Header Ads



வரலாற்றில் இது, முதல் தடவை


இலங்கையில் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.


கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள சோகா மல்லி என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர, இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.


கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் நடந்த கொலை சம்பவம் ஒன்று தொடர்பாக இரத்தினபுரி மேல் நீதிமன்றம் அண்மையில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.


இதனையடுத்து வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்க நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்வதற்கு சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி மறுத்திருந்தது.


இதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றை ஜயசேகர தாக்கல் செய்திருந்ததுடன் அதனை விசாரித்த நீதிமன்றம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


இதனையடுத்து இன்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு நாடாளுமன்றத்திற்கு வந்த பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.


இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு இராணுவ நீதிமன்றத்தினால் 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு சத்தியப் பிரமாணம் செய்திருந்த நிலையிலும் அவருக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.


எனினும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக இன்று உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.