Header Ads



ரஹ்மான் நானா, இனி செய்தி வாசிக்க வரமாட்டாரு...!


வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர் ஏ.சி. கலீலுர் ரஹ்மானின் ஜனாஸா செய்தியை ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருக்கிறது. நான் ரூபவாஹினியில் இணைவதற்கு முன்பே எனக்கு ரஹ்மான் நானாவின் அறிமுகம் கிடைத்துவிட்டது.   சுமார் பத்துவருட என் ரூபவாஹினி வாழ்கையில் செய்தித் தயாரிப்பாளராகிய எனக்கு, ரஹ்மான் நானா செய்தி வாசிக்க வந்தால் மிக்க மகிழ்ச்சி. அவரோடு இணைந்து நேரடி செய்தி தயாரிப்பை மேற்கொள்வதென்பது மிகவும் இலகுவாக இருக்கும். இரவு 7 மணி பிரதான செய்தி அறிக்கைக்கு மாலை 4.30 க்கே செய்தி அறைக்கு வந்துவிடுவார். அவரும் அவர்பாடும். எவ்வளவு சிரேஷ்டமானவர். அப்படியிருந்தும் செய்தி தொடர்பான விடயங்களை தவிர வேறு எந்தவொரு வார்த்தையும் அவர் வாயிலிருந்து வெளியேவராது. அவர்பாட்டில் செய்திக்கு தயாராகிக்கொண்டு இருப்பார். மும்மொழிகளும் அறிந்தவர். ரூபவாஹினி தமிழ் செய்தி அறிக்கையில் நேரடியாகவே சகல செய்திப் பிரதிகளையும் வாசிக்க வேண்டும். செய்தி ஆரம்பித்த பிறகு எந்த செய்திப் பிரதியை கொண்டு போய் கொடுத்தாலும் எந்தப்பிழையுமின்றி வாசிப்பார் கலீலுர் ரஹ்மான். சில முக்கியமான தினங்களில், அதிகம் விசேட செய்தி அறிக்கைகள் செய்ய வேண்டிவரும் என்று எதிர்பார்க்கும் தினங்களில் நாம் எமது தமிழ் செய்தி அதிகாரியிடம் போய் “சேர்... இன்டக்கி ரஹ்மான் நானாவ செய்தி வாசிக்க போட்டால் நல்லா இரிக்கும்...” என்று சில சந்தர்ப்பங்களில் சொல்வோம். அவர் காத்திரமாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கைதான். 

ஒரு நாள் ரூபவாஹினி தமிழ் செய்தி பிரிவு உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்றின் போது பிரதிப் பணிப்பாளர் யு.எல்.யாக்கூப் அவர்கள் “ரஹ்மான்..... ஒரு பாட்டொன்ட எடுத்துவிடுங்களே....!” என்று பகிடியாக சொன்னதற்கு ரஹ்மான் நானா பாட ஆரம்பித்துவிட்டார். நாம் அனைவரும் முகத்துக்கு முகம் பார்த்துக்கொண்டோம். அசந்துபோனோம். அவரின் பாடும் திறமை அனைவரையும் மகிழ்வித்தது. இனிமையாக பாடினார். பின்னர் அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு கேள்விக்கு மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். 

நாட்டிலுள்ள பிரச்சினைகளை சொல்ல செய்தி தயாரிக்கும் செய்தி அறைக்குள்ளே பல்வேறு கோணங்களில் பல பிரச்சினைகள் அலைமோதிக்கொண்டே இருக்கும். அப்படி இருக்கும் இடத்தில் ரஹ்மான் நானாவுக்கு எந்த பிரச்சினையும் நடந்ததாக நான் அறிந்தளவில் இல்லை. அவ்வளவு ஒரு நல்ல மனிதன். இன்னுமொரு நபரை பற்றி அணுவளவேனும் குறை சொன்னதே இல்லை. அவர் ஒரு சிறந்த அறிவிப்பாளர் மாத்திரமல்ல. அவர் ஒரு பணிவுள்ள, பண்பாடுள்ள, நேர்மையான, அறிவிப்பாளர். அவர் இம்மை வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ்ந்தார் என்பதற்கு நாம் சாட்சி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 

யா ரஹ்மானே.....!

கலீலுர் ரஹ்மானின் மறுமை வாழ்வை

வசந்தமாக்கிடுவாயாக.....!!!

Sdm Zahran

2 comments:

Powered by Blogger.