Header Ads



கொழும்பில் யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு..? வெளியாகியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள்


இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக கொழும்பு நகரில் யாசகம் பெறுவதை பலரும் தொழிலாக கொண்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற பிபிசி தமிழ் கொழும்பின் பிரதான வர்த்தக பகுதிகளான செட்டியார் தெரு மற்றும் மெயின் வீதி ஆகிய பகுதிகளை ஆராய்ந்தது.

ஆண்கள், பெண்கள் மாத்திரமன்றி, சிறார்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதை அங்கு காண முடிகின்றது.

செட்டியார் தெரு பகுதியில் சுமார் 1500ற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.

இங்குள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பிச்சைக்காரர்களுக்கு வழங்குவதற்காக நாளொன்றுக்கு சுமார் 300 ரூபா முதல் 500 ரூபாய் வரை 2 ரூபாய் நாணயங்களாக மாற்றி வைப்பதை வழக்கான ஒரு விடயமாக அவர்கள் செய்கின்றனர்.

வர்த்தக நிலையங்கள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது முதல் பிச்சைக்காரர்கள், இந்த பகுதியிலுள்ள சுமார் 1500ற்கும் அதிகமான வர்த்தக நிலையங்களுக்கு சென்று யாசகத்தை பெறுகின்றனர்.

’ஆயிரக்கணக்கில் வருமானம்’

ஒரு பிச்சைக்காரருக்கு, ஒரு வர்த்தக சுமார் 2 ரூபாய் வழங்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

1500 வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு வர்த்தக நிலையத்தில் தலா 2 ரூபாய் வழங்கப்படுகின்றது என்றால், செட்டியார் தெரு பகுதியில் மாத்திரம் சுமார் 3000 ரூபா வரை அவர்களுக்கு கிடைக்கிறது.

இதையடுத்து, குறித்த பிச்சைக்காரர்கள் மெயின் வீதியை நோக்கி செல்கின்றனர்.

அங்கும் ஒரு பிச்சைக்காரருக்கு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றது.

அங்கும் சுமார் 2000திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.

இந்த பகுதிகள் மாத்திரமன்றி, டேம் வீதி, கதிரேசன் வீதி, புறக்கோட்டை பகுதி என அனைத்து பகுதிகளுக்கும் இந்த பிச்சைக்காரர்கள் சென்று யாசகத்தை பெறுகின்றனர்.

அவ்வாறென்றால், கொழும்பு புறக்கோட்டை பகுதியில் யாசகம் பெறும் ஒரு நபர், நாளொன்றிற்கு சுமார் 5000 ரூபாவிற்கும் அதிகமாக உழைப்பதை காண முடிந்தது.

குறிப்பாக வெள்ளிகிழமை நாளிலேயே வர்த்தகர்கள், யாசகம் கோருபவர்களுக்கு அதிகளவிலாக யாசகத்தை வழங்குகின்றனர்.

’தொழிலாக மாறி வருகிறது’

இந்து மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் செறிந்து வர்த்தகம் செய்யும் புறக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை புனித நாள் என்பதை கருத்தில் கொண்டு, யாசகத்தை பெறுவதற்காக அன்றைய தினம் அதிகளவில் யாசகம் பெறுபவர்கள் வருகைத் தருகின்றனர்.

வெள்ளிகிழமை நாளில் யாசகம் பெற வரும் பிச்சைக்காரருக்கு, குறித்த வர்த்தகர்களும் பணத்தை வழங்குவதை வழக்கமான விடயமாக கொண்டுள்ளனர்.

சில இடங்களில் யாசகர்களுக்கு உணவு வழங்குவதையும் காண முடிகின்றது.

இந்த நிலையில், ஏனைய நாட்களை விடவும் வெள்ளிகிழமை நாளில் யாசகம் பெறும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த பகுதியிலுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிச்சைக்காரர்களுக்காகவே நாளொன்றிற்கு ஒரு தொகை பணத்தை ஒதுக்கி வைக்கும் செயற்பாடு வழக்கமான விடயமாகவுள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை விடவும் அதிகளவிலான வருமானத்தை, பிச்சைக்காரர்கள் பெற்று வருவதாக புறக்கோட்டை பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பலர் தற்போது இதனை ஒரு தொழிலாக செய்ய ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது எனவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து பிபிசி தமிழ், ராணுவ தளபதியிடம் வினவியப் போது, பிச்சைக்காரர்களின் பிரச்சனை சமூக பிரச்சனையாக மாறுமாக இருந்தால், தாம் அந்த விடயம் குறித்து அவதானம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

பிச்சைக்காரர்களின் பிரச்சனை தொடர்பில் ஆராய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இலங்கை முஸ்லிம்களின் சொல் வழக்கில் "பிச்சை எடுத்தல்" என்பதற்குப் பதிலாக "நன்கொடை (ஹதியா) பெறல்" என்ற சொல்லாடலே அதிகம் புழக்கத்தில் இருக்கின்றது. முஸ்லிம்கள் நன்கொடை கேட்பவரகள் யாராக இருந்தாலும் எந்த சாதி சமயமாக இருந்தாலும் தேவையுள்ளவரகளுக்கு மிகுந்த சந்தோஷத்துடன் தம்மாலான உதவிகளைச் செய்வதனை பரவலாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

    "பிச்சை எடுத்தல்" அல்லது நன்கொடை கோரிச் செல்லுதல்" என்பது தற்காலத்தில் கொழும்பு நகர்ப்புறத்தில் மாத்திரமன்றி சகல நகரங்களிலும் எந்தவித வேறுபாடுமின்றி நடைபெற்றுவருவதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இவரகளும் யாரையும் disturb பண்ணுவதில்லை. மற்றவரகளும் இவரகளால் பாதிப்பு அடைவதுமில்லை. இவரகளுல் பாமரர்கள் மற்றும் உண்மையிலேயே மிகவும் கஷ்டப்படுவபர்களைவிட பெரும் பணக்காரர்கள் மற்றும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் இதனுள் உள்ளடங்குவர். அவரகளிடமும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பின்னால் சொல்லப்பட்டவரகள் பிச்சைக்காக அலைவதில்லை. "கேட்டுப் பெறுதல்" என்பதுதான் அவரகளது கொள்கை. எங்களுடைய மொழியில் சொல்லப்போனால் "முஸ்பாத்தி" க்காக இந்தத் தொழிலைச்' செய்கின்றவர்களும் பலர் இருக்கின்றார்கள். தாங்கள் பெற்ற "பிச்சை"யுடன் பல்மடங்கு தங்களுடைய பணத்தையும் போட்டு தேவையானவரகளுக்கு உதவுகின்றனர். எல்லா மதத்தினரும் எல்லா தரங்களிலும் உள்ளவரகள் இதில் அடங்குகின்றனர். சாதாரணமாக இவரகளைக் கண்டுபிடிப்பதே மிகவும் கஷ்டம். இவரகளால் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. "பிச்சை எடுத்தல்" அவரகளுக்கு பெரும் மகிழ்வை அளிக்கின்றது. அவரகளுடைய locality யில் மிகவும் மரியாதைக்குரியவர்கள். மிகவும் இனிமையாகப் பல மொழிகளில் பேசும் திறனுடையவரகள். சமூகத்தில் பெரும் பெரும் அந்தஸ்த்தில் (Status) உள்ளவர்கள். இவரகளது முகத்தையும் தோற்றத்தையும் பார்த்தாலே அசந்து போய்விடுவார்கள். ஆடைகள் கிழிந்ததாக பழையனவாக காணப்படும். ஆனால் மிகவும் சுத்தமானதாக இருக்கும். இவற்றைப் பற்றி எல்லாம் எவ்வளவோ எழுதலாம் ஏற்கனவே Jaffna Muslim Comment பகுதியில் குற்ப்பிட்டும் இருக்கின்றேன்.

    ReplyDelete
  2. எங்கட ஊரிலும் ஹதியா கேட்டு பலரும் வருவார்கள். கொழும்பு கண்டி மாதிரி ஒரு ரூபா இரண்டு ரூபா எல்லாம் அவரகளுக்குக் கொடுத்தால் திருப்பி முகத்தில் எறிந்துவிட்டுப் போய்விடுவார்கள் ஆகக்குறைந்தது 20 ரூபா கொடுக்க வேண்டும். (ஊர் ரொம்பக் கெட்டுப் போச்சுங்க)

    ReplyDelete

Powered by Blogger.