Header Ads



பிள்ளைகளை வாசிப்பின் மீது ஆர்வமூட்டி, உலக சிறுவர் தின கொண்டாட்டங்களில் இணைந்த ஜனாதிபதி


ஐந்து மாவட்டங்களில் உள்ள ஐந்து பாடசாலைகளுக்கு நூலகங்களை அன்பளிப்புச் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உலக சிறுவர் தின கொண்டாட்டங்களில் இணைந்துகொண்டார்.

அனைத்து பாடசாலைகளுக்கும் நூலகங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளை வழங்குவதன் மூலம்; பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பேண முடியும் என்பதை தான் அண்மையில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது விளங்கிக் கொண்டதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மிகவும் பின்தங்கிய பல பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளின் கோரிக்கையின் பேரில் பல விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றன. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட 25 பாடசாலைகளுக்கு நூலக வசதிகளை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படும் ஒக்டோர் மாதம் 01ஆம் திகதி 'வாசிப்பு மாதமும்' ஆரம்பமாகின்றது. எதிர்கால தலைமுறையை வாசிப்பின் மீது ஆர்வமூட்டும் நடவடிக்கையை உலக சிறுவர் தினத்துடன் இணைந்ததாக ஆரம்பித்து இன்று (01) முற்பகல் 05 பாடசாலைகளின் பிள்ளைகளை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்து ஜனாதிபதி அவர்கள் நூலகங்களை அன்பளிப்பு செய்தார்.

புத்தளம், லுனுவில அநுருத்த மத்திய மகா வித்தியாலயம், கம்பளை தொலஸ்பாகை கணிஷ்ட வித்தியாலயம், தர்மபுரம் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை, குருவிட விஜயகுமாரதுங்க வித்தியாலயம் மற்றும் காலி பிலான வித்யார்தோதய மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு நூலகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாது என ஒதுக்கப்பட்ட பழைய பேருந்து வண்டிகளை புதுப்பித்து பிள்ளைகளை கவரும் வகையில் இந்த நூலகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு முழு நிறைவான நூலகத்திற்காக சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மொபிடெல் நிறவனம் ஈ - நூலக வசதிகளை வழங்கியுள்ளதுடன், அதன் மூலம் மாணவர்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ளவும் ஈ - நூல்களை கற்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

இலங்கை போக்குவரத்து சபை, ஸ்ரீ லங்கா டெலிகொம், மொபிடெல், மனுசத் தெரண மற்றும் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை ஆகியன இந்த நூலக திட்டத்திற்கு அனுசரணை வழங்கியுள்ளன.

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியீட்டாளர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களும் நூலகங்களுக்கு வழங்கப்பட்டன.

பிள்ளைகளுடன் நூல்கள் பற்றிய விபரங்கள் குறித்து கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


No comments

Powered by Blogger.