October 29, 2020

3 தசாப்த நிறைவிலும், நிறைவேறாத யாழ் முஸ்லிம்களின் அபிலாஷைகள்


- அஸ்ரப் முஹம்மட் அஸ்லம் -

இலங்கை வரலாற்றில் தமிழ் - முஸ்லிம் மக்கள் இடையேயான உறவில் மிகப்பெரும் விரிசலை ஏற்படுத்திய நிகழ்வான வடக்குமுஸ்லிம் மக்களின் பலவந்தமான வெளிறே;றம் நடைபெற்று இன்றுடன் (30.10.2020) 30 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது, இந்நிகழ்விற்கு எதிராக நாட்டின் நாலாபுரங்களிளும் ஷஷகறுப்பு ஒக்டோபர்|| தினத்தை நினைவு கூறுவதானது இச்சம்பவத்தின் எதிரொலி இன்றும் இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மக்கள் மனதில் நீங்காத பாரிய கீரலை ஏற்படுத்தியுள்ளமைக்கான சான்றாகும். 

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் உடுத்திய உடையுடன் கால் நடையாக ஒரே பகலில் ஓமந்தைக்கு அப்பால் சென்று விட வேண்டும் என கட்டளையிடப்பட்டனர். இவ்வாறு இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை. இதனால் இன்றுவரை இரு இனங்களுகிடையிலான உறவுகள் பாதிப்படைய செய்கின்றமையை காண முடிகிறது. தூர நோக்கு சிந்தனையற்ற தலைமைகளின் நடவடிக்கைகளானது இம்முரண்பாட்டை மேலும் வலுபடுத்துவதாகவே அமைகின்றது. இந்நிலைமை மாற வேண்டும். அல்லது விரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

தொடரும் துயரங்கள்....

வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண்டின் பிற்பகுதியில் வாக்குறுதியளித்திருந்ததோடு அதனைத் தொடர்ந்து 2009ல் யுத்தம் முடிவடைந்தமையை நினைவு கூறும் நிகழ்வொன்றில் 'வடக்கு முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு அவர்களின் வாழிடங்களை விட்டு பலவந்தமாக புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது அதை தடுத்து நிறுத்த யாரும் முன்வரவில்லை. எனினும் இப்போது எமது அரசாங்கமானது பயங்கரவாதத்தினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளமையால் 2010ம் ஆண்டு மே மாதமளவில் முஸ்லிம்களை மீள குடியமர்த்துவதற்கு சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

 ஐநா சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கூட, 1990ம் ஆண்டு நடாத்தப்பட்ட முஸ்லிம் மக்களின் மீதான பலவந்தமான வெளியேற்றம் தொடர்பான குற்றச் செயல்களை ஆராயாமல் விட்டு விட்டது. இதன் காரணமாக தற்போது இழப்பீடு வழங்கும் கொள்கை வடக்கு முஸ்லிம்களின் இழப்பினை எந்த வடிவிலும் தனித்துவமாக அங்கீகரிக்கவில்லை என்பதையே இன்றுவரை காண முடிகின்றது. 

2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட சகோதர இனமான தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது, எனினும் 1990ம் ஆண்டு நிர்க்கதியாக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைளை ஆராய்வாதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்காமையானது அம்மக்கள் மத்தியில் கடும்  ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போதிலும் இழப்பீடுகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை இழந்து நிற்கின்ற வடக்கு முஸ்லிம்கள் தமது சொத்துக்களை மீள கோருவதற்கும் வாழ்வாதாரத்திற்குரிய உதவிகளை பெறுவதற்கும் தற்காலிகமாக வேறு இடங்களில் வாழும் தெரிவை மேற்கொள்வதற்கும் உரிமைகள் அவர்களுக்கு உண்டு என்பதை அரசியல் தலைமைகளும் தமிழ் அரசாங்க அதிகாரிகளும் அங்கீகரிப்பது அவர்களின் கடமையாகும்.

எமது நாட்டில் இடம்பெற்ற இனங்களுக்கிடையிலான போரானது  முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் விளைவித்து இறுதியில் இனப்பிளவுகளையே அறுவடை செய்தது. இதிலும் குறிப்பாக யாழ்,கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் நகர் பகுதியிலேயே அண்மித்து வாழ்ந்தனர். 30 வருடங்களின் பின்னரான சனத்தொகை பெருக்கம் காரணமாக அவர்கள் அனைவரும் மீள சொந்த இடங்களில் குடியமர்தல் என்பது சிரமசாத்தியமானதாகும். தாங்கள் வாழும் இடத்தை தெரிவு செய்யும் உரிமைக்கமைய அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் வாழ்வோர் இறைவனின் உதவியோடும் தற்றுணிவோடும் அங்கு குடியேறிய பூர்வீக குடிமக்களே. அவர்களுக்கு கிடைக்கும் வாழ்வாதாரத்தின் பெரும்பகுதி அவர்களின் சுய உழைப்பினாலும் நலன்விரும்பிகளின் உதவிகளால் கிடைக்கப் பெற்றவையே. அவர்களில் பெரும்பாலானோர் புத்தளத்தில் இன்றும் மிகக் குறைந்த வசதிகளுடனேயே வாழ்கின்றனர். யாழ்ப்பாணமே தெரியாத புத்தளத்தையே தனது தாய் பூமியாக எண்ணும் தலைமுறையினரும் உருவாகியுள்ளனர். 30 வருடங்களுக்கு மேலாக இம்மக்களின் துயர வாழ்க்கை தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. வாழ்வாதாரத்திற்கும் கல்விகற்பதற்கும் பல்கலைக்கழக அனுமதிக்கும் அவர்கள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. செய்வதறியாதவர்களாக இக்கட்டான நிலையில் இன்றும் வாழ்கின்றனர்.  

இன்றைய நிலை...

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ், கிளிநொச்சியில் வாழுகின்ற முஸ்லிம் மக்களும் தமது ஆதரவினை தமிழ் கட்சிகளுக்கும் வழங்கியமை, கடந்த வடமாகாண சபை தேர்தலின் போது தமிழ் கட்சி ஒன்று போனஸ் ஆசனத்தை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியமை, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாநகர முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அங்குள்ள தமிழ் மக்களும் தமது ஆதரவினை வழங்கியமை போன்ற இனஆரோக்கியத்தை பேணும் சூழல் நிலவுகின்ற போதிலும் 'குறிப்பாக யாழ் நகருக்குள்  2 மணித்தியலத்தினுள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியமர்வுக்கு தமிழ் அதிகாரிகள் போதியளவு ஆதரவாக இல்லை' என்கின்ற குற்றச்சாட்டு மிக நீண்ட காலமாக நிலவிவருகின்றது. ஆயிரம் காரணங்கள் இதற்கு சொல்லப்பட்ட போதிலும் அம்மக்களை மனிதாபிமானத்தோடு அணுகி, அரவணைத்துக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 'கல்விக்கும், பொருளாதாரத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வாழ்விற்கும் தம்மாலான பங்களிப்பினை வழங்கிய முஸ்லிம்கள் யாழ் மண்ணின் தொன்மையான பூர்வீக குடிமக்கள் என்பதை இளைய தமிழ் தலைமுறையினருக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட வேண்டும். யாழ் முஸ்லிம்கள் தாம் இழந்து போனவற்றையே மீளப் பெற முயற்சிக்கின்றார்களே தவிர அவை ஆக்கிரமிப்புக்கான முயற்சிகள் அல்ல என்கின்ற உண்மை நிலையை எடுத்துரைக்கப்படுதல் வேண்டும்.

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லிம்கள் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைள் எதுவும் போதுமானதாகவோ பொருத்தமானவையாகவோ இருக்கவில்லை என்பதே எமது கவலையாகும்.  எனவே இவர்களை மீள்குடியமர்த்துவதிலும் இழப்பீடுகளை வழங்குவதிலுமுள்ள சிக்கல்களை இனங்கண்டு பாதிப்புக்குள்ளான மக்களுடனும் வடக்கு மாகாண சபை உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி அவற்றிற்குரிய விசேட பொறிமுறையினை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினூடாக செயற்படுத்துவதன் மூலமே இம்மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினை பெறமுடியும். அதே வேளை வாக்கு வங்கிகளைப் பற்றி சிந்திக்காத அரச தலைமைகளினாலும் அர்ப்பணிப்புடனான அரச அலுவலர்களினாலுமே இக்கருமங்களை சாதித்து இம்மக்களின் கண்ணீரை துடைக்க முடியும் என்பதே நிதர்சனமாகும். 

1 கருத்துரைகள்:

1990ல் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதாகக் கூறிய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்னும் உயிருடனும் பிரதமர் பதவியிலும் இருப்பதனால், இச்சந்தர்ப்பத்தை விரைவாகவும் சரியான முறையிலும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிமன்றங்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

30 வருடங்களின் பின் உருவாகி இருக்கும் சனப்பெருக்கத்திற்கான தீர்வாக, வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீக நிலத்தில் தொடர் மாடிவீடுகள் கட்டியோ,  அல்லது அவர்கள் விரும்பியவாறு அரச காணிகளிலோ அவர்களின் தலைமுறையினரும் வாழ்விடங்களைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யலாம்.

தம் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாட்டோடு இருக்க வேண்டிய அரசு, யுத்த காலத்தில் நிர்ப்பந்த நிலையில் அதனைச் செய்ய முடியாதிருந்த போதிலும், யுத்தம் முடிந்து சமாதான காலமாகிய இப்போது, அவர்கள் மீது நீதி செலுத்த வேண்டிய பொறுப்பிலேயே இன்னும் இருக்கின்றது.

தவிரவும், நாடு பிரிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து நாட்டுக்கு விசுவாசமாக அவர்கள் நடந்ததின் காரணமாகவே இவ்வாறு  வெளியேற்றப் பட்டுள்ளார்கள் என்பதனால் அரசுக்கான தார்மீகப் பொறுப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது. 

இந்தக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தி ஒப்புதல் பெற்றுக்கொள்வதற்காக  பாராளுமன்றத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.  வெற்றி பெறும் வரை விடப்படக் கூடாத உரிமைகள் இவை.  சம்பந்தப்படுவோர்கள் விரைவாக இயங்குவார்களாக.

Post a Comment