Header Ads



சர்வதிகாரமாக செயற்பட வேண்டாம் - சபாநாயகருக்கு அனுரகுமார அறிவுரை


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )


தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டுவந்த நிலையியற் கட்டளை 27/2இன் கீழான விசேட கூற்றை சபாநாயகர் சபையில் நிராகரித்ததால் சபையில் கடும் சர்ச்சை எழுந்தது. 


சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் நடத்த, சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்தி சர்வாதிகாரியாக நடந்துகொள்கின்றார் என எதிர்க்கட்சிகள் சபையில் சீறிப்பாய்ந்தனர்.


பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிந்த பின்னர் கட்சி தலைவர் கொண்டுவரும் 27/2 இன் கீழான விசேட கூற்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார். 


அதனை தொடர்ந்து சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை சபையில் முன்வைத்தார். இதில் " கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி தலைவர் என்ற ரீதியில் சபையில் முன்வைத்துள்ள நிலையியல் கட்டளை 27/2 கீழ் விசேட கூற்றை என்னால் அனுமதிக்க முடியாது என்பதை அறிவிக்கிறேன். ஏனென்றால் இதில் மூன்றாம் பந்தியில் சில வாக்கியங்கள் நீதிமன்ற வழக்குடன்  தொடர்புபட்ட காரணிகள் என்பதனால் நிலையியல் கட்டளை 36 (எப்)இற்கு அமைய என்னால் இதனை சபையில் வாசிக்க அனுமதிக்க முடியாது. 


அதுமட்டுமல்ல பாராளுமன்ற நடைமுறை நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சகல கட்சி தலைவர்களும்   நிலையியல் கட்டளை 27/2 இற்கு அமைய  ஒரு நாளில் ஒரேயொரு சமூக, அவசரகால அல்லது முக்கியத்துவம் என கருதும் கேள்வியை மாத்திரமே கொண்டுவர முடியும் என்ற வரையறையும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்ற அறிவிப்பை அறியத்தருகின்றேன்" என்ற அறிவித்தலை விடுத்தார்.


இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தேசிய மக்கள் சக்தி ( ஜே.வி.பி) யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நீங்கள் விடுத்த அறிவிப்பு தொடர்பில் எமக்கு உடன்பாடுகள் இல்லை. நாம் நீண்ட காலமாக பாராளுமன்ற பிரதிநிதயாக கடமையாற்றியுள்ளோம். கட்சி தலைவர் ஒருவருக்கு விசேட கேள்விகளை எழுப்பும் வாய்ப்பு இதுவரை காலமாக நடைமுறையில் இருந்துள்ளது. சபையில் இருக்கும் பிரதமரும் இதனை ஏற்றுக்கொள்வார். குறிப்பாக நிலையியற்கட்டளைக்கு அமைய இந்த உரிமை கட்சி தலைவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் எமக்குள்ள இந்த உரிமையை எம்முடன் எந்தவித கலந்துரையாடலும் இல்லாது, குறைந்த பட்சம் கட்சி தலைவர்களுடன் கூட பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எந்தவொரு செயற்படும் இல்லாது தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளதை அடுத்து எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். ஆளும் கட்சியினர் வலது பக்கம் அமர்ந்துள்ளனர், எதிர்க்கட்சியினர் இடதுபக்கம் அமர்கின்றனர். சபாநாயகர் ஆசனம் இரண்டு தரப்பிற்கும் நடுவில் உள்ளது. ஆனால் சபாநாயகர் நீங்களோ வலது பக்கம் சாய்ந்தே அமர்ந்துள்ளீர்கள். இந்த கலாசாரத்தை நீங்கள் நிறுத்துங்கள். கட்சி தலைவர் ஒருவருக்கு உள்ள உரிமையை நீங்கள் தட்டிப்பறிக்க வேண்டாம். ஒன்பதாவது பாராளுமன்றம் கூடி மூன்று அமர்வுகள் முடிந்துள்ளது, இதுவரையில் நான் 27/2 இன் கீழ் கேள்விகள் எதனையும் எழுப்பவில்லை. அவ்வாறு கேள்வி எழுப்பவில்லை என்பதற்காக எனக்கு அந்த உரிமை இல்லை என்று அர்த்தப்படாது. நாம் கேட்காது இருப்பது என்பதும் எமக்குள்ள உரிமை என்பதும் வெவ்வேறு காரணிகள். எனவே கட்சி தலைவர்களிடம் இது குறித்து தெரிவிக்காது சர்வாதிகாரமாக செயற்பட வேண்டாம். நாளை கட்சி தலைவர் கூட்டத்தில் இது குறித்து பேசலாம் என கூறினார்.

No comments

Powered by Blogger.