October 17, 2020

நான் முட்டாள்தனமான, நிலைக்கு வீழ்ச்சியடையவில்லை - மைத்திரிபால


தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு தாம் நியமித்த மலல்கொட குழுவின் அறிக்கையை மாற்ற முடியும் என தாம் கூறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான்காவது நாளாகவும் இன்று -17- சாட்சியமளித்தபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.


உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அவ்வாறு மாற்றும் அளவிற்கு தாம் முட்டாள்தனமான நிலைக்கு வீழ்ச்சியடையவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


குழு நியமிக்கப்படுகையில் அது தொடர்பான விடயங்களை, அபோதைய ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவே முன்னெடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி சாட்சியமளித்துள்ளார்.


இதேவேளை, கடும்போக்குவாதம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த அறிக்கைக்கு அமைய, அதனைத் தடுப்பதற்கு தாம் தேவையான ஆலோசனை மற்றும் உத்தரவை வழங்கியமைக்கான எழுத்து மூல ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான இயலுமை தற்போது இல்லை எனவும், அந்தக் கலந்துரையாடல்களுடன் தொடர்புடைய ஆவணம் ஜனாதிபதி செயலகத்திலுள்ளதாக தாம் ஊகிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையிலும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்ற வகையிலும் நீங்கள் பிறப்பித்த உத்தரவு மற்றும் அறிவுறுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டதா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது வினவினார்.


தாம் உத்தரவிட்டிருந்த போதிலும், கீழ் நிலை பதவிகளிலுள்ள அதிகாரிகள் அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்தவில்லை எனத் தென்பட்டதாக மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்தார்.


அவை நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்து, முறையான தௌிவுபடுத்தல்கள் இடம்பெறவில்லை எனத் தென்படுகின்றதா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது வினவினார்.


அதற்கு,


நான் உரியவாறு அறிவுறுத்தினேன். கீழ் நிலை பதவிகளிலுள்ள அதிகாரிகள் அவற்றை நடைமுறைப்படுத்தாத பிரச்சினையுள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இவ்வாறான நிலைமையை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டிருக்காது


என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார்.


ஜனாதிபதி என்ற வகையில் தமது ஆட்சிக்காலத்தில் நிலவிய நெருக்கடியான அரசியல் சூழலுக்கமைய, உரிய ஆலோசனை கிடைக்காமையால், கடும்போக்குவாதிகளால் குண்டுத் தாக்குதல் நடத்த முடிந்தது எனக் கூறுவது சரியானதா என ஆணைக்குழு வினவியது.


அதற்கு


அப்போது அரசியல் நெருக்கடி காணப்படவில்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் மீண்டும் ஆட்சியை முன்னெடுத்தோம். அரசியல் கருத்து முரண்பாடு காணப்பட்டாலும், அமைச்சு, நிறுவனங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை. அவ்வாறு அழுத்தம் விடுக்கப்பட்டதென நான் நம்பவில்லை. ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை கூடியது. பாதுகாப்பு அமைச்சின் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு குழுக்கள் உள்ளன. இதன்போது கலந்துரையாடப்படும். தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றோம். இங்கு வேறு விடயம் இடம்பெற்றுள்ளது. நான்கு வருடங்களாக, பாதுகாப்புப் பேரவை ஆலோசனை மற்றும் உத்தரவை வழங்கியுள்ளது. நடைமுறைப்படுத்தப்படவில்லை. புலனாய்வுப் பிரிவுகளிடையே, பாரிய புலனாய்வுப் பிரிவு இராணுவத்திலேயே உள்ளது. வடக்கு கிழக்கு கடற்படை புலனாய்வுப் பிரிவு மிகவும் பலமாகக் காணப்பட்டது. எனினும், இதுகுறித்து அந்தப் பிரிவுகளிடமிருந்து அறிக்கையிடப்படவில்லை. மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிகளின் கொலை LTTE-இனரின் வேலை என்ற வகையில் கூறினர். பின்னரே, சஹ்ரானின் குழுவினரிடமிருந்து அந்த அதிகாரிகளின் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.


என முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார்.

1 கருத்துரைகள்:

'கடும்போக்குவாதம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த அறிக்கைக்கு அமைய, அதனைத் தடுப்பதற்கு தாம் தேவையான ஆலோசனை மற்றும் உத்தரவை வழங்கியமைக்கான எழுத்து மூல ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கான இயலுமை தற்போது இல்லை எனவும், அந்தக் கலந்துரையாடல்களுடன் தொடர்புடைய ஆவணம் ஜனாதிபதி செயலகத்திலுள்ளதாக தாம் ஊகிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்' என்ற மைத்திரியின் கருத்து, மிகவும் பாரதூரமானது. நாட்டின் பொறுப்புக்கூறலை எவ்வாறு இலகுவாக இவர் நழுவுகின்றார் என்பதை உலக மக்களே இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய அளவு புத்திசாலியான இவரை முதலில் அங்கொடையில் மனநோய் பரிசோதனைக்கு உற்படுத்த வேண்டும்

Post a comment