Header Ads



பலஸ்தீனின் சுதந்திரப் போராட்டத்துக்கொரு நீர்த்துளி வார்ப்போம்


- இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் Mp -

இணைத் தலைவர், இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம்

((29-11.2020))  ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது) 

ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 29 ஆம் திகதியை பலஸ்தீன ஒருமைப்பாட்டுத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இனவெறிக்கு எதிரான தென்னாபிரிக்க சுதந்திரப் போராட்டம் தொடர்பில் நவீன ஊடகங்களுடன் ஒன்றித்துப் பார்த்தால் ஐக்கிய நாடுகள் சபை அந்தப் போராட்டத்தின் இறுதி வரை உறுதியான நிலைப்பாட்டில் நின்றிருப்பதை நாம் காண்கிறோம். தென்னாபிரிக்க சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய நெல்சன் மண்டேலா, தமது தாயகத்தின் சுதந்திரப் போராட்டத்தின் வெற்றியின் பின்னர் விடுத்த அறிக்கை எனது நினைவுக்கு வருகிறது. 

“பல ஆண்டுகளாகவே ஐக்கிய நாடுகள் சபை இனவெறிக்கு எதிரான பலமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இதனால் இந்த நியாயமற்ற விடயத்துக்கு முடிவு காண்பதற்கு உலகம் முழுவதும் ஒருமித்த கருத்து காணப்பட்டது. இருந்தாலும் பலஸ்தீன மக்களின் சுதந்திரம் சாத்தியமாகும் தினம் உதயமாகும் வரை நமது சுதந்திரம் முழுமடையாது என்பதை நாம் அறிவோம்.” 

பலஸ்தீன நெருக்கடி ஏன் இன்னும் தீர்க்கப்படவில்லை என்ற கேள்வி மேலோட்டமாகவன்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும். அவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் துன்புறுத்தல்களையும் புரிந்து கொள்ள வேண்டும். சரியான முறையில் விளங்க வேண்டும்.

பலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு தற்போது ஏழு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்டது. நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்குப் பதிலாக அவர்களது தாயகபூமி அவர்களிடமிருந்து மொத்தமாகவே கைவிட்டுச் செல்லும் நிலைமைக்கு காரியங்கள் நடந்தேறி வருகின்றன. நீதிக்கான உலக மக்களின் அபிப்பிராயத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபை எடுக்கின்ற எந்த முடிவுகளையும் வல்லரசுகளின் வீட்டோ அதிகாரத்தின் முன்னால் செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. பலஸ்தீன நெருக்கடிக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக உலக அபிப்பிராயங்களுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத பலவீனமான நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருப்பதை நாம் காண்கிறோம்.

பலஸ்தீன் பிரச்சினைக்கு தீர்வொன்று காண்பதை தனது உயர்ந்த முன்னுரிமையாகக் கொண்டு முழு உலகினதும் எதிர்பார்ப்பை வளர்த்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஒபாமாவின் பிரபல்யமிக்க கெய்ரோ உரை எனது நினைவுக்கு வருகிறது. “தமது சுதந்திரத்துக்கான பயணத்தில் பலஸ்தீனின் முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அனுபவிக்க நேர்ந்துள்ள துன்ப துயரங்களை எம்மால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது. அறுபது வருடங்களுக்கு மேலாக அவர்கள் இருப்பிடங்களை இழந்த வலிகளைத் தாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பாதுகாப்பானதும் அமைதியானதுமான வாழ்க்கையொன்றை நடத்திச் செல்ல முடியாமல் மேற்குக் கரைக்கும் காஸாவுக்கும் அண்மையிலுள்ள நாடுகளின் அகதி முகாம்களில் காலம் வரும் வரை அவர்களில் பெரும்பாலானவர்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் அவர்கள் ஏறக்குறைய அவமானத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறான நிலைமைகளை நாம் காண முடியும். பலஸ்தீனர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் அவர்களால் எந்த வகையிலும் தாங்க முடியாதவை. கௌரவமான வாழ்க்கைக்கும் தமக்கான சுதந்திர நாட்டுக்குமான அவர்களது அபிலாஷைகளிலிருந்து அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்க மாட்டாது.” 

பலஸ்தீன மக்களுக்கு நீதி நிலைநாட்டுவதாக அன்று வழங்கிய வாக்கை நிறைவேற்ற முடியாமல் போன ஜனாதிபதியாக ஒபாமா தற்போது வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். 

ஜனாதிபதி புஷ் ஒருமுறை கேட்ட கேள்வி எனக்கு ஞாபகம் வருகிறது. “ ஏன் அவர்கள் எம்மை வெறுக்கிறார்கள் ? ”

அதற்கு முன்னர் இருந்த அமெரிக்க ஜனாதிபதி அய்ஸன்ஹோவர் அவரது ஊழியர்களுடனான கலந்துரையாடல் ஒன்றின் போதும் இவ்வாறான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்ததாக நான் வாசித்திருக்கிறேன். “அரபுலகம் ஏன் இவ்வாறு எம்மைப் பிழையாகப் பார்க்கிறது ?”

உண்மையிலேயே பிரச்சினை இருப்பது அரபுநாடுகளின் அரசுகளுடனல்ல. அரபுலகத்தின் பொதுமக்களுடனேயே பிரச்சினை இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகம் உதயமாவதற்கும் அந்த மக்களின் முன்னோக்கிய பயணத்துக்கும் தடையேற்படுத்தி ஊழல் மிக்க சர்வாதிகார ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதாகவே அமெரிக்கா மீது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் இந்தக் கொள்கை ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் நாய் என்ற அமெரிக்காவின் வகிபாகத்துக்கு முரணானதாகும். 

பலஸ்தீனின் சமாதானத்துக்காக 1978 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட கேம்ப் டேவிட் ஒப்பந்தம், ஒஸ்லோ உடன்படிக்கை போன்ற அனைத்து முயற்சிகளும் தற்போது இஸ்ரேலினால் சமாதியாக்கப்பட்டுள்ளன. மேற்கை முன்னிறுத்திக் கொண்டுவரப்பட்ட அனைத்து உடன்பாடுகளும் பலஸ்தீன் மக்களுக்கு சுதந்திர நாட்டைப் பெற்றுக் கொடுப்பதை விட இஸ்ரேலின் இருப்பை உறுதிப்படுத்தும் உடன்பாடுகளாகவே இருந்தன என்று சில விமர்சகர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அவற்றைக் கூட இஸ்ரேல் அலட்சியப்படுத்தியிருக்கிறது. 

பலஸ்தீன மக்களுக்கு அரசியல் விடுதலை வழங்கி சம இறைமையுள்ள நாட்டைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான தீர்மானம், 1976 ஜனவரியில் ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் பலத்த அபிப்பிராய ஆதரவுக்கு மத்தியிலேயே நிறைவேற்றப்பட்டது. அதற்காக அரபு நாடுகள், பலஸ்தீன விடுதலை அமைப்புக்கள், ஐரோப்பிய முகாமின் நாடுகள், சோவியத் முகாமின் நாடுகள் போன்ற பல்வேறு பக்கங்களில் இருந்தும் ஆதரவு கிட்டியது. ஆனாலும் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதை வீட்டோ அதிகாரம் உடைய நாடுகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தன. 1981 ஆம் ஆண்டு சவூதி அரேபியா தலைமையில் முன்வைக்கப்பட்ட பஹத் சமாதான முயற்சியையும் இஸ்ரேல் புறக்கணித்தது. 

இப்படிப் பல தசாப்தங்களாக நாம் பலஸ்தீனர்களின் துயரங்களைக் கண்டு வருகிறோம். அவர்களது வீடுகளில் இருந்து அவர்கள் துரத்தப்படுகிறார்கள். பல்வேறு தொந்தரவுகளுக்கும் சித்திரவதைகளுக்கும் அவர்கள் ஆளாகின்றார்கள். அவர்களது விவசாயம், அவர்களது சீவனோபாயம், கல்வி, சுதந்திரமான போக்குவரத்து ஆகியவற்றுக்கு மட்டுமன்றி நீர் போன்ற அடிப்படையான தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மனிதாபிமானமின்றி தடைகள் போடப்படுகின்றன. ஈவிரக்கமின்றி மேற்கொள்ளப்படும் இராணுவத் தாக்குதல்கள், கொலைகள், பெண்களும் சிறுவர்களும் மீதான அநியாயமான கைதுகளையெல்லாம் நாம் காண்கிறோம். 2020 ஆம் ஆண்டு மேற்குக் கரையில் மட்டும் பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான 689 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

2000 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் (ஆதரவாக 14-எதிராக 00) கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இஸ்ரேலிடம் ஜெனீவா உடன்படிக்கைக்கு அமைவாக பலஸ்தீனர்களின் உரிமைகளை மதித்து நடக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அமெரிக்கா இத்தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டது. 

இது தவிர 2001 ஆம் ஆண்டு பலஸ்தீனப் பிரச்சினையின் போது மிசெல் சமாதான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது மற்றும் அங்கு வன்முறையைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்த போது அதனை ஏற்றுக் கொள்ள இஸ்ரேல் மறுத்தது. அமெரிக்காவும் கண்காணிப்பாளர்களை அனுப்புவதை நிறுத்திக் கொண்டது. 

மத்திய கிழக்கு சமாதானத்துக்கான பக்கச்சார்பின்றிய நடுவராகச் செயற்படுவதற்குத் தேவையான நம்பிக்கையை இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அமெரிக்கா இழந்திருப்பது ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் உலகநீதியை மதிப்பவர்களும் அந்தப் பெறுமானங்களுக்குத் தலைமை தாங்கும் நாடாக அமெரிக்கா மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வீணடிக்கச் செய்யும் நிலைமைக்கே இட்டுச் செல்லும். 

ஜனாதிபதி டிரம்பின் கீழ் மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடுகள் கடுமையான ஒருபக்கச் சார்பானதாகவே இருந்தாலும் புதிய ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியொருவரின் தலைமையில் அது மேலும் முன்னேற்றகரமானதாகவும் ஜனநாயகமானதுமான பாதையொன்றில் பயணிக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அது அமெரிக்கா சொந்தமாக்கிக் கொண்டுள்ள ஜனநாயக மரபுகளுக்குத் தலைமை தாங்கும் நாடு என்ற சொரூபம் சிதைவடைவதற்கு இடமிருக்கிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் ஒரு கருத்தைக் கூறி இதனை நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன். 

“இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்குக்கும் சமாதானம் ஏற்பட வேண்டுமென்றால் சர்வதேச சட்டத்துக்கும் சமாதானத்துக்கான பாதைவரைபுக்கும் இஸ்ரேல் உடன்படுவதால் மட்டுமே அது சாத்தியமாகும். ஏற்கனவே அவர்கள் உறுதியளித்துள்ளது போல அவர்களது சட்டரீதியான தேச எல்லைகளுக்கு அவர்கள் உடன்பட்டால் மட்டுமே. அனைத்து அரபுநாடுகளும் இந்த நிபந்தனைகளின் கீழ் அமைதியாக வாழ்வதற்கான இஸ்ரேலின் உரிமைக்கு மதிப்பளிக்க உடன்பட வேண்டும். பலஸ்தீனர்களின் எல்லைக்குள் பலாத்காரமாக நிலங்களைக் கைப்பற்றுவதையும் காலனிமயப்படுத்துவதையும் பொறுமையுடன் பார்த்துக் கொண்டு அமைதியாக அதனை அங்கீகரிப்பதனால் ஐக்கிய அமெரிக்க் குடியரசுக்கு சர்வதேச ரீதியில் இருக்கும் நற்பெயரும் நல்லெண்ணமும் இல்லாமல் போகக் கூடும். அத்தோடு இஸ்ரேலின் செயற்பாடுகளை அனுமதிக்கும் அமெரிக்காவின் இந்த நிலைப்பாடானது அமெரிக்காவுக்கு எதிராக உருவாகியுள்ள சர்வதேச தீவிரவாதத்தை வளரச் செய்வதை இந்தக் கொள்கை மென்மேலும் பலமடையச் செய்யும்.”  

ஜனாதிபதி காட்டரின் இந்தக் கூற்றானது அன்றுபோல் இன்றும் வலிதானதாகவே தெரிகிறது. இப்ராஹீமின் புதல்வர்களாகக் கருதப்படும் யூத கிறிஸ்தவ அரேபியர்களின் இரத்தத்தினால் மத்திய கிழக்கு இன்றும் நனைந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக நடைபெறும் இவ்வாறான கொலைகளுக்கும் இரத்தப் பெருக்குகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். அனைவரும் சமாதானமும் சுதந்திரமும் கௌரவமும் உள்ளவர்களாக புரிந்துணர்வுடன் வாழக் கூடிய சமூகமொன்றுக்காகப் பிரார்த்திப்போம். 


1 comment:

Powered by Blogger.