Header Ads



ஐ.நா.க்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படத் தயார்: பிரதமர்


(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற வகையில் அந்த அமைப்பிற்கு  அவசியமான ஒத்துழைப்பை வழங்குவது இன்றியமையாததாகும். அந்தவகையில் பல்வேறு துறைகள் சார்ந்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படத் தயாராக இருக்கின்றோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் அரசாங்கங்களுக்கு இடையிலான விரிவானதொரு கட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டு இவ்வாண்டுடன் 75 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் உலகலாவிய ரீதியில் தற்போது காணப்படும் சவால்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பில் ஆராயும் வகையில் குழு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும், ஐக்கிய நாடுகள் சபையானது கல்வி, சுகாதாரம், சுற்றாடல், விவசாயம், உணவுப்பாதுகாப்பு உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் சார்ந்து விரிவான ஒத்துழைப்பை வழங்கிவருவதுடன் அதனை பாராட்ட விரும்புகின்றேன்.

அதேபோன்று சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறையுடன் இருக்கும் அதேவேளை, அதற்கு சமாந்தரமாக பெண்கள், வயது முதிர்ந்தோர், விசேட தேவையுடையோர் போன்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன். 

இவ்விடயங்களில் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துடன் ஒன்றிணைந்து பணியாற்ற நாம் தயாராக இருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற வகையில் அதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவது இன்றியமையாததாகும் என்று குறிப்பிட்டார்

No comments

Powered by Blogger.