ்தான் மொழிபெயர்ப்பாளர் மற்றும் ராணுவ நாய் கெய்ரோவும் இருந்தது. " என்று ஒபாமா எழுதியுள்ளார்.

ஒபாமா ஓவல் அலுவலகத்திலிருந்து சிச்சுவேஷன் ரூம் சென்றார். அங்கு லியோன் பனெட்டா, சிஐஏ தலைமையகமான லாங்லியிலிருந்து வீடியோ கான்ஃபெரன்ஸ் லைன் வழியாக இணைக்கப்பட்டார்.

அட்மிரல் மெக்ரெவன் ஜலாலாபாத்தில் இருந்தார், சீல்ஸுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார். டாம், ஹிலாரி, ஜோ பைடன், டென்னிஸ் மெக்டானோ, கேட்ஸ், முலென் மற்றும் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் மாநாட்டு மேசையில் அமர்ந்திருந்தனர். தாக்குதல் திட்டத்தின் வெற்றி அல்லது தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு எவ்வாறு தகவல் தெரிவிக்கப்படும் என்பது குறித்து ஒபாமாவுக்கு விளக்கமளிக்கப்பட்டது. ஒபாமா சிறிது நேரம் மாடிக்குச் சென்றார், ஆனால் அப்போது, பனெட்டா, பிளாக் ஹாக்ஸ் அபோட்டாபாத்தின் வளாகத்தில் இறங்கப்போவதாக அறிவித்தார்.

நேரலையில் கவனம் செலுத்திய ஒபாமா

ஒபாமா எழுதுகிறார், "இலக்கை நோக்கி ஹெலிகாப்டர் தரையிறங்கியவுடன் நான் என் நாற்காலியில் இருந்து எழுந்து நின்றேன். நான் அதைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னேன். இந்தப் பயணத்தின் நேரலை வரும் அடுத்த அறைக்குச் சென்றேன்.

அங்கு நீல நிற சீருடையில் விமானப்படை படைப்பிரிவு ஜெனரல் பிராட் வெப் ஒரு மேஜையில் கணினிக்கு முன்னால் அமர்ந்திருந்தார், அவர் எனக்கு நாற்காலியைக் கொடுக்க முன்வந்தார். ஆனால் நான் அவரது தோள்பட்டையை அழுத்தி உட்காரச் சொன்னேன். நான் கான்ஃப்ரன்ஸ் அறையிலிருந்து வந்து தனது அறைக்குள் நுழைந்து நேரலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாக வெப் உடனடியாக மெக்ரெவனுக்குத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் எனது சகாக்களும் அந்த சிறிய அறையில் கூடினர்."

ஒபாமா அங்கே உட்கார்ந்த அடுத்த நிமிடம், ஒரு ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர், கீழே இறங்கியபடியே தள்ளாடியதைக் கண்டார். என்ன நடக்கிறது என்று அவர் புரிந்து கொள்ளுமுன், மெக்ரெவன், ஹெலிகாப்டரின் ஒரு இறக்கை வளாகத்தின் சுவரில் மோதியது என்று தெரிவித்தார்.

"ஒரு கணம், நான் மிகவும் பயந்தேன், ஏதோ கெடுதல் நடக்கப்போகிறது என்று தோன்ற ஆரம்பித்தது. உடனே, 'எல்லாம் சரியாகிவிடும்.' என்ற மெக்ரெவனின் குரல் என் காதுகளில் எதிரொலித்தது. அவரின் குரலில் இருந்த தொனி, ஏதோ ஒரு ஷாப்பிங் மாலில் ஒரு கார், ஷாப்பிங் டிராலியுடன் மோதியது போல இருந்தது. அவர் நமது சிறந்த விமானி என்றும் அவர் ஹெலிகாப்டரை பாதுகாப்பாகத் தரையிறக்குவார் என்றும் மெக்ரெவன் தெரிவித்தார். அப்படியே தான் நடந்தது"

"இருபது நிமிடங்களுக்கு, அங்கு என்ன நடக்கிறது என்பதை மெக்ரெவனால் கூட முழுமையாகக் காணமுடியவில்லை. திடீரென்று, மெக்ராவன் மற்றும் பனெட்டா இருவரும் நாங்கள் ஆவலுடன் காத்திருந்த வார்த்தைகளைச் சொன்னார்கள் - "ஜெரோனிமோ ஈ.கே.இ.ஏ (எனிமி கில்ட் இன் ஆக்ஷன் ) '. அறையில் இருந்த அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். வீடியோ காட்சி மீதே என் கண்கள் இருந்தன. நான் மெல்லிய குரலில் " வீ காட் ஹிம்(we got him)" என்று கூறினேன். " என்று ஒபாமா எழுதுகிறார்.

அடுத்த 20 நிமிடங்களுக்கு யாரும் இடத்தை விட்டு அசையவில்லை

ஹெலிகாப்டர்கள் திரும்பத் தயாரான போது, ஜோ பைடன், ஒபாமாவின் தோள்களைப் பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஒபாமா எழுந்து, அங்கிருந்த அனைவருக்கும் கை கொடுத்தார். ஆனால், பாகிஸ்தான் எல்லையை விட்டு ஹெலிகாப்டர் வெளிவரும் வரை அனைவரும் மௌனமாகக் காத்திருந்தனர். ஆறு மணிக்கு ஹெலிகாப்டர்கள் ஜலாலாபாத்தில் தரையிறங்கிய பிறகு தான் ஒபாமாவுக்கு உயிரே வந்தது போலிருந்தது.

வீடியோ கான்ஃப்ரன்ஸில் மெக்ரெவன் அவரிடம், "நான் உங்களுடன் பேசும்போது, லேடனின் உடல் எனக்கு முன்னால் கிடந்தது. எனது அணியின், ஆறு அடி இரண்டு அங்குல உயரமுள்ள ஒரு வீரரை லேடனின் உடலுக்கு அருகில் கிடத்தி, இறந்த மனிதனின் உயரம் ஆறு அடி நான்கு அங்குலம் என்று கணக்கெடுத்தேன்" என்றார். ஒபாமா பில் மெக்ரெவனிடம் கேலியாக, "பில், இவ்வளவு பெரிய தாக்குதலுக்குச் சென்றீர்கள், அளவெடுக்க ஒரு டேப்பைக் கொண்டு செல்ல மறந்துவிட்டீர்கள்!" என்று கூறினார்.

கடலில் அடக்கம் செய்யப்பட்ட லேடனின் உடல்

முன்னரே முடிவு செய்யப்பட்டபடி, ஒசாமா பின்லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. முதலில் உடல் அமெரிக்க போர் கப்பலான கார்ல் வின்சனில் கொண்டு செல்லப்பட்டது. அந்த உடல் ஒரு வெள்ளை துணியில் சுற்றப்பட்டுப் பின்னர் ஒரு கனமான கருப்புப் பையில் போடப்பட்டது.

இதை விவரிக்கும் முன்னாள் சிஐஏ இயக்குநர் லியோன் பனெட்டா தனது சுயசரிதை 'வர்தி ஃபைட்ஸ்' இல், "உடல் கடலில் மூழ்கி இருப்பதை உறுதி செய்வதற்காக 150 கிலோ இரும்புச் சங்கிலிகள் லேடனின் உடல் பையில் வைக்கப்பட்டன." போர்க்கப்பலின் சுவரை ஒட்டிய ஒரு வெள்ளை மேசையில் அந்தப் பை வைக்கப்பட்டது. "

"லேடனின் உடல் வைக்கப்பட்ட பை மிகவும் கனமாக இருந்தது, அது கடலில் விடப்பட்டபோது, தன்னுடன் அந்த மேசையையும் சேர்த்து இழுத்துச் சென்றது. சிறிது நேரத்தில் லேடனின் உடல் கடலின் ஆழத்தில் மூழ்கியது. ஆனால் அந்த வெள்ளை மேசை மூழ்கவில்லை. அது கடலில் மிதந்து கொண்டிருந்தது. " என்று எழுதியுள்ளார். BBC

0 கருத்துரைகள்:

Post a comment