Header Ads



கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள், ஏன் திடீரென குறைந்து போனார்கள் என ஆராய வேண்டும் - GMOA


கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு குறைவடைந்துள்ளது என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும். கம்பஹாவை விட கொழும்பில் தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளதால் அங்கு பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடைந்துள்ளதா என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -12- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்காவில் முழு சிறுவர் தொகையில் நூற்றுக்கு 11 சதவீதமான சிறுவர்கள் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் ஆரம்பத்தில் வயதானவர்களே உயிரிழக்கும் நிலை காணப்பட்டது. எனினும் தற்போது 40 ,  50 என்ற மத்திய வயதுகளில் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர். உலகில் காணப்பட்டுகின்ற இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான நிலையில் புதிததாக உருவாகவுள்ள கொத்தணிகள் தொடர்பில் துரிதமாக இனங்காண வேண்டியது அத்தியாவசியமாகும். இதற்கு அபாயமுடைய பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஆரம்பத்தில் ஆபத்துடைய பகுதியாக கம்பஹா மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது கொழும்பிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். புதன்கிழமை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 251 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 234 பேர் கொழும்பு மாநகரசபை சுற்று வட்டாரத்தை அண்மித்தவர்கள். அவ்வாறெனில் தொற்றாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

கம்பஹாவில் எவ்வாறு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது என்பது இனங்காணப்பட வேண்டும். கொழும்பில் அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் அங்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு கம்பஹாவில் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டும்.

நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் 65 சதவீதமானோர் குணமடைந்துள்ளனர். இது சிறந்த நிலைமையாகும். இதனை 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்க வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்களாயின் தற்போது அறவிக்கப்பட்ட மேல் மாகாணத்திலிருந்து வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போன்றதான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியேற்பட்டிருக்காது.

தற்போது தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது தேசிய பொறுப்பாகியுள்ளது.

காரணம் கொரோனா என்பது கண்ணுக்கு புலப்படும் எதிரி என்பதைப் போலவே தொற்றா நோய் கண்ணுக்கு புலப்படாத எதிரியாகும். தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவலின் பாதிப்பையும் கட்டுப்படுத்த முடியும். அத்தோடு ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதும் அத்தியாவசியமானதாகும் என்றார்.

(எம்.மனோசித்ரா)


No comments

Powered by Blogger.