Header Ads



முன் சில்லு காற்று போனதனால், வாகனம் குளத்தில் பாய்ந்தது - 3 பேர் உயிரிழப்பு காணம் வெளியானது


முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் விபத்தில் உயிரிழந்த 3 பேரினதும் உடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட  வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று நேற்று முந்தினம் (19) மாலை குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. 

வவுனிக்குளம் வான் பாய ஆரம்பித்துள்ள நிலையில் அதனை பார்வையிட செல்வதற்கான மகனின் கோரிக்கையை ஏற்று தந்தையும் (கிருஸ்ணபிள்ளை -ரவீந்திரன் -வயது 38) மகனும் (ரவீந்திரன் -பிரவீன்  -வயது 13) மகளும் (ரவீந்திரன் சார்ஜனா -வயது 3 ) அயல்வீட்டில் வசிக்கும் மகனின் நண்பனும்  (இரவீந்திரகுமார்-சஞ்சீவன் வயது -13 ) நான்கு  பேரும் வவுனிக்குளம் கலிங்கு நோக்கி பயணித்துள்ளனர். 

வீட்டில் இருந்து பயணிக்கும் போது மழை பொழிந்து கொண்டிருந்ததாகவும் வாகனத்தின் சாரதி பக்கமான முன் சில்லு காற்று போனதனால் வாகனம் குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான தாகவும் சம்பவத்தில் உயிர் தப்பி கரை வந்த சிறுவன் ரவீந்திரன் -பிரவீன் தெரிவித்துள்ளார். 

நேற்று முன்தினம் மாலை  வாகனம் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில், வாகனத்தில் பயணம் செய்த குறித்த குடும்பஸ்தரின் மகன்  ரவீந்திரன் -பிரவீன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை   பெற்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், இராணுவத்தினர்  பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது வாகனத்தில் இருந்து இரவீந்திரகுமார்-சஞ்சீவன் சுய நினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்தார் . 

அதனை தொடர்ந்து வாகனத்தை செலுத்தி சென்ற கிருஸ்ணபிள்ளை -ரவீந்திரன் -வயது 38 அவரது மூன்று வயது மகளாக ரவீந்திரன் சார்ஜனா ஆகியோரை தேடும் நடவடிக்கை தொடர்ந்த நிலையில், நேற்று அதிகாலை  1 மணியளவில்  கடற்படையினரின் சுழியோடிகளின் உதவியுடன் அவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். 

இந்நிலையில் மூன்று பெயரினுடைய சடலங்களும் மாங்குளம் வைத்தியசாலையில் இருந்து பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் நேற்று மாலை  வவுனிக்குளம் - செல்வபுரம்- நெல்லுப்புலவு கிராமத்தில் அமைந்துள்ள அவர்களின் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது   

இவர்கள் மூன்று பெயரினுடைய இறுதிக்கிரியைகள் இன்று (21) மாலை  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது 


-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

No comments

Powered by Blogger.