Header Ads



"எனது மகள் உயிரோடு, இருப்பதைவிட மரணிப்பதே நல்லது"


 Dr. A.H.M. அஸ்மி ஹசன் MBBS ( SL), MD ( Col),

நான் எனது மேல் படிப்புக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை புரியும் போது நடந்த சம்பவம்

எனது வாட் ரவுன்ட்டில் நோயாளிகளைப்  பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது தொலைபேசி சிணுங்கியது. எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் அவசர சிகிச்சைப்பிரிவிலிருந்து (ETU) வந்த அழைப்பு அது. “ சேர்.. அவசரமாக வாருங்கள். 18 வயதுடைய பெண் ஒருவர் மிக மோசமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்” என மறுமுனையில் வைத்தியர் தெரிவித்தார். 

நானும் “ என்ன பிரச்சினையோ தெரியல்ல, அவசரமா போவம் , வந்து மத்த ஆக்கள பாக்கிரன் “ என சக வைத்தியர்களிடம் சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடினேன். 

ETU க்கு வெளியே பெரிய ஒரு கூட்டம் அழுகையுடனும் கவலை தோய்ந்த முகத்துடனும் நின்று கொண்டிருந்தார்கள். அவசரமாக எல்லோரையும் விலக்கிக் கொண்டு ETU க்கு உள்ளே போனேன். என்னைக் கண்டதும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கான வைத்தியர் என்னிடம் குறித்த நோயாளியைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். 

“ இந்த பெண் பிள்ளைக்கு 18 வயசு, நேத்து இரவு வெளிய போய் வந்த பிறகு கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கிறார். இரவு படுத்த பிள்ளை இன்னும் எழும்பல்ல என்று பெற்றோர் சொல்கிறார்கள். ஹொஸ்பிடலுக்கு வர முதல் பிட்ஸ் ( fits) ஏற்பட்டு கை கால் அடித்ததாகவும் வாயால நுரை வந்ததாகவும் சொன்னார்கள் “ என அவர் தெரிவித்தார். எதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கும் என்ற எண்ணத்துடன் அந்த நோயாளியை பரிசோதிக்க ஆரம்பித்தேன். 

மெலிந்த தோற்றமுடைய , தலைமுடியை பல நிறங்களால் டை ( dye) பண்ணிய , கண் புருவங்களை வெட்டிய மொடர்னான அந்த பெண் முற்றாக உணர்வற்றவராக கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். பெயர் சொல்லும் போதோ, தட்டி எழுப்பும் போதோ எந்த வித அசைவுமில்லாத ஆழ்ந்த உறக்கம் அது. மேலும் மிக உக்கிரமான காய்ச்சல் காய்ந்து கொண்டிருந்தது, அதனோடு சேர்த்து வியர்வையால் உடல் முழுக்க நனைந்து இருந்தது. 105 டிக்ரி பரனைட் டெம்பரேச்சர் டொக்டர் என மிஸ் சொன்னார். பல்ஸ் ரேட் ( இதயத்துடிப்பு) 150 என ஈசிஜி( ECG) மெசின் காட்டிக்கொண்டிருந்தது ( ஒரு  சாதாரண மனிதனின் இதயத்துடிப்பு 60-100 வரை ஓய்வில் இருக்கும் போது மாறுபடலாம்) வயிற்றை பரிசோதிக்கும் போது அடி வயிறு பெரிதாகவும், அந்த இடத்தை தொடும் போது சிறியதொரு முனகல் சத்தமும் கேட்டது. இது யூரினரி ரிடன்சன்( urinary retention- சிறுநீர் வெளியேறாததன் காரணமாக சிறுநீர்ப்பை வீங்கியுள்ளது ) என மிஸ்ஸிடம் கூறி அவசரமாக கதீடரை ( catheter) போடுமாறு கூறினேன். கிட்டத்தட்ட இரண்டு லீட்டருக்கு அதிகமான சிறுநீர் வெளியாகி வயிறு வீக்கம் இலேசாக குறைந்தது. பக்கத்திலிருந்த வைத்தியர் “பல் எல்லாம் கலர் மாறி கறுப்பா இருக்கு, இனாமல் ( enamel) எல்லாம் தேய்ஞ்சு போய் இருக்கு, வாயில நிறைய காயம் இருக்கு, இப்படி மொடர்னான பெண்ணுக்கு 80 வயது கிழவியைப் போல பல் இருப்பது ஏன் “ என கேட்டார். மேலும் அப்பெண்ணின் இடது கையின் மணிக்கட்டுப் பகுதியில் பல கீறல் அடையாளங்களும் காணப்பட்டன. ( இப்படியான அடையாளங்கள் தற்கொலைக்கு முயற்சித்தவர்களின் உடல்களில் காணப்படுவதுண்டு). 

ஆரம்ப கட்ட பரிசோதனைக்குப் பிறகு இந்த பெண், எக்டசி (ecstasy ) என்ற  மாத்திரையை எடுத்திருக்க வேண்டும்  என சக வைத்தியர்களிடம் கூறினேன்.  இந்த மாத்திரை போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்கள் போதையை ஏற்படுத்துவதற்காக பாவிப்பது. இதனால் பல மரணங்கள் ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்துள்ளது. இலங்கையிலும் இதன் பாவனை அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றது. 

இந்த நோயாளிக்கு உடனடியாக சில இரத்த மாதிரிகளை எடுக்குமாறும், காய்ச்சலைக்கட்டுப்படுத்த மருந்துகளை ஆரம்பிக்குமாறும் கூறி ஒக்ஸிஜன், சேலைன் மேலும் சில மருந்துகளை வழங்கி விட்டு பெற்றோர்களை சந்திக்க நகர்ந்தேன். 

கிட்டத்தட்ட 50 வயது மதிக்கத்தக்க நல்ல வசதியான தோற்றமுடைய பெற்றோர்கள். ஆரம்பத்தில் இரண்டு பேரும் தாம் தனியானதொரு கம்பனி வைத்திருப்பதாகவும் பல பேர் அதில் வேலை செய்வதாகவும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். “இவ எங்கிட ஒரே பிள்ளை” என ஆங்கிலத்தில் உரையாடலை தொடர்ந்தார்கள். நல்ல வசதியான குடும்பம், பெற்றோர்கள் இருவரும் நன்கு படித்தவர்கள் என தெளிவாக விளங்கியது. “ என்ன டொக்டர்... எப்படி இருக்கா” என பெரியதொரு பரபரப்பில்லாமல் அந்த பெற்றோர்கள் கேட்டது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

“ சொந்த மகள் , ஒரே பிள்ளை சாகக் கிடக்கா , இவங்களுக்கு முகத்தில் கவலையையே காணவில்லையே” என மனதுக்குள் நினைத்துக் கொண்டு எனது பேச்சைத் தொடர்ந்தேன். “ மோசமான நிலைலதான் இருக்கா, போதைப் பொருள் ஒன்றை எடுத்திருக்கா போல, ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிருக்கோம்” என நான் பதிலளித்தேன். 

“ டொக்டர் இது எங்களுக்கு பெஸ்ட் டைம் இல்ல , நிறைய தரம் இவய கொண்டு வந்திருக்கம், என்ன சொன்னாலும் இவ கேக்க மாட்டா, அவ அப்பிடித்தான், வாணா என்டு போய்ட்டு“  என தந்தை எரிச்சலுடன் கூறினார். “ என்ன நடந்த என்னு தெளிவா சொல்ல ஏலுமா “ என கேட்ட போது, தாய் பேச ஆரம்பித்தார். 

“ இவ எங்கிட ஒரே பிள்ளை என்டதால நல்லா செல்லம் குடுத்து வளர்த்திட்டம், சின்ன வயசில என்ன கேட்டாலும் வாங்கிக் குடுப்பம், எங்க வேணும்னாலும் கூட்டிப் போவம். எங்களுக்கு தொழில்லயும் எந்த பிரச்சினையும் இல்ல, ஆனா நாங்க சொந்த தொழில் செய்றதால கொஞ்சம் பிசி, வீட்டு வேலைக்கு ஆள் வெச்சித்தான் இவய பாத்துட்டம். இவ நல்ல கெட்டிக்காரி, ஸ்கூல்ல எல்லாத்திலயும் பெஸ்ட்தான். இவட டீச்சர்ஸ் கூட எங்கள கூப்பிட்டு இவள நிறைய தரம் பாராட்டி இருக்காக. இவய பத்தி நாங்களும் பெருமையா எல்லார்டயும் பேசிவோம். O/L மட்டும் நல்லாத்தான் படிச்சா, 9A ரிசல்டும் எடுத்தா. ஒரே அவ எங்கிட்ட சொல்ரது,  வீட்ட நான் தனியத்தான் இருக்கன், நீங்க வாரயும் இல்ல, அலுப்பாக( boring) இருக்கு என்டு. என்ன செய்ர நாங்க பிஸ்னஸ்ல பிசி எங்கிரதால  வீட்ட போக நைட் ஆகிடும். அந்த டைம்தான் இவ பெட்மின்டன் ( Bedminton) விளையாட இன்ரஸ்ட்டா இருக்கு, என்ட பிரன்ட்ஸ்சும் போறாக. நானும் போக போறன் என்டா, ஆரம்பத்தில எங்களுக்கு விருப்பமில்லதான். ஆனா இவ அடிக்கடி கேட்டதால நாங்களும் அனுமதிச்சம். இவ தொடர்ச்சியா விளையாட போக ஆரம்பிச்சா, நாள் போக போக கொஞ்சம் கவலையா, எப்பயும் கோவமாவும் இருந்தா. நாங்க நைட்ல லேட் ஆகி வாரதாலயும், அடிக்கடி வெளிநாட்டு ட்ரிப் போனதாலயும் மகளோட பெரிசா கதைக்க கிடைக்கிரல்ல. 

சில நாட்கள்ல எனக்கு தெரிஞ்ச ஒராள் வந்து இவ, பொடியன் ஒராளோட நைட் க்ளப்புக்கு 

போன போது கண்ட என்டார். நான் அத நம்பல்ல என்ட பிள்ளையைப் பத்தி எனக்குத் தெரியும், அவ அப்படி செய்ய மாட்டா, இனி என்கிட்ட இப்படி பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன் “ என அவரிடம் சத்தமிட்டேன். மகள் மேல இருந்த அதீத நம்பிக்கையாளதான் அப்படி சொன்னேன். 

கொஞ்ச நாள் போன பிறகு அவக்கு  படிப்புல விருப்பமே இல்ல, ஒரே எரிச்சலுடன்தான் இருப்பா, நாங்க என்னயும் கேட்டா ஒரே சண்டைதான். அவக்கு நாங்க வேறயா பேங்ல காசு போட்டு கொடுத்து வெச்சிருந்த. பிறகு நாங்க எக்கவண்ட் செக் பண்ணி பார்த்த நேரம் பேங்ல காசு ஒன்டும் இல்ல, எல்லாத்தையும் எடுத்திட்டா, அடிக்கடி காசு கேட்பா. எங்களுக்கும் அதுக்கு பிறகுதான் இவ வித்தியாசமா இருக்கிறது விளங்கிச்சி, அதால ஸ்கூல் பிரன்ஸ்ட கேட்டம், அவகளும் இவ எங்களோட முன்ன மாதிரி இல்ல என்டும், ஸ்கூலுக்கு வந்தா கதைக்க மாட்டா, தூங்கிட்டே இருப்பா என்டும் சொன்னாங்க. 

நாங்க மகள்ட பேசுவம் என்டு போனா கதவை பூட்டிட்டு தூங்குவா. டொக்டர்ட போவம் என்டா எனக்கு என்ன பைத்தியமா என்டு கேட்டு சண்ட பிடிப்பா. எங்களுக்கு என்ன செய்ர என்டு விளங்கல்ல. நாங்க ரெண்டு பேரும் பெட்மின்டன் கிளாசுக்கு போறத்த நிப்பாட்டுவம் என்டு அவட சொன்ன போது, அவ ரூம பூட்டிக்கிட்டு கைய வெட்டிட்டா. அதால ரெத்தம் ஓடி சாகுற நிலைமைக்கு போயிட்டா. கஷ்டப்பட்டு கதவை உடைச்சித்தான் ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு போன. அங்க ரெத்தமெல்லாம் போட்டுத்தான் அவய காப்பாத்தின. அதுல இருந்து நாங்க ஒன்டுமே கேக்கிரல்ல. 

கொஞ்ச நாள் போன பிறகு பல ஆண்களுடன் பழக ஆரம்பிச்சா. நைட் கிளப் பார்ட்டி என்டு போக ஆரம்பிச்சா. நிறைய தடம் ஹொஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருக்கா, குடிக்கிரத்தயே தொழிலா செய்தா. நாங்களும் எவ்வளவு ட்ரை பண்ணிப்பார்த்தோம் ஆனா அவ கேட்கிர மாதிரி இல்ல. எல்லா டொக்டர்மார்டயும் காட்டிப் பார்த்துட்டோம். ஆனா இவ திருந்துர மாதிரி இல்ல. நானும் இவரும் நிறைய நாள் தனிய அழுது இருக்கம். என்ன சொல்லியும் எவ்வளவு அழுதும் ஒரு கணக்கும் இல்ல. இனி பேசினா வீட்ட விட்டு போயிடுவன் என்டா. இவயால நாங்க பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமில்ல. நாங்க என்ன டொக்டர் செய்ர, ஒரே பிள்ளை இப்டி ஆயிட்டு, இவ செத்தாலும் பரவாயில்ல ”  என கவலையுடன் கூறி முடித்தார். ( ஒரு தாய் தனது பிள்ளை செத்தா நல்லம் என்று கூறியது எனக்கு ஆச்சரியமாகவம் புது அனுபவமாகவும் இருந்தாலும் , எந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருப்பார் என தெளிவாகக் காட்டியது) எனினும் தீவிர சிகிச்சைப்பிரிவில் (HDU) வைத்துப்பார்ப்பதாக கூறி அவர்களிடம் இருந்து விடை பெற்றேன். 

ஒரு மணித்தியாலயம் செல்லவில்லை எனது போன் ரிங் செய்தது. மீண்டும் ETU இல் இருந்து என்னை அவசரமாக வருமாறு அழைப்பு. நான் அங்கே போன போது அந்த யுவதியின் இதயம் தாறு மாறாக இயங்குவதாகவும், ECG இல் Ventricular Tachycardia இருப்பதாகவும் உடனடியாக கரண்ட் சொக் ( cardiac defibrillation) கொடுக்கப்போவதாகவும் கூறி உடனடியாக வழங்கப்பட்டது ( இது ectasy போதை மருந்தால் ஏற்படும் உயிரைப் போக்கக் கூடிய மிக மோசமான விளைவாகும்.) அவருடைய ப்ரசர் குறைவடைந்ததால் அதற்குரிய மருந்துகளும் , செயற்கை சுவாசம் வழங்குவதற்கு அதற்குரிய ஏற்பாடுகளும் உடனடியாக செய்யப்பட்டன. பல தடவை கரண்ட் சொக் செய்தும் இதயம் தனது பழைய நிலைமைக்கு வர மறுத்தது. வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்களும் இந்த உயிரை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கில் போராடிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வது இறைவனின் நியதியை மாற்ற முடியுமா , பல மணி நேர போராட்டத்தின் பின் அந்த யுவதி இறந்ததை மருத்துவ குழாம் உறுதி செய்தது. 

எனது மருத்துவ வாழ்நாளில் கண்ட மரணங்களில் மிக மோசமான மரணமாக இது ஒன்றைக் குறிப்பிடலாம். 

எனது அன்பு மாணவச்செல்வங்களே, இளைஞர் யுவதிகளே, போதைப்பொருளுக்கு அடிமையான யாரும் இந்த உலகில் நல்ல நிலைமையை அடைந்ததாகவோ நல்ல பெயர் பெற்றதாகவோ சரித்திரம் இல்லை. எத்தனையோ கழுகுகள் உங்களை இந்த மோசமான பழக்கத்திற்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்படியான மோசமானவர்கள் உங்களை நெருங்கும் போது விலகி ஓடிவிடுங்கள். இல்லாவிட்டால் இந்த கழுகுகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காவு கொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆரம்பத்தில் ஒரு தடவை உள்ளெடுத்துப் பார்ப்போம் என்று ஆசைப்பட்டவர்கள்தான் இன்று மிகப் பெரிய போதை வஸ்து பாவனையாளர்களாக மாறி அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள். இந்த போதைப்பொருளுக்கு அடிமையானால் உங்கள் எதிர்காலம் ஏன் உங்கள் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லை என்பதைத்தான் நான் மேலே சொன்ன  சம்பவம் உணர்த்துகிறது. 

அன்பின் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் நல்லவர்கள்தான், ஆனால் அவர்களை வேட்டையாடுவதற்கு பல பிணந்தின்னி கழுகுகள் அலைந்து கொண்டிருக்கின்றன. உங்களது பிள்ளைகளை கவனமாக அவதானியுங்கள். அவர்களுடன் அன்பாகப்பழகி அவர்களின் மனதில் இடம் பிடியுங்கள். உங்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது உங்களது அரவணைப்பையும் உங்களின் நேரத்தையும்தான், உங்களது காசையோ சொத்தையோ அல்ல. அவர்களை மோசமான விடயங்களில் இருந்து தவிர்ந்து வாழ வழிகாட்டுவது உங்களது தலையாய கடமை என்பதை மறந்து விடாதீர்கள். 

இவ்வாறான மோசமான போதைவஸ்து பாவனைகளில் இருந்து நாமும் நமது குடும்பமும் தவிர்ந்து வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக.

1 comment:

  1. Nlla padippinaiyaana sambawam jzkllh kghr but drugs name paavikkamal irunda innum nalla eekum

    ReplyDelete

Powered by Blogger.