Header Ads



முஸ்லிம் மையவாடி விவகாரம் - வவுனியா நகரசபை போர்க்களமானது


வவுனியா - பட்டாணிசூர் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய மையவாடி விவகாரத்தால் வவுனியா நகரசபையின் இன்றைய அமர்வு போர்க்களமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன்,

வவுனியா ,மன்னார் வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய மையவாடியின் ஒரு பகுதியில் மண்மூடி இஸ்லாமிய கலாசார நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அறிகிறோம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சபையின் சட்டரீதியான தீர்மானமின்றி முன்னாள் தலைவர் கனகையாவால் ஒப்பம் இடப்பட்ட உத்தியோகப்பற்றற்ற தனிப்பட்ட ஒப்புதல் கடிதத்தின் பிரகாரம் குறித்த காணியை நீண்ட கால குத்தகைக்கு பெற்று இஸ்லாமிய கலாசார மண்டபம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மயான காணியின் உரிமம் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் நகரசபையின் கீழ் கொண்டு வருவதோடு இஸ்லாமிய சகோதரர்கள் உடல்களை புதைப்பதை மார்க்கமாக கொண்டவர்கள்.

எனவே பெரிய நிலப்பரப்பு மிகவும் அவசியமானது என்பதை கருத்தில் கொண்டு அங்கு எந்த விதமான அபிவிருத்தியையும் மேற்கொள்ளாமல் உடனடியாக நிறுத்தி சட்டவிரோதமாக கொட்டப்பட்ட மண்ணை மீண்டும் அகற்றுமாறு பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார்.

இந்த விடயத்தில் முரணான வகையில் முன்னைய தவிசாளர் நடந்துள்ளார். எனவே இந்த முன்னுதாரணத்தை பயன்படுத்தி சபையின் ஏனைய மயானங்களையும், காணிகளையும் பலரும் கோரினால் சபையால் வழங்கமுடியுமா? எனவே இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதன்போது குறுக்கிட்டு பேசிய உறுப்பினர் அப்துல்பாரி,

அப்படியானால் குறித்த பகுதியில் உள்ள காளி கோவில் அமைந்துள்ள பகுதி தொடர்பிலும் நீங்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

காளிகோவில் இருந்த பகுதியும் மயானம் ஆக்கப்பட வேண்டும். அதற்கு மாத்திரம் சபையில் அனுமதி பெறப்பட்டதா? அதற்கு கீழே தோண்டிப்பாருங்கள் மயானம் தான் இருக்கிறது. அப்படியானால் 6 ஏக்கர் காணியையும் மயானத்திற்கே எடுங்கள் என்றார்.

மற்றைய உறுப்பினர் முகமது லரீப் கருத்து தெரிவித்த போது

குறித்த பகுதியில் இருந்த 6 ஏக்கர் காணியை மூன்றாக பிரித்து காளி கோவிலுக்கும், மையவாடிக்கும், இஸ்லாமிய கலாசார மண்டபத்திற்கும் என பிரிக்கப்பட்டு பிரதசே செயலாளர் ஊடாக முன்னாள் நகரசபை தலைவர் கனகையாவின் அனுமதி பெறப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்கள் முன்னாள் வவுனியா அரச அதிபரும், தற்போதைய ஆளுனருமான எம். சாள்ஸ் தலைமையில் இந்த விடயங்கள் இடம்பெற்றிருந்தது என்றார்.

இதன்போது குறுக்கிட்ட சு.காண்டீபன், மயானங்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். மாறாக கலாசார மண்டபம் அமைப்பதற்காக நகரசபையின் முன்னாள் தவிசாளர் கனகையாவால் வழங்கப்பட்ட முறையற்ற கடிதமே சட்டவிரோதமானது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறே நான் கூறுகிறேன் என்றார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக உறுப்பினர்களான காண்டீபன், மற்றும் லரீப், பாரி ஆகியோருக்கு இடையில் நீண்ட நேரம் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. AS A MUSLIM,SHAME ON THE BLODY MUSLIM POLITICAIN, MAYAANAM SHOULD BE SEPERATE, KINDLY LET THE BODY TO SLEEP IN PEACE DONT DO YOUR POLITICS ON IT

    ReplyDelete

Powered by Blogger.