Header Ads



மகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் - மகனை கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா


- பாறுக் ஷிஹான் -

16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று   மகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக   சுனாமியில் காணாமல் போன மகனை  கண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா என்பவர் தெரிவித்தார்.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று (24) வழக்கு தவணைக்காக சென்ற நிலையில் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக  ஊடகங்களிற்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை  சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி  வழக்கை ஒத்திவைத்தார்.

இன்றைய வழக்கு விசாரணைக்காக ஒரு தரப்பினர் சமூகமளிக்க தவறியதை அடுத்து அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டதுடன் வழக்கு பிற்போடப்பட்டது.

இதன் போது சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சம்மாந்துறை பொலிஸார்  வழங்கிய  அறிக்கையை   அடிப்படையாக கொண்டு விசாரணையை நீதிவான் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது சிறுவனின்  வளர்ப்பு தாய் என உரிமை கோரும் நூறுல் இன்ஷான்  இன்றைய விசாரணைக்காக வருகை தரவில்லை. சுனாமியில் மகனை பறிகொடுத்ததாக தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா  மாத்திரம் இன்று  ஆஜராகி இருந்தார்.

இந்நிலையில் குறித்த  வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஒத்தி வைத்துள்ளார்.


No comments

Powered by Blogger.