Header Ads



சுவிஸில் கொரோனா தடுப்பூசிக்கு மக்கள், கட்டணம் செலுத்தத் தேவையில்லை - சுகாதார அமைச்சர்


சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் மாநிலங்களின் சுகாதரத்துறை ஒருங்கிணைப்புத் தலைவருடன் ஊடகங்களைச் சந்தித்தார்.

எதிர்வரும் வெள்ளி 18.12.2020 சுவிஸ் தமது புதிய நோய்த்தடுப்பு நடவடிக்கையினை அறிவிக்க உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள நடவடிக்கையினை விடவும் இவை இறுக்கமானதாக அமையலாம் எனும் எதிர்பார்ப்பினை இச்சந்திப்பு உணர்த்தியுள்ளது.

கடந்த வெள்ளி சுவிஸ் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தும் (கொவிட்-19) தொற்றின் விகிதம் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 72 மணிநேரத்திற்குள் சுவிற்சர்லாந்து சுகாதாரத்துறையின் கணக்கெடுப்பின்படி 10,726 ஆட்கள் நோய்த்தொற்றிற்கு ஆளாகி உள்ளார்கள்

கடந்த திங்கள் கிழமையை விட இது அதிகமாகும். கடந்த திங்கள் 9,809 ஆட்களும், அதற்கு முந்திய திங்கள் 8,282 ஆட்களும் நோய்த்தொற்றிற்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

ஊடகங்கள் முன்தோன்றிய சுவிசின் சுகாதார அமைச்சர் அலான் பெர்சே, மக்கள் அரசின் அறிவிப்பினை ஒழுகாதுவிடின் அது சட்டமுரண் மட்டுமல்ல, பெரும் குற்றமும் பொறுப்பில்லாத் தன்மையும் என விமர்சித்தார்.

எதிர்வரும் நாட்களுக்குள் தொற்றின் விகிதத்தினை 0.8 வீதத்திற்குள் குறைப்பதற்கு அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டே கடந்த முறை தனிவகை முடக்கத்தினை அறிவித்திருந்ததென்றும் தெரிவித்தார்.

சுவிற்சர்லாந்து தடுப்பூசி வழங்குவதற்கான இசைவினை சுவிஸ்மெடிக் எனும் எவரது கட்டிற்கும் உட்படாத சுவிசின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பெறவேண்டி உள்ளது.

இது பேரிடர் காலமாக இருந்தாலும் உரிய ஆய்வினை மேற்கொண்டு, தடுப்பூசி முழுமையான பலனை அளிக்கும் எனும் உறுதிப்பாட்டுடன் மட்டுமே மக்களிடம் சென்றடைய அனுமதிக்கும் என்றார் சுகாதார அமைச்சர்.

நடுவனரசு மாநில அரசிடம் தடுப்பூசியைக் கையளிக்கும். தை 2021 முதல் நாம் வீரியம் உள்ள தடுப்பூசியினை இடமுடியும் எனவும் சுகாதார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்தடுப்பூசிக்கு சுவிஸ்வாழ் மக்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இது அரசின் பொறுப்பாகும் என்றார் சுகாதார அமைச்சர் அலான் பெர்சே.

No comments

Powered by Blogger.