October 25, 2020

கறுப்பு ஒக்டோபர்: 30 வருடங்களாக நீதி மறுக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள்


– P.M. முஜீபுர் ரஹ்மான் -

வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகி இம்மாதத்துடன் 30 வருடங்களாகின்றன. இக்கரிய இனச்சுத்திகரிப்பு நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் 1990 ஒக்டோபர் மாத இறுதி வாரத்தில் நிகழ்த்தப்பட்டது. உடுத்திய உடையுடன், கைச்செலவுக்காக 500 ரூபாய்களை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இச் செயல் இம்மக்களின் வாழ்வை பாரிய பின்னடைவுக்கு இட்டுச் சென்றுள்ளதாக இம்மக்கள் உணர்கின்றனர்.

வரலாற்றுக் காலம் முதல் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வாழ்ந்த சுமார் 75000 முஸ்லிம்களை தங்களது தாயக பூமியை விட்டு 24 மணித்தியாலத்திற்குள் (சில பிரதேசங்களுக்கு 2 மணித்தியாலங்கள்) வெளியேறுமாறு பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர். நகைகள், ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மேலதிக பணங்களை பள்ளிவாசல்கள் மற்றும் பொது மைதானத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுமாறு அவர்கள் அறிவித்தனர்.

இக்குறுகிய கால பலவந்த வெளியேற்ற அறிவித்தலால் செய்வதறியாது திகைத்த, வடமாகாண முஸ்லிம்கள் என்ன செய்வது, எங்கு செல்வது, எவ்வாறு செல்வது என்ற எந்தத் திட்டமுமின்றி நிலை குலைந்து நின்றனர். மேலும், அது தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைக் காலம் என்பதால் பல அசௌகரியங்களுக்கும் அவர்கள் உள்ளாகினர். இறுதியில் அப்போதைய அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியை அவர்கள் கோரினர். ஆனால், முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் செவிசாய்க்க மறுத்து விட்டனர்.

அதேநேரம் கடும் காற்றும் மழையும் காரணமாக யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்தது. மறுபுறம் விடுதலைப் புலிகள் ஆயுதமுனையில் உடனடியாக வெளியேறுமாறு கூறுகின்றனர். எங்கு செல்வது, என்ன செய்வது என அறியாது திகைத்து நின்ற இம்மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலினால், இறைவனே பாதுகாவலன் என அவன்மேல் பாரம்சாட்டிவிட்டு கடலில் குதித்தனர். இறைவனின் உதவியால் ஒரு வழியாக கல்பிட்டி மற்றும் புத்தளப் பிரதேசத்தை சென்றடைந்தனர்.

இம்முஸ்லிம்கள் கல்பிட்டி மற்றும் புத்தளத்தை அடைந்ததும் அங்குள்ள மக்கள், தங்களிடம் இருந்தவற்றை கொடுத்து உபசரித்தார்கள். ஆனால், அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இம்மக்களுக்கான உடனடித் தேவைகள் எதனையும் செய்யவில்லை.. மேலும், 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலம் வரை இம்மக்கள் அப்பிரதேசங்களிலுள்ள தனிநபர்களின் காணிகளில் அகதி முகாம்களில் இருந்தனர். அங்கு தென்னை மர ஓலைகளால் தங்களுக்கான கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்தனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அகதி முகாம்களில் வாழ்ந்த வடமாகாண முஸ்லிம்களின் வாழ்வியல் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பலர் கல்வியை இழந்துள்ளார்கள். சிலர் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாலிபத்தை அகதி முகாம்களிலேயே சீரழித்துள்ளனர். ஒருசிலர் முன்னேறிய வரலாறும் உண்டு.

இவ்வாறு 2009 ஆம் ஆண்டு யுத்தம் வெற்றி கொள்ளப்படும்வரை அகதி முகாம்களிலேயே இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் மிகுந்த ஆர்வத்தோடு, மீண்டும் தமது சொந்த தாயக பூமியை நோக்கி மீள்குடியேறி வருவதாக தெரிவித்தனர்.

கொரோனாவும் வடக்கு முஸ்லிம்களின் வாக்குரிமையும்

அண்மையில் உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வடமாகாண முஸ்லிம்களையும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டது. மேலும், அவர்களின் பிரஜா உரிமையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. கொரோனாவின் போது முழு நாட்டுக்குமான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டன. போன போனவர்கள் அந்தந்த இடங்களில், உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தனர்.

இக் காலத்தில் அரசாங்கம் சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாயை வழங்கியது. இதில் வடமாகாணத்தில் பதிவிலுள்ள சிலர் புத்தளம் சென்று இருந்தனர். புத்தளம் கொரோனா பாதிப்பு எனக்கூறி சுமார் 2 மாதங்களாக முடக்கப்பட்டிருந்தது. அவ்வாறு புத்தளத்தில் முடக்கப்பட்டிருந்த வடமாகாண முஸ்லிம்களுக்கு அரசாங்கம் (வடமாகாண நிருவாகம்) பரிதாபப்பட்டு புத்தளம் சென்று 5000 ரூபாய்களை வழங்கியது. (இம்மனித நேய செயற்பாடு நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.)

அகதி முகாம்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற இம்மக்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 2 மாதங்களாக முடக்கப்பட்டு இருக்கின்றபோது, அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பதாக அறிவித்ததும், இம் மக்கள் உடனடியாக தங்களது பெயர்களையும் பதிவு செய்துள்ளனர். இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திய வடமாகாண நிருவாகம் அவர்களின் பெயர்ப் பட்டியலை பெற்றுக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு கொத்தணி வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாக அறிவித்தது. அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 30 வருடங்களாக செய்வதறியாது வாழ்வை இழந்து தவிக்கின்ற வடமாகாண முஸ்லிம்கள் கொத்தணி வாக்களிப்புக்காக தங்களது பெயர்களையும் பதிவு செய்துள்ளனர்.இதனைப் பயன்படுத்தி கொத்தணி நிலையங்களில் வாக்களித்த, வடமாகாண முஸ்லிம்களில் சுமார் 6000 இற்கும் அதிகமான முஸ்லிம்களின் வாக்குகளை இப்போது வடமாகாண நிருவாகம் பதிய மறுக்கின்றது. இது அவர்களின் ஒட்டுமொத்த உரிமையையும், வாக்குரிமையையும் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகவே இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் மிக அழகாக எடுத்துக் கூறுகையில் “நான் கொழும்பில் வாழ்கிறேன். எனது பிள்ளைகள் கொழும்பில் படிக்கிறார்கள். ஆனால், நான் மன்னார், தாராபுரத்தில் வாக்குப் பதிவினை வைத்துள்ளேன். அங்கேயே வாக்களிக்கின்றேன். அப்படியாயின் ஏன் இம்மக்களுக்கு வாக்குரிமை வழங்க மறுக்கப்படுகிறது ? என கேள்வி எழுப்பினார்.

வடமாகாண நிருவாகம் கூறுவதுபோல் இருந்தால், அரசாங்கம் எதற்காக தபால் மூல வாக்குகளை வைத்துள்ளது என்ற கேள்வியை இம்மக்கள் எழுப்புகின்றனர். ஏனெனில், தபால் மூல வாக்கு என்பது தொழில் நிமித்தம் நாட்டின் ஏனைய பாகங்களில் வாழ்பவர்கள், தங்களது வாக்குரிமையை தனது சொந்த பிரதேசத்தில் செலுத்துவதற்காகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு இச்சட்ட ஒழுங்கு செல்லுபடியற்றதா என்று நோக்கும் அளவுக்கு இங்குள்ள நிருவாகம் செயற்படுவதை உணரக் கூடியதாக இருக்கின்றது என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும், வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தைத் தவிர வேறு எங்கும் தொழில் நிமித்தமோ, வேறு வியாபார காரணங்களுக்காகவோ நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழ முடியாதா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment