Header Ads



கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வசிப்பவர்களின் கவனத்திற்கு...!


(நா.தனுஜா)

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் தொடர்மாடிக்குடியிருப்புக்களில் வசிப்பவர்களில் நீண்டகால மற்றும் தொற்றாநோய் நிலைமைகளை உடையவர்கள் தமக்கான மருந்துப்பொருட்களை வீடுகளுக்கே வரவழைத்துக்கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.

அவ்வாறான நோயாளர்களுக்குவசகொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு உயர்வாக இருப்பதனால் அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெளிவுபடுத்தியிருக்கிறது.

கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் முவதொர உயன, சிறிமுது உயன, சிறிசந்த செவன, ரன்திய உயன, மெத்சத செவன, மினிஜய செவன, ரன்மித் செவன, சத்ஹிரு செவன, என்.எச்.எஸ் மாளிகாவத்தை ஆகிய தொடர்மாடிக்குடியிருப்புக்களில் வசிப்போர் விசேடமாகக் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் என்று குறிப்பிட்டு சுகாதார அமைச்சினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உயர் இரத்த அழுத்தம், இருதயநோய், நீரிழிவு, வலிப்பு, சிறுநீரகநோய், புற்றுநோய் போன்ற நீண்டகால நோய்நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலகுவாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு உயர்வாக இருப்பதுடன், அதனால் ஏற்படக்கூடிய தாக்கமும் உயர்வாகும்.

அதனால் மேற்படி நோய்நிலைமைகளைக் கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கு தொடர்ந்து தமது நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும். 

எனவே அத்தகைய நீண்டகால அல்லது தொற்றாநோய்களுக்கு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் தமது தொடர்மாடிக்குடியிருப்பிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிக்கு உரிய விபரங்களை வழங்குவதன் ஊடாக மருந்துப்பொருட்களை வீடுகளுக்கே வரவழைத்துக்கொள்ள முடியும்.

தமது பெயர், வயது, முகவரி மற்றும் வழமையாக மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் மருந்தகத்தின் அல்லது வைத்தியசாலையின் பெயர் ஆகியவற்றை மேற்கூறப்பட்டவாறு உரிய பொலிஸ் அதிகாரியிடம் கையளிக்க வேண்டும். அதனூடாக நீண்டகால நோய்நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலிருந்தவாறே தமக்கு அவசியமான மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை மேற்படி தொடர்மாடிக்குடியிருப்புக்களில் வசிப்பவர்களில் எவருக்கேனும் காய்ச்சல், தொண்டை வலி, உடற்சோர்வு, சுவாசப்பிரச்சினை போன்ற அறிகுறிகள் காணப்படுமாக இருந்தால் தமது தொடர்மாடிக்குடியிருப்பிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியிடம் அறிவிக்குமாறும் சுகாதார அமைச்சின் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலதிக தகவல்களை 1999 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்வதன் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.